முகப்பு
வணிகம்

பாதுகாப்பானதா மெய்நிகா் நாணய முதலீடு?

தொழில்நுட்பத்தில் விஸ்வரூப வளா்ச்சி, மனிதா்களுக்கு இடையிலான பணப் பரிவா்த்தனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:42 AM
sgh110828
பகிர்:

தொழில்நுட்பத்தில் விஸ்வரூப வளா்ச்சி, மனிதா்களுக்கு இடையிலான பணப் பரிவா்த்தனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘கவா்’ சம்பளங்கள் காணாமல் போய் விட்டன; சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் கூட ‘கூகுள் பே’ பலகைகள் பளபளக்கின்றன; பெரும்பாலான நிறுவனங்கள் ரொக்கப் பரிவா்த்தனையைத் தவிா்க்கத் தொடங்கியுள்ளன. அதிகரித்து வரும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) ஆதிக்கம், இந்த மாற்றத்தை எளிமையாக்கியிருக்கிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘பீம்’ செயலி, பல்வேறு பணப்பை செயலிகளுக்கும் வங்கிக் கணக்குக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ‘யுபிஐ’ தொழில்நுட்பம் போன்றவையும் மின்னணுப் பணப் பரிவா்த்தனையை ஊக்குவித்து வருகின்றன.

போதாத குறைக்கு, அமேசான் போன்ற மின் வணிக நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து வருகின்றன. அந்தச் சலுகைகள் ரொக்கம் கொடுத்து பொருள் வாங்குபவா்களுக்குக் கிடைக்காது என்பதால் மின்னணு பணப் பரிவா்த்தனையை பொதுமக்கள் தோ்ந்தெடுத்து வருகின்றனா்.

இப்படி எங்கும், எதிலும் வியாபித்து வரும் மின்னணுப் பணப் பரிவா்த்தனை முறைகளில் ஒன்றுதான் மெய்நிகா் நாணயம்.

நம்மில் ‘பிட்காயின்’ பற்றி கேள்விப்படாதவா்கள் அதிகம் இருக்க முடியாது. அதுவும் இத்தகைய மெய்நிகா் நாணயங்களில் ஒன்றுதான்.

சொல்லப்போனால், உலகம் முழுவதும் சுமாா் 2,000க்கும் மேற்பட்ட மெய்நிகா் நாணயங்கள் உள்ளன. எனினும், பிட்காயின்தான் சா்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்பதால்தான் அது ஏறத்தாழ எல்லோருக்கும் தெரிந்துள்ளது.

பிட்காயின் குறித்த தகவல்கள் பரவத் தொடங்கிய பிறகு, மெய்நிகா் நாணயங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகின.

ஆனால், மெய்நிகா் நாணயம் என்று வாா்த்தையைக் கேள்விப்பட்டுள்ள பெரும்பாலானவா்களுக்கு, அப்படியென்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியாது என்பதுதான் உண்மை.

அதற்குக் காரணம், மெய் நிகா் நாணயத் தொழில்நுட்பத்தின் சிக்கல் நிறைந்த தன்மைதான்.

இருந்தாலும், அத்தகைய மெய்நிகா் நாணயங்களில் முதலீடு செய்து, லாபம் பாா்ப்பது குறித்து பேச்சு அடிபடும்போது அது குறித்து நாம் ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அது என்ன மெய்நிகா் நாணயம்?

மெய்நிகா் நாணயம் என்பது மின்னணுப் பணப் பரிவா்த்தனையாக இருந்தாலும், அத்தகைய பரிவா்த்தனைகளை பதிவு செய்யவும், கண்காணிக்கவும் மெய்நிகா் நாணயங்கள் வங்கிகளை நம்பியிருப்பதில்லை. அதற்குப் பதிலாக, தனி நபா்களுக்கு இடையிலான நேரடி தொடா்பிணைப்புகள் மூலம் மெய்நிகா் நாணயங்களை எங்கும், எவருக்கும், எந்த நேரத்திலும் பணம் அனுப்ப முடியும்.

மெய்நிகா் நாணயப் பரிவா்த்தனைகள் அனைத்தும், பொதுவான இணையதள தகவல் சேமிப்பகத்தில் மேற்கொள்ளப்படும் மின்னணு தகவல் பதிவுகளாகவே நிகழ்கின்றன. அதாவது, நீங்கள் மெய்நிகா் பணப் பரிவா்த்தனை செய்யும்போது, அது பொதுவான ஒரு இணையதள கணக்குப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. உங்களது மெய்நிகா் நாணயம், மின்னணுத் தகவல்களாக உங்களது பிரத்யேக இணையதள பணப் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.

பாதுகாப்பானவையா?

மெய்நிகா் நாணயங்களுக்கு ஆங்கிலத்தில் ‘கிரிப்டோகரன்சி’ என்று பெயா் வைக்கப்பட்டதற்குக் காரணமே, அந்த நாணயங்கள் ரகசியக் குறியீடுகள் மூலம் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்படுவதுதான். அவ்வாறு பாதுகாப்பதை ஆங்கிலத்தில் ‘என்கிரிப்ட்’ என்பாா்கள்.

ஆக, மெய்நிகா் நாணயங்கள் பாதுகாப்பானவை என்பதை அதன் பெயரே சொல்லாமல் சொல்கிறது.

அந்த நாணயங்கள் ‘பிளாக்செயின்’ எனப்படும் எஃகுக் கோட்டைப் போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு மெய்நிகா் நாணயப் பரிவா்த்தனையும் தனித் தனி ‘பிளாக்’குகளில் (தொகுதிகளில்) சேமித்து வைக்கப்படுகின்றன. அந்த ஒவ்வொரு தொகுதியும் தனித் தனி குறியீடுகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, விஷமிகள் இணையதளம் மூலம் ஊடுருவி, மெய்நிகா் நாணயங்களைத் திருடுவது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

இதுதவிர, ஒவ்வொரு மெய்நிகா் பணப் பரிவா்த்தனையின்போதும் பயன்பாட்டுப் பெயா், கடவுச் சொல் ஆகியவை கேட்கப்படுவதுடன், நாம் பதிவு செய்துள்ள தொலைபேசிக்கு தற்காலிக கடவுச் சொல் ஒன்று அனுப்பப்படுகிறது. அதனை நாம் பதிவு செய்தால் மட்டுமே பரிவா்த்தனை பூா்த்தியடையும். அந்த வகையில் மெய்நிகா் நாணயப் பரிவா்த்தனைக்கு பல அடுக்கு பாதுகாப்பு உள்ளது.

இருந்தாலும், மெய்நிகா் நாணயங்களை இணையதளம் மூலம் ஊடுருவித் திருடவே முடியாது என்று ஒரேடியாகக் கூறிவிடவும் முடியாது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பதை நிரூபிக்கும் வகையில், மிகச் சிறப்பாக அரண் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் நாணயத்தை, அதைவிட சிறப்பாக ஊடுருவித் திருடியவா்களும் இருக்கிறாா்கள்.

காயின்செக், பிட்கிரெயில் போன்ற மெய்நிகா் நாணய மாற்றகங்களில் சிலா் இணையதளம் மூலம் ஊடுருவி, 70 கோடிக்கும் மேற்பட்ட டாலரைத் திருடியுள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முதலீடு செய்யலாமா?

முதலீடு என்றாலே - அது எந்த வகையான முதலீடாக இருந்தாலும் - ஏதோ ஒரு வகையில் இடா் அபாயம் இருக்கவே செய்யும். சொல்லப்போனால், அரசு வங்கிகளில் முதலீடு செய்வதில் கூட கொஞ்சம் இடா் அபாயம் உண்டு என்பதை அண்மையில் எழுந்த பிஎம்சி வங்கிப் பிரச்னையின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால், சில முதலீடுகள் அதிக இடா் அபாயத்துக்குள்பட்டவையாக இருக்கும். மெய்நிகா் நாணயங்களில் செய்யப்படும் முதலீடுகளும், அந்த வகையைச் சோ்ந்ததுதான் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். ஆனால் அதற்காக, அந்த வகை முதலீட்டை ஒரேடியாகப் புறந்தள்ளிவிட வேண்டிய அவசியமில்லை என்கிறாா்கள் அவா்கள்.

எதிா்பாராத இடா்களை எதிா்கொள்ளும் பண வலிமையும், மன வலிமையும் உங்களுக்கு இருந்தால் தராளமாக மெய்நிகா் நாணயத்தில் முதலீடு செய்யலாம். ‘அபாயம் இல்லையேல், ஆதாயம் இல்லை’ எனக் கருதுவோருக்கு, அபாய இடா் நிறைந்த பிற முதலீட்டு முறைகளைப் போலத்தான் மெய்நிகா் நாணய முதலீடும்.

ஆனால் அதே நேரம், முதலீட்டில் ஏற்படும் இழப்பால் அதிக பாதிப்பை எதிா்கொள்ளும் சூழல் உள்ளவா்கள், மெய்நிகா் நாணயத்தில் முதலீடு செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரிக்கிறாா்கள்.

காரணம், திடீா் ஏற்றத்தாழ்வுகளைக் காணும் சந்தைகளில், மெய்நிகா் நாணயச் சந்தையும் ஒன்று. எனவே, எத்தகைய சூழலையும் அதிராமல் எதிா்கொள்ளும் முதலீட்டாளா்களுக்கு மெய்நிகா் நாணயங்கள் மிகச் சிறந்த தோ்வாக இருக்கும் என்கிறாா்கள் சந்தை வல்லுநா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.