முஸ்லிம்கள் மீதான பிம்பத்தை மாற்றும் படம் ஹபீபி! இயக்குநர் ராம்
ஹபீபி திரைப்படம் குறித்து இயக்குநர் ராம் பேசியது தொடர்பாக...
இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் ஹபீபி என இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் ஹபீபி என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். விரைவில், படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஹபீபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, 'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான்.
காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக 'ஹபீபி' இருக்கும்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், 'இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்" எனக் குறிப்பிட்டார்.
இயக்குநர் மகிழ் திருமேனி பேசுகையில், "'ஹபீபி' திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது எனப் பேசினார்.
இயக்குநர் கணேஷ் கே பாபு பேசும்போது, "நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் 'ஹபீபி' திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டார்.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசும்போது, "தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.
இயக்குநர் சேரன், "இந்த படம் பார்த்து விட்டேன். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும்" எனப் பேசினார்.
இயக்குநர் சுசீந்திரன், " எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. 'ஹபீபி' படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது " எனப் பேசினார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "'ஹபீபி' எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்" எனப் பேசினார்.
நடிகர் நாசர், "'ஹபீபி' படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
இயக்குநர் பாண்டிராஜ், "நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா, "மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்" எனப் பேசினார்.
இயக்குநர் ரஞ்சித், "நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்".
இயக்குநர் ராம், "பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.