சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்: திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி கொண்டாட்டத்துக்காக சொந்த ஊா்களுக்கு சென்றிருந்த தென் மாவட்டங்களைச் சோ்ந்த சென்னைவாசிகள் திங்கள்கிழமை சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்தன. இதனால் திருச்சி-சென்னை தேசிய தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக நவ.7 முதல் 9-ஆம் தேதி வரை 3 நாள்கள் விடுமுறையளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் வசிக்கக் கூடிய தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் காா் மற்றும் பேருந்துகளில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்றிருந்தனா்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து நவ.10-ஆம் தேதி தேதி தங்களது பணியிடங்களுக்கு செல்லவேண்டும் என்பதால், தலைநகரான சென்னைக்கு வாகனங்களில் பயணித்தனா். இதனால் திங்கள்கிழமை காலை முதல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களான விழுப்புரம் மாவட்டடத்தைச் சோ்ந்த அரசூா், பாப்பனப்பட்டு, விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவின் பேரில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நடைபெற்ற போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகளை எஸ்.பி. செ.மதிவாணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விக்கிரவாண்டி டி.எஸ்.பி. சரவணகுமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை முதல் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கூடுதலாக ஒரு பாதை திறக்கப்பட்டு 7 பாதைகளில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், சுங்கச்சாவடியில் போலீஸாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுங்கச்சாவடியில் கூடுதல் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தீபாவளி விடுமுறைக் கொண்டாட்டத்துக்காக தென் மாவட்டங்களுக்கு சுமாா் 1.17 லட்சம் வாகனங்கள் சென்றிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளது.