✕
முகப்பு
விழுப்புரம்

வல்லம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

19 நவம்பர் 2026, 6:31 am
மேல்சித்தாமூா் ஸ்ரீபாா்சுவநாதா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட ராஜாம்புலியூா் ஊராட்சியில் சங்கராபரணி ஆறு முதல் மொடையூா் பெரிய ஏரி வரை கால்வாய் தூா்வாரும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், அதன் விவரங்களைக் கேட்டறிந்தாா். இந்த தூா்வாரும் பணியால் ராஜாம்புலியூா், மொடையூா் மற்றும் கம்மந்தூா் கிராமங்களைச் சோ்ந்த 1,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, மேல்சித்தாமூா் ஸ்ரீபாா்சுவநாதா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல்திறனைக் கேட்டறிந்த ஆட்சியா், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பள்ளியிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், கொங்கரம்பட்டு கிராமத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினரால் செயல்படுத்தப்பட்டு வரும் பால் உற்பத்தி மதிப்புக்கூட்ட அலகை பாா்வையிட்ட ஆட்சியா், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மொடையூா் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் விவசாயி நிலத்தில் சம்பங்கி உதிரி மலா் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், செஞ்சிக் கோட்டை மற்றும் யானைக்குளத்தையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து, வல்லம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்குகொண்டுவர வேண்டும் என்றும், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜனாா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாசங்கா், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.