தமிழக அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறேன்: நடிகர் சூர்யா
தினமணி தீபாவளி மலருக்காக சூர்யா அளித்த பதில்கள்...
நடிகர் சூர்யா தினமணி தீபாவளி மலரில் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. தீபாவளி வெளியீடாக வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த சீன் திரைப்படமும் வரவேற்பைப் பெற்று வருவதால் இதுவும் வெற்றிப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் காட்சி ஒன்றில், வேலையை விட்டுவிட்டு அரசியலுக்குப் போவதாக சூர்யா கிண்டலாக வசனம் பேசியிருப்பார். இதனைக் கேட்ட ரசிகர்கள் சூர்யாவும் அரசியலுக்கு வருவாரா எனக் குழம்பினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தினமணி தீபாவளி மலரில் அரசியல் குறித்த கேள்விக்கு சூர்யா விளக்கமான பதிலை அளித்துள்ளார்.
முக்கியமாக, “வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விடமாட்டேன். என் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். எனக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தையும் அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைகளைச் சேவை என்று சொல்ல மாட்டேன். அது எங்களின் பொறுப்பு. இதற்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை.
நான் அரசியலுக்கு போக மாட்டேன் என சொல்வதால் அரசியலை வெறுப்பதாக அர்த்தம் இல்லை. மௌனமாக, உன்னிப்பாக அரசியலைக் கவனிக்கிறேன். மனதிற்குப் பிடித்து முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு அரசியலில் ஈடுபட முடியும் என்றால் யார் வேண்டுமென்றாலும் இதில் ஈடுபடலாம். அரசியலை முழுமையாக தெரிந்துகொண்டு, அதன் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கல்விதான் எல்லாவற்றையும் மாற்றும். வெறுமனே மாற்றம், மாற்றம் என்று சொல்வது பிரயோசனாம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
சமூகத்தின் பிரச்னை ஊழல் என்றுதான் சொல்கிறோம். இதனை எப்படி சமாளிக்கப் போகிறோம்? எல்லா கெட்ட விஷயத்திற்குமே மூலம் அறியாமைதான். கல்வி என்கிற வெளிச்சம் மட்டுமே அந்த அறியாமை இருளைப் போக்கும். ஊழலை மூன்றாவது நபர் வந்து ஒழிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்குள் அந்தப் போராட்டத்தை நிகழ்த்திப் பார்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட நாம் ஊழலுக்கு எதிராக நிற்க வேண்டும். அவர் ஒழுக்கமா இவர் ஒழுக்கமா எனப் பார்ப்பதற்கு முன் நாம் ஒழுக்கமாக இருந்தால் அவரும் ஒழுக்கமாகிவிடுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.