முகப்பு
செய்திகள்

உங்களைப் பாராட்டுகிறேன் கார்த்தி... பவன் கல்யாண்!

கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்...

Updated On : 25 செப்டம்பர் 2024, 12:07 pm IST
நடிகர்கள் கார்த்தி, பவன் கல்யாண்.
பகிர்:

லட்டு குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் கார்த்திக்கு பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.

மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் (செப். 23) நடைபெற்றது. இப்படம் தெலுங்கில் ’சத்யம் சுந்தரம்’ என்கிற பெயரில் வெளியாகிறது.

நிகழ்வில், தொகுப்பாளர் கார்த்தியிடம், ’உங்களுக்கு லட்டு வேணுமா?’ எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி ‘இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சிமிக்க விஷயம். லட்டு வேண்டாம்... தவிர்த்துவிடுவோம்” என்றார். இதைக்கேட்ட பலரும் கார்த்தியுடன் சேர்ந்து சிரித்தனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, கோவிலில் விரதமிருக்க வந்த நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பத்திரிகையாளர் சந்திப்பில், ”சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க (sensitive) விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்.” என கண்டனம் தெரிவித்தார்.

சர்ச்சையின் தீவிரத்தை உணர்ந்த கார்த்தி உடனடியாக, “அன்புள்ள பவன் கல்யாண் சார். உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். வெங்கடேஸ்வரரின் பக்தனாக, பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன். வாழ்த்துகள்” என பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார். செய்யாத தவறுக்கு ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் என பலரும் கார்த்திக்கு ஆதரவாக பதிவிட்டனர்.

கார்த்தியின் பதிவைப் பார்த்த பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் அவருக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அன்புள்ள கார்த்தி... உங்கள் பண்பான உடனடி பதிலுக்காகப் பாராட்டுகிறேன். திருப்பதி லட்டு போன்ற நம் புனிதங்களின் மீது பல கோடிக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதால் இந்த மாதிரியான தலைப்பில் பேசும்போது நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தை எந்த உள்நோக்கமும் இல்லாமல் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். சூழல் தற்செயலாக அமைந்ததைப் புரிந்துகொள்கிறேன். ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை வளர்ப்பது நம் கடமையாகும். சினிமாவின் மூலமும் இதைச் செய்வோம்.

நம் சினிமாவை வளப்படுத்திய அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட குறிப்பிடத்தக்க நடிகராக உங்களைப் பாராட்டுகிறேன். மதிப்பிற்குரிய சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் நீங்கள் நடித்த மெய்யழகன் (சத்யம் சுந்தரம்) வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பவன் கல்யாணின் பதிவுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.