பின்னணி குரலுக்காக ஒரே மேடையில் விருது பெற்ற தாய் - மகள்!
சின்ன திரையில் பின்னணி குரலுக்காக தாயும் மகளும் ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர்.
சின்ன திரையில் பின்னணி குரலுக்காக தாயும் மகளும் ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர். பின்னணி குரல் வளக் கலைஞர் லக்ஷனா, தனது தாயுடன் மாநில அரசு விருதைப் பெற்றுள்ளார்.
40 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிவரும் நிலையில், தனது தாய்க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அதனை நெகிழ்ச்சியுடன் லக்ஷனா பகிர்ந்துள்ளார்
சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் தங்கள் குரல் மூலம் உயிர்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் சுந்தரி உள்ளிட்ட பல தொடர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் லக்ஷனா.
Advertisement
Advertisement
அந்தத் தொடரில் நடிகை கேப்ரியல்லாவுக்கு பின்னணி குரல் கொடுத்ததற்காக 2022-ல் சின்ன திரை விருது பெற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற வித்யா நம்பர் ஒன் என்ற தொடரிலும் நாயகி தேஜஸ்வி கெளடாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய லக்ஷனாவுக்கு சிறந்த பின்னணி குரலுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகள், கடந்த 13 ஆம் தேதி வழங்கப்பட்டன.
இதில் லக்ஷனாவுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் விருது வழங்கினார். இதேபோன்று லக்ஷனாவின் தயாருக்கும் சிறந்த பின்னணி குரலுக்கான விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் தாயும் மகளும் சிறந்த பின்னணி குரலுக்காக ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர். இதனை நெகிழ்ச்சியுடன் லக்ஷனா பகிர்ந்துள்ளார். 40 ஆண்டுகள் தொடர்ந்து தனது தாய் உழைத்து வந்த நிலையில், தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.