பிக் பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஜேசன்! நடந்தது என்ன?
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதியிடம் ஜேசன் கெளசி தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதியிடம் ஜேசன் கெளசி தெரிவித்தார். இதற்கு விஜய் சேதுபதியும் தாராளமாக செல்லலாம் என அனுமதி அளித்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் ஆட்டம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை முத்தழகி மற்றும் நடிகர் அவினாஷ் வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
வார இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரத்தில் ஜேசனுடன் விஜய் சேதுபதி பேசியபோது நிலைமை எல்லை மீறிச் சென்றது.
விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல், தொகுப்பாளரை அவமதிக்கும் வகையில் ஜேசன் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களும் ஜேசனை கட்டுப்பாட்டுடன் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர் தொடர்ந்து விஜய் சேதுபதியிடம் முறையற்ற பாணியிலேயே பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் இடையே தான் ஒன்றைக் கூற விரும்புவதாகவும், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் கூறினார். இதற்கு சற்றும் யோசிக்காமல் தாராளமாகச் செல்லலாம்; அது குறித்து உங்களிடம் பிக் பாஸ் பேசுவார் எனக் கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதாக சக போட்டியாளர்கள் ஜேசனிடம் கூறினர். ஆனால் தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பதாக ஜேசன் கூறினார்.
நிகழ்ச்சியில் இறுதியில் பேசிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சியில் யாருடைய நம்பிக்கையை உடைக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதுதான் உங்கள் பலம் எனவும் குறிப்பிட்டார்.
எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட்டை அவினாஷுக்கு கொடுத்துவிட்டு மக்கள் என்னை வெளியேற்றமாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்த ஜேசனின் ஆட்டம் பலருக்கும் பிடித்திருந்தது. எனக்கு அந்த ஜேசனை பிடித்திருந்தது என விஜய் சேதுபதி பேசினார்.
அந்த ஜேசன் ஆட்டத்தை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதுவரை குழப்பத்தில் இருந்த ஜேசன், விஜய் சேதுபதியின் பேச்சால் இன்ப அதிர்ச்சியில் கண்கள் கலங்கினார். இதன்மூலம் ஜேசன் மீண்டும் நிகழ்ச்சியில் தொடருவார் என்பது தெளிவாகியுள்ளது.