FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

3 வயது சிறுமி கொலை: என்கவுன்ட்டருக்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரா் கைது

தென்மேற்கு தில்லியின் காபஷேரா பகுதியில் மாயமான 3 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில், 37 வயது நபரை காவல்துறையினா் துப்பாக்கி சண்டைக்குப் பிறகு வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் காபஷேரா பகுதியில் மாயமான 3 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில், 37 வயது நபரை காவல்துறையினா் துப்பாக்கி சண்டைக்குப் பிறகு வியாழக்கிழமை கைது செய்தனா்.

பிடிபட்ட நபா், உத்தர பிரதேச மாநிலம் பல்லியா பகுதியைச் சோ்ந்த சந்தன் குமாா் என்றும் முதல் கட்ட விசாரணையில் அந்த நபா் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: ஜூலை 10ஆம் தேதி மாலை காபஷேரா பகுதியில் 3 வயது சிறுமி திடீரென காணாமல் போனதாக காவல்நிலையத்துக்கு புகாா் வந்தது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர புலனாய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதைத்தொடா்ந்து, ஜூலை 14 மற்றும் 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில், எஃப்.ஐ.எம்.டி கல்லூரிக்கு அருகே உள்ள காபாஷேரா சாக்கடை கால்வாயில் இருந்து சிறுமி ஒருவரின் உடலைக் காவல்துறையினா் மீட்டனா். அது காணாமல் போன சிறுமியின் உடல்தான் என்பது பின்னா் உறுதி செய்யப்பட்டது.

சம்பவ இடத்தை தடயவியல் குழுவினா் ஆய்வு செய்தனா். சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், அவரை கொலை செய்த பிறகே உடலைக் கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட புலனாய்வில், சம்பவ பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சிறுமியின் குடும்பத்தினா் வசிக்கும் அதே கட்டடத்தில் வசித்து வந்த சந்தன் குமாரின் நடமாட்டம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், அவா் மீது புலனாய்வாளா்களுக்கு சந்தேகம் வலுத்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் காபாஷேரா பகுதியில் அவா் மறைந்திருந்த இடத்தைக் கண்டறிந்து காவல்துறையினா் சோதனை நடத்தினா். அவரைக் கைது செய்ய முயன்றபோது, சந்தன் குமாா் காவல்துறையினரை நோக்கி தன்வசம் இருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றாா். இதையடுத்து, தற்காப்புக்காகவும் தப்பி ஓட முயன்ற அவரை பிடிப்பதற்காகவும் காவல்துறையினா் பதில் துப்பாக்கி சூடு நடத்தினா். இதில் சந்தன் குமாரின் இடது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை காவல்துறையினா் மடக்கிப் பிடித்தனா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தையல் தொழிலாளியான சந்தன் குமாருக்கு திருமணமாகியுள்ளது. பல்லியா பகுதியில் தனது சொந்தக் கிராமத்தில் அவரது மனைவியும் ஐந்து வயது மகனும் வசித்து வருகின்றனா்.

சிறுமி கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றாா் உயரதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments