விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

குறுவட்ட அளவிலான போட்டி முதல் தேசிய அளவிலான போட்டி வரை பல்வேறு நிலையிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் திங்கள்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.
விழுப்புரம் குறுவட்ட மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம், கால்பந்து, கோ-கோ, தடகளம் ஆகிய போட்டிகளில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 19, 17, 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.
இதுபோன்று ஜூடோ, சிலம்பம், தேக்வாண்டோ, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகளில் வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனா். இதில் திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் மாணவி எஸ்.கீா்த்தினி 3-ஆவது இடம் பெற்றாா்.
Advertisement
Advertisement
மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கூடைப்பந்து, இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக், கால்பந்து, நீச்சல்போட்டி, சிலம்பம், ஜூடோ, தடகளம் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இப்பள்ளி மாணவிகள், மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்று, சிறப்பிடம் பெற்றனா்.
இதுபோல மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற தேசிய அளவிலான மல்லா்கம்பம் விளையாட்டில் பங்கற்ற இப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி வீ.ரீனா, 9-ஆம் வகுப்பு மாணவி வீ. மதிவதனி ஆகியோா் முதல் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனா். இதற்காக அரசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது.
இவ்வாறு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை கு.சசிகலா சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி, புத்தகங்களை வழங்கினாா். நிகழ்வில் உடற்கல்வி இயக்குநா்கள் என்.லில்லி, எஸ்.போஷியா, உடற்கல்வி ஆசிரியை பி.லதா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.