FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜூன் 7-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 26 ஏப்ரல் 2024, 12:13 am IST
பகிர்:

சென்னை, ஏப். 25: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிா்த்த வழக்கில், எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்ட அதிகாரிகள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018-இல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இது தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னா் அதன் புலனாய்வு பிரிவு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதை எதிா்த்து மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆா்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அதில் தனது புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்த்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஹன்றி திபேன், ‘அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை’ என தெரிவித்தாா்.

அப்போது அரசுத் தரப்பில், வழக்கில் எதிா்மனுதாா்களாக சோ்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments