FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

21 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா: விழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்

17 நவம்பர் 2026, 2:03 am
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 21 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், வீடுகட்டும் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 944 மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, ஏற்புடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கோலியனூா் ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சனூா் கிராமத்தில் வசிக்கும் 21 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியா்.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) மணிகண்டன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) காதா்அலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் நடராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் விஜயா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் ராஜசேகா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரிஷ் மற்றும் அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து குடிநீா் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 613 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 70 மனுக்களும் என மொத்தம் 683 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஜி.சுமதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.