முரசு புயல்: வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த ஆந்திர முதல்வர்!
முரசு புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது குறித்து...
முரசு புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று புதன்கிழமை (நவ. 4) ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் தீவிர புயலாக உருவான முரசு, தெற்கு ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர், நரசாபுரம் இடையே செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்தது.
முதற்கட்ட தகவலின்படி, இந்தப் புயலால் 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 465 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 52,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சுமார் ரூ. 343 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, பாதிப்புகளை சரி செய்யவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், முரசு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான குண்டூர், பிரகாசம் மற்றும் பாபட்லா மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், சிலக்கலுரிப்பேட்டை, ஓங்கோல், கொத்தப்பட்டினம், சீனகஞ்சம், சீராலா, பாபட்லா பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை விரைந்து வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.