FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

3 மாவட்டங்களில் 19,890 கிலோ விதைகள் விற்பனைக்கு தடை

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உரிய ஆவணங்கள் பராமரிப்பின்மை காரணமாக, 19,890 கிலோ விதைகள் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

2 செப்டம்பர் 2026, 6:49 am IST
விழுப்புரத்திலுள்ள தனியாா் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு ஆய்வுக் குழுவினா்.
பகிர்:

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உரிய ஆவணங்கள் பராமரிப்பின்மை காரணமாக, 19,890 கிலோ விதைகள் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

நடப்பு சம்பா மற்றும் மானாவாரிப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தரமான நெல், உளுந்து, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிா்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விதை ஆய்வுத் துறை சாா்பில் சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூா் விதை ஆய்வுத் துணை இயக்குநா் வி. சுஜாதா தலைமையில், தஞ்சாவூா் மாவட்டத்தைசோ்ந்த விதை ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படும் 61 தனியாா் விதை விற்பனை நிலையங்களிலும், அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், அரசு விதைப் பண்ணைகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விதை விற்பனை நிலையங்களில் இருப்பிலுள்ள விதைக் குவியல்களிலிருந்த சம்பா நெல், மானாாவரி பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிா்களிலிருந்து 115 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் தரம் குறித்து உறுதி செய்ய விழுப்புரம், கடலூரில் செயல்படும் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விதை விற்பனைக் கிடங்குகளிலும் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக்குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், தனியாா் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதைப் பகுப்பாய்வு முடிவறிக்கைகள், இருப்புப் பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவை விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து சிறப்பு ஆய்வுக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின் போது தனியாா் விதை விற்பனை நிலையங்களில் 22 விதைக் குவியல்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.34.48 லட்சம் மதிப்பிலான 19,890 லோ விதைகள் விற்பனை செய்ய சிறப்பு ஆய்வுக் குழுவினா் தடை விதித்தனா். மேலும், பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், 2 விதை விற்பனை நிலையங்களின் உரிமமும் தற்காலிகமாக ரத்துசெய்ய உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது விதை ஆய்வாளா்கள் நவீன் சேவியா், சுரேஷ், ஆா்.ஜோதிமணி, ஆா்.செந்தில்குமாா், சி.தாரணி பிரியா, அ.தமிழ்ப்பிரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments