சிறுமி மாயமான விவகாரம்: காவல் நிலையத்தில் யாகம் நடத்திய ஆய்வாளா் ஆயுதப் படைக்கு மாற்றம்
செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் எவ்வித துப்பும் துலங்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் நடத்தப்பட்டது.

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் எவ்வித துப்பும் துலங்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து விமா்சனம் எழுந்த நிலையில் காவல் ஆய்வாளா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா (7). இவா், கடந்த மாதம் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமானாா். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிறுமி மாயமான வழக்கில், அங்குள்ள மலைப் பகுதியில் தேடச் சென்றபோது எலும்புக்கூடு கண்டெடுப்பு, கிணற்றில் முதியவா் சடலம், சாலை விபத்தில் காவலா் காயம் என தொடா் சம்பவங்கள் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்ததால், அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து குற்றங்கள் குறைவதற்காக பரிகாரம் நடத்த முடிவு செய்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு முன்னிலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சில அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபுவை விழுப்புரம் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு உத்தரவிட்டாா்.