முகப்பு
ஹோம்பவுண்ட் படத்தின் காட்சி...
செய்திகள்

மறக்கவியலா பெருந்தொற்றை மயிலிறகால் வருடும் புலம்பெயர் தொழிலாளர்களின் கதை: ஹோம்பவுண்ட்

ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ள ஹோம்பவுண்ட் என்ற ஹிந்தி திரைப்படம் குறித்து...

செய்திகள்

மறக்கவியலா பெருந்தொற்றை மயிலிறகால் வருடும் புலம்பெயர் தொழிலாளர்களின் கதை: ஹோம்பவுண்ட்

ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ள ஹோம்பவுண்ட் என்ற ஹிந்தி திரைப்படம் குறித்து...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:37 AM
ஹோம்பவுண்ட் படத்தின் காட்சி...
பகிர்:

வட இந்திய மாநிலம் ஒன்றில், தாங்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும் ஜாதி மற்றும் மதவெறித் தாக்குதலில் இருந்து தப்பித்து சமூகத்தில் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் வாழ காவல்துறை பணியில் சேர நண்பர்களான சந்தன் குமார் மற்றும் முகமது ஷோய்ப் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் விருப்பம் கைக்கூடுகிறதா? இல்லையா? என்பதுதான் 'ஹோம்பவுண்ட்' படத்தின் ஒன்லைன்.

சந்தன் குமார் வால்மிகியும் (விஷால் ஜெத்வா), முகமது ஷோய்ப் அலியும் இணைப்பிரியாத நண்பர்கள். தனது முழுப்பெயரைக் கூறினால், இந்த சமூகம் தன்னை ஒதுக்கிவைப்பதை உணர்ந்து, தனது பட்டியலின சமூக அடையாளத்தை மறைக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார் சந்தன்குமார். குறைவான வருவாயில் அம்மா, அப்பா, அக்காவோடு வாழும் அவர், சமூக ரீதியான காரணங்களால் தனிமைப்படுத்தப்படுகிறார்.

அந்தப்பக்கம் நோய்வாய்ப்பட்ட பெற்றோருடன் அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தபடி வாழ்பவர் முகமது ஷோய்ப் அலி (இஷான் கட்டர்). என்னதான், நேர்மையும் திறமையும் கொண்டவராக இருந்தாலும், அவர் பின்பற்றும் மார்க்கத்தின் காரணமாக சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார். இந்த இருவரும் போலீஸ் வேலையில் சேர்ந்து அந்தச் சீருடையை அணிந்தால், சமூகத்தில் தாங்கள் கண்ணியமாகவும், மாண்புடனும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக உளமாற நம்புகின்றனர்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருவரும் காவலர் தேர்வெழுதுகின்றனர். சந்தன் தேர்ச்சிப் பெறுகிறார். முகமது ஷோய்ப் பெயர் தேர்சிச்சிப் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெறாமல் போகிறது. சந்தன் பணிநியமனக் கடிதத்துக்காக காத்திருக்கிறார். அந்த நேரத்தில் கோவிட் பெருந்தொற்று பரவுகிறது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறது.

சந்தன் காவலர் பணியில் சேர்ந்தாரா? சந்தன்-முகமது ஷோய்ப் நட்பு என்னவாகிறது? என்பதுதான் இந்த 'ஹோம்பவுண்ட்' படத்தின் திரைக்கதை.

காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பஷரத் பீர், நியூயார்க் டைம்ஸ்-ல், கோவிட் பெருந்தொற்று காலத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய 'டேக்கிங் அம்ரித் ஹோம்' என்ற கட்டுரையை தனது தரமான எழுத்து மற்றும் மேக்கிங் மூலம் திரைப்படமாக்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் நீரஜ் கய்வான். அவருடன் இணைந்து இக்கதையை பஷரத் பீர் மற்றும் சுமித் ராயும், திரைக்கதையை வருண் குரோவர், ஸ்ரீதர் தூபேவும் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த சமூகத்தில் ஆழமாக வேரூன்றிக் கிடக்கும் ஜாதிய சமூகப்படிநிலைகளை இயக்குநர் நீரஜ் காய்வன் சமரசமின்றி பதிவு செய்திருக்கிறார். இளமைப் பருவத்தை அதன் வயதுக்கேற்ற ரசனையோடு கடக்க வேண்டிய நண்பர்கள் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி, மத ரீதியான தாக்குதலை அனிச்சையாக சந்திப்பதை காட்சிகள் மற்றும் வசனங்களின் மூலம் கடத்துகிறது இந்தப் படத்தின் ரைட்டிங். "உண்மையைச் சொன்னால் இந்த உலகம் என்னை அந்நியப்படுத்துகிறது; பொய்ச் சொன்னால் எனக்கு நானே அந்நியமாகி விடுகிறேன்" இதுபோல படத்தில் வரும் ஷார்ப்பான வசனங்களால் சமூக அவலங்களைக் காத்திரமாக பேசியிருக்கின்றனர்.

அதேநேரம், இந்த சமூகத்தில் உடைக்கவே முடியாத பிணைப்பைக் கொண்டிருக்கும் ஜாதி,மதவெறித் தாக்குதலை எதிர்கொண்டு வருங்காலத்தை சிறப்பானதாக மாற்ற மிக நேர்மையான வழிகளை மட்டும் கடைபிடிக்கும் இருவராக படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களை அமைத்திருக்கும் விதத்தில் இயக்குநர் ஈர்க்கிறார்.

படத்தில் ஜாதி, மத பாகுபாடுகள், பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு எதிரான பாகுபாடு, வேலைவாய்ப்பின்மை, இஸ்லாமிய வெறுப்பு என தனிமைப்படுத்தப்படும் இருவேறு பிரிவுகளுக்கு எதிராக சமூகத்தில் நிகழ்த்தப்படும் துல்லியத் தாக்குதல்களை கவனமாக கையாண்ட இயக்குநர் நீரஜ் கய்வானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமூக அரசியல் பொருளாதார நிலையை குடும்பத்தில் இருந்து துவங்கி பேசும் எளிமையான அணுகுமுறை படத்துக்கு அழகு சேர்த்திக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், பல்லாயிரம் கிலோமீட்டர் வெறும் கால்களில் நடந்துச்சென்று கூடடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மறக்கவியலா பெருந்துயரை மயிலிறகால் வருடியிருக்கிறது இந்தப்படமும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவும். இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்ளிட்ட அத்தனை நடிகர்களும் தத்ரூபமாக நடித்திருக்கின்றனர்.

பிரதிக் ஷாவின் கேமிராவில், பெருந்தொற்றுக் கால காட்சிகள் நம்மை அந்த காலக்கட்டத்துக்கே அழைத்துச் செல்கிறது. பெருந்தொற்று இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக நடந்துச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தை பருந்துப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. நரேன் சந்திரவார்க்கர், பெனடிக்ட் டெய்லரின் பின்னணி இசை படத்துப் பலம் சேர்த்திருக்கிறது. நிதின் பெய்ட்டின் சிறப்பான எடிட்டிங் படத்தைக் கச்சிதமாக்கியிருக்கிறது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை.

summary

In a northern Indian state, friends Chandan Kumar and Mohammed Shoaib try to escape the caste and communal attacks they often face and live in society with respect and dignity by joining the police force. Will their wishes come true? Or not? is the online synopsis of the film 'Homebound'.

முழு கட்டுரையைப் படிக்க →