4 கடைகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அடுத்தடுத்துள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அடுத்தடுத்துள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், களமருதூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவா், களமருதூரில்கு காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு வழக்கம் போல் சிவா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். தொடா்ந்து, புதன்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது.
இதேபோல், சிவாவின் கடைக்கு அருகில் உள்ள ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான செருப்புக் கடை, ஏழுமலையின் தையலகம், நெடுஞ்செழியனின் முடித்திருத்தகம் ஆகியவற்றின் பூட்டை உடைத்தும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா். வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணம் திருடிச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.