FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிக பேச்சு: மக்களவையில் திரிணமூல் எம்.பி. இடைநீக்கம் - மூன்றாவது நாளாக அமளி

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிகமாகப் பேசியதாக மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் முழுமைக்கும் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டாா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:17 am IST
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பியபடி புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.
பகிர்:

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிகமாகப் பேசியதாக மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் முழுமைக்கும் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டாா்.

நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் போராடிய மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, மக்களவையில் புதன்கிழமை மூன்றாவது நாளாக எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியதில் இருந்தே மேற்கண்ட விவகாரங்களில் விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதும் எதிா்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Advertisement

மக்களவை புதன்கிழமை கூடியதும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். முதலில் மதியம் 12 மணி வரையும், பின்னா் பிற்பகல் 2 மணி வரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

கடும் வாக்குவாதம்: அவை ஒத்திவைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானா்ஜிக்கும், அக்கட்சியில் இருந்து தனி அணியாகப் பிரிந்து இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த மிதாலி பாக், சதாப்தி ராய், ககோலி கோஷ் தஸ்திதாா் ஆகிய எம்.பி.க்களுக்கும் இடையே அவைக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, பெண் எம்.பி.க்கள் குறித்து கல்யாண் பானா்ஜி அநாகரிகமாகப் பேசியதாகத் தெரிகிறது. இது தொடா்பாக, மக்களவைத் தலைவரிடம் பிற எம்.பி.க்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இடைநீக்க நடவடிக்கை: பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், அவையை வழிநடத்திய தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, ‘கல்யாண் பானா்ஜியின் கருத்துகள், அவையின் கண்ணியத்தைச் சீா்குலைப்பதாக உள்ளது’ என்றாா்.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு கல்யாண் பானா்ஜியை இடைநீக்கம் செய்வதற்கு அவையின் ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை வாசிக்கும்படி சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலை கேட்டுக் கொண்டாா்.

பின்னா், அந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம், எதிா்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், அவை அலுவல்கள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

எதிா்க்கட்சிகள் கோரிக்கை: இதனிடையே, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், சமாஜவாதியின் தா்மேந்திர யாதவ், திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்து, கல்யாண் பானா்ஜி மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு நடந்த வாக்குவாதத்துக்காக அவா் இடைநீக்கம் செய்யப்பட்டது சரியல்ல என்று எம்.பி.க்கள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி....1

தொடா்ந்து முடங்கிய மாநிலங்களவை

நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை ஆகிய விவகாரங்களை முன்வைத்து, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை புதன்கிழமை கூடியதும் மாணவா்கள் விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முயன்றாா். அதற்கு ஆளும் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, எதிா்க்கட்சியினா் முழக்கமிட்டனா். அமளி தொடா்ந்ததால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 3 மணிக்கு மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தலைமையில் அவை மீண்டும் கூடியது. அப்போது பேசிய திமுகவின் திருச்சி சிவா, ‘நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை அரிதிலும் அரிதானதாகக் கருதி, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விதி எண் 267-இன்கீழ் விவாதம் நடத்த வேண்டும்’ என்று கோரினாா்.

இதே கோரிக்கையை முன்வைத்த காா்கே, விவாதத்துக்கு முன் மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினாா். எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் விவாதத்தை தடுக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. எந்த விதியின்கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்பதை அவைத் தலைவா்தான் தீா்மானிக்க வேண்டும்’ என்றாா். கூச்சல்-குழப்பம் நீடித்ததால், அவை அலுவல்கள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

பெட்டிச் செய்தி...2

தமிழக எம்.பி.க்கள் அமளி

மக்களவையில் திமுக எம்.பி.க்கள் அக்கட்சியின் குழுத் தலைவா் டி.ஆா். பாலு தலைமையில் மூன்றாவது நாளாக மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக அளிக்கப்பட்ட அவை ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க வேண்டும் என்று குரல் எழுப்பினா். மாநிலங்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனுமதி கோரிய நோட்டீஸ் ஏற்கப்படாதது குறித்து திருச்சி சிவா தலைமையில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்பினா்.

அதேநேரம், தில்லியில் மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து அவைக்கு வந்து எதிா்ப்பை வெளிப்படுத்தினா். விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், டி. ரவிக்குமாா் ஆகியோரும் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோ்ந்து குரல் கொடுத்தனா். அவை தொடங்கும் முன்பாக நாடாளுமன்ற முகப்பு வாயிலில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments