முகப்பு
செய்திகள்

சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி - திரை விமர்சனம்!

பெத்தி திரைப்பட விமர்சனம்...

Updated On : 4 ஜூன் 2026, 4:23 pm IST
பெத்தி போஸ்டர்
பகிர்:

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதை நாயகனான பெத்தி (நடிகர் ராம் சரண்) ஆந்திரத்திலுள்ள விஜய நகரம் என்கிற பகுதியில் சர்க்கரைப் பாகு ஆலையில் பணியாற்றி வருகிறார். சுற்று வட்டாரத்திலேயே பெத்தியை விட யாராலும் சரியாக பதம் பார்க்க முடியாது என்கிற அளவிற்குப் பெயர் இருக்கிறது. ஆனால், பெத்தி அதற்காக மட்டும் பிரபலம் கிடையாது. பக்கத்து, பக்கத்து ஊர்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விஜய நகரம் பகுதி செல்வந்தர்கள் பெத்திக்கு அதிகக் கூலி கொடுத்து தங்கள் அணியில் பேட்டிங் ஆட வைக்கின்றனர். பெத்தி அடித்தால் பந்து 3 கிலோ மீட்டர் வரை பறக்கும் (தெலுங்கு படம் இல்லையா? அப்படித்தான்). கூலிக்காக மட்டுமே கிரிக்கெட் விளையாடி அசத்தும் பெத்திக்கு, சொந்த ஊர் என்பது மலைப்பகுதியில் அமைந்த பழங்குடி கிராமம்தான். அந்த ஊருக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் கிடையாது. ஒருநாள் முழுக்க நடந்தால் போய் சேர்ந்துவிடலாம். ஆனால், மலையைச் சுற்றி வரும் ரயில் அவர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்து சென்றாலும் அந்த ஊருக்கு பெயரும் அடையாளமும் இல்லாததால் அங்கு ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், பல குடும்பங்கள் அவதிப்படுகின்றன. தொடர்ந்து, நன்றாகக் கிரிக்கெட் விளையாடி வரும் பெத்திக்கு ஒரு அவமானம் நிகழ்கிறது. அதனுடன், ரயிலை நிறுத்துவதற்கான முயற்சியில் எதிர்பாராத சம்பவமும் நிகழ்கிறது. இதனைக் காணும் பெத்தி, தீவிரமாக யோசித்து முடியொன்றை எடுக்க, அடுத்தடுத்த என்ன நடக்கிறது, இந்தப் போராட்டம் எதற்காக என பெத்தியில் நீளமாக கதை சொல்லப்படுகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா விளையாட்டால் கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார். முதல்பாதியில் பெத்தியின் ஊரில் ரயில் நிற்காமல் செல்ல, அதனை நிறுத்த 30 ஆண்டுகளாகப் போராடிவரும் நடிகர் ஜெகபதி பாபு வசனங்களும், நடிப்பும் ஒரு ஊருக்குப் போக்குவரத்து என்பது இவ்வளவு முக்கியமென உணர்த்துகிறது. முதல்பாதியின் சில காட்சிகளைத் தவிர மற்றவை கதைக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன. முக்கியமான, நடிகை ஜான்வி கபூரைச் சந்தித்த பிறகு வரும் சிக்கிரி பாடலில் ராம் சரணின் நடனமும் ஏ. ஆர். ரஹ்மானின் இசையும் அமர்க்களப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

ஆனால், இரண்டாம்பாதி மலையில் ரயில் ஊர்ந்து செல்வது போல மிக மெதுவாகச் செல்வதுடன் காட்சிகளும் பெரிய அழுத்தத்தைக் கொடுக்காமல் எங்கெங்கோ திணறுவது தெரிகிறது. அடையாளமே இல்லாத ஊரிற்குத் தன் விளையாட்டுத் திறனால் அடையாளம் கொடுக்கப் போராடும் நாயகன் என்கிற இந்தக் கதையில் திரைக்கதை பலவீனமும் கிரிக்கெட், குஸ்தி என மாறிமாறி வரும் விளையாட்டும் ஒரே பக்கம் கவனத்தைக் குவிக்காமல் வேறுவேறு பக்கம் இழுத்துச் செல்கிறது. வசனங்கள் நன்றாக இருந்தாலும் சில முரணான காட்சிகளால் பெத்தி பல இடங்களில் சோர்வையே கொடுக்கிறது. முக்கியமாக, ராம் சரணின் வாயில் எப்போதும் இருக்கும் பீடி.

இந்தப் படத்திற்குப் பெரிய பலமாக ராம் சரண் மட்டும்தான் தெரிகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு உடலமைப்பும் குஸ்திக்குச் செல்லும்போது கட்டுமஸ்தான இன்னொரு உடலமைப்பு என கடுமையாக அவர் உழைத்திருப்பது தெரிகிறது. காட்சியமைப்பு பலவீனமாக இருக்கும் இடங்களில்கூட ராம் சரண் அதனைப் பார்க்க வைக்கிறார். இடைவேளைக் காட்சி, முதல்முறையாக இருவருடன் குஸ்தி போடும்போது ராம் சரணும் ஒளிப்பதிவாளரும் அசத்தியிருக்கின்றனர். 5 நிமிடத்திற்கும் மேலான அந்த சண்டைக் காட்சியை இயக்குநர் நன்றாக எடுத்திருக்கிறார். ஒரு தேர்ந்த குஸ்தி வீரராகவே தன்னை முன்னிருத்துவதால் ராம் சரணை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு சண்டைக்காட்சிகளை எழுதியிருப்பதும் நன்று.

நடிகை ஜான்வி கபூர் நல்ல நடிகை. கொஞ்சம் மெனக்கெட்டு நடிக்க வைத்தால், அவரிடமிருந்து உணர்வுப்பூர்வமான நடிப்பை வாங்கலாம். ஆனால், தாவணி இல்லாமல் வந்தாலே போதும் என்கிற அளவே நம் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 70 சதவீத காட்சிகளில் தாவணி இல்லாமல் வெறும் ரவிக்கையுடனே ஜான்வி நடித்திருக்கிறார். இதுதான் கமர்சியல் மசாலாவா? ராம் சரண், ஜான்வியின் அழகில் மயங்கி யாரும் இல்லாத போது திட்டமிட்டு அனுமதியின்றி முத்தமிடுகிறார். அப்போது வெளிச்சம் இல்லாததால் யாரென்று தெரியாமல் அவதிப்படும் ஜான்வியிடம், நான்தான் உனக்கு முத்தமிட்டேன், என்னைப் போன்ற மலைவாசிக்கு காதலை இப்படித்தான் சொல்ல வரும் என்கிறார். உடனே, அந்தக் காதலை ஜான்வியும் ஏற்றுக்கொள்கிறார். என்னய்யா இது? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. வித்தியாசமாகக் காதலைத் தெரியப்படுத்த நாயகன் கொடுத்த பாலியல் தொந்தரவை நார்மலைஸ் செய்வதா? இந்த மாதிரியான காட்சிகளால்தான் கமர்சியல் சினிமா விழிபிதுங்கி நிற்கிறது.

நடிகர் சிவராஜ்குமாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். குஸ்தி வாத்தியாராக அவர் வரும் காட்சிகளும் ராம் சரணிடம் பேசும் வசனங்களும் கச்சிதமாக இருக்கின்றன.

இன்னொரு நாயகனாகே விளையாடி கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். ஆரம்பம் முதலே ‘ஸ்கோர்’ செய்பவர் இறுதிவரை விடாமல் அடித்து ஆடியிருக்கிறார். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி... தன்னுடைய இசையைச் சரியான இடத்திற்குப் பயன்படுத்தி பல இடங்களை உணர்வுப்பூர்வமாக மாற்றியிருக்கிறார். இப்படத்தில் எமோஷன் காட்சிகள் வலுவாக எழுதப்படவில்லை என்றாலும் அவை இசையால் வலுவை அடைகின்றன.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு சிக்கிரி பாடலில் காட்டை மிக அழகாகக் காட்டியிருப்பத்துடன் குஸ்தி சண்டையின் பதற்றத்தையும் பரபரப்பையும் சிறப்பாக எடுத்திருக்கிறார். பீரியட் காட்சிகள் அதிகம் உள்ளதால் அதற்கான திரை வண்ணமும் (கலர் பேலட்) நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாடு இன்றுவரை இரண்டு, மூன்று தங்கப் பதங்கங்களை மட்டுமே வெல்லும் இடத்தில் இருக்கிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தங்கப்பதக்கம் வாங்கக்கூடிய திறனுள்ள ஆள் யாருமே இல்லையா? நம்முடைய தேர்வுக் கமிட்டிகளில் நடக்கும் அரசியல், குழப்பங்களை இப்படம் பெரிதாகக் காட்டாமல் மேலோட்டமாக சில விஷயங்களைப் பேசுகிறது.

ஒரு விளையாட்டு வீரனின் வெற்றியால் எது வேண்டுமானாலும் மாறும் என்பதை இன்னும் பரபரப்பான திரைக்கதையில், நம்பகமான சிஜி (CG) உடன் ஒரே முழுமையான விளையாட்டில் கூறியிருந்தால் பெத்தி வணிக ரீதியாக தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றிருக்கலாம். அவை இல்லாததால், அதற்கு அடுத்த இடத்திலேயே நிற்கிறது.

The film peddi, starring actor Ram Charan, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.