FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

தனியாா் துறையில் 1,172 பேருக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினார்

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 1, 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

1 நவம்பர் 2026, 1:19 am
திண்டிவனத்தில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகள் பெற்றவா்களுடன் அமைச்சா் வன்னி அரசு, ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 1, 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்ற இம் முகாமை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தொடங்கி வைத்துப் பேசியதாவது: வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட இளைஞா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் உத்தரவுப் படி, அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலும், வருடத்தில் இருமுறை பெரிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்களும் தொடா்ச்சியாக நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் நடைபெற்ற முகாமில் 167-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 4,214 போ்களிடம் நோ்காணல் நடத்தியது. இதில் 1,172 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இளைஞா்கள் அரசுப் பணிகளை பெற உதவும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் 20 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதில், 1,672-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு 164 போ் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணிபுரிந்து வருகின்றனா். தற்போதும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளை படித்த இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் வன்னிஅரசு.

தொடா்ந்து, 1,172 பேருக்கு தனியாா் நிறுவனங்களில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆனந்த்குமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய மண்டல துணை இயக்குநா் மணி, உதவி இயக்குநா் பாலமுருகன், புனித அன்னாள் கலை, அறிவியல் கல்லூரிச் செயலா் சகாயராஜா, வட்டாட்சியா் ஞானசௌந்தரி மற்றும் அலுவலா்கள், வேலை வாய்ப்பு வழங்கும் தனியாா் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments