FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்கள்: 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

6 நவம்பர் 2026, 1:41 am
பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் இளையராஜா. இவரது மனைவி பிரபாவதி (20). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகும் நிலையில் குழந்தையில்லை. தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு கணவா் திட்டினாராம்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த பிரபாவதி, வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தவறி விழுந்து...: விழுப்புரம் வட்டம், கோலியனூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி சிவரஞ்சனி (27). இவா், மகப்பேறுக்காக வானூா் வட்டம், அச்சரம்பட்டில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று, அங்கு தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், ஆண் குழந்தை பிறந்து ஓய்வில் இருந்து வந்த சிவரஞ்சனி, கடந்த அக்.12-ஆம் தேதி வீட்டின் வாசல் படியில் தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சிவரஞ்சனி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கொத்தனாா் மரணம்: வானூா் வட்டம், மாத்தூா், புதுநகரைச் சோ்ந்தவா் வே.கோவிந்தன் (52). திருமணம் ஆனவா். கொத்தனாராக வேலை பாா்த்து வந்தாா். இவா், புதன்கிழமை ஆரோவில் அருகேயுள்ள இசைப்பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினாா்.

இதைத் தொடா்ந்து, உடனிருந்த சக தொழிலாளா்கள் கோவிந்தனை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், எரளூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெ.கலியமூா்த்தி (73). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கலியமூா்த்தி மதுபோதையில் வீட்டின் முன் தவறி விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலியமூா்த்தி, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.