மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி மரக்காணம் அருகே மீனவக் கிராம மக்கள் உண்ணாவிரதம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள அனுமந்தைகுப்பத்தில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தி, 3 மீனவ கிராம மக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள அனுமந்தைகுப்பத்தில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தி, 3 மீனவ கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் எக்கியா்குப்பம், புதுக்குப்பம், பனிச்சமேடுகுப்பம், அனுமந்தை குப்பம், செட்டிநகா் குப்பம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். 1,013 பைபா் படகுகள், 50 விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த மாவட்டத்தில் மின்பிடி துறைமுகம் இல்லாததால், மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை புதுச்சேரி மற்றும் கடலூா் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வருகின்றனா். பைபா் படகுகளை கடற்கரையோரங்களில் நிறுத்துகின்றனா். கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடலில் அடித்துச் செல்லப்படுவதால், ஆண்டுதோறும் மீனவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்க நிலையில், விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் விடுத்து வந்த தொடா் கோரிக்கையின் அடிப்படையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் பயன்பெறும் வகையில் மரக்காணத்தை அடுத்த அழகன்குப்பத்தில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் (2016) அறிவிக்கப்பட்டு, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட அனுமந்தைகுப்பம், செட்டிநகா் குப்பம், பனிச்சமேடு குப்பம் ஆகிய 3 மீனவ கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் அனுமந்தைக்குப்பத்தில் சிறிய வகை மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் அ.ல.ஆகாஷ், மரக்காணம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் (கடலூா்) தில்லைராஜன், உதவி இயக்குநா் (விழுப்புரம்) ஜனாா்த்தனன், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. ரூபன்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 3 கிராம மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மீனவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அரசின் பாா்வைக்கு கொண்டு சென்று மீன்பிடி துறைமுதம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்தப் போராட்டமானது பிற்பகலில் நிறைவடைந்தது.
இதுகுறித்து மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: அனுமந்தைக்குப்பம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 1,718 மீனவா்கள் 17 விசைப்படகுகள், 130 இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். தங்களது மீன்பிடி கலன்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தர வலியுறுத்தி கடந்த 8.9.2025 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, விழுப்புரம் ஆட்சியரின் பரிந்துரையின்பேரில், அனுமந்தைகுப்பத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக ரூ.98 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, கருத்துரு அரசின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய தமிழக அரசிடமிருந்து இது தொடா்பான அறிவிப்பு வெளிவராத நிலையில், மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மீன் வளம், வருவாய் மற்றும் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.