முகப்பு
செய்திகள்

ரூ. 2000 கோடி வசூலை நெருங்கும் டங்கல்: சீனாவில் தொடர்ந்து வெற்றிநடை!

ரூ. 2000 கோடி வசூலைப் பெற்ற முதல் இந்தியப் படம் என்கிற சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளது...

Updated On : 10 ஜூன், 2017 at 12:28 PM
பகிர்:

பாகுபலி 2 படம் ரூ. 2000 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சீனாவில் வெளியான அமீர்கானின் டங்கல் படம் ரூ. 2000 கோடி வசூலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று மகத்தான சாதனை செய்து வருகிறது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. நேற்றுவரை ரூ. 1130 கோடி வசூலித்துள்ளது. இதன் அடிப்படையில் டங்கல் படம் இதுவரை உலகம் முழுக்க ரூ. 1913 கோடி வசூலைப் பெற்றுள்ளது. எனவே அடுத்தச் சில நாள்களில் ரூ. 2000 கோடி வசூலைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைப் பெற்ற முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை பாகுபலி 2 பெற்றது. தற்போது டங்கல் படம் ரூ. 2000 கோடி வசூலைப் பெற்ற முதல் இந்தியப் படம் என்கிற சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளது.

Advertisement

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500).  டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் சீனாவில் வெளியானது. 

சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், இன்று சாதனை வசூலை அடைந்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. சீனாவில் ஹாலிவுட் படமாக அல்லாத ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால் அது டங்கல் படம் தான். சீனாவில் ஒரு மில்லியன் யுவான் (947 கோடி ரூபாய்) வசூலித்த 33-வது படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்து நம்பமுடியாத சாதனை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.