ஆபரேஷன் சக்சஸா? தனுஷின் ஓ.ம் - திரை விமர்சனம்!
ஓம் திரைப்படத்தின் விமர்சனம்...

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓ.ம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் ஊர் மக்களின் ஆதரவுடன் மிகப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பர்மா கார்த்திகேயன் (நடிகர் மம்மூட்டி) துபை வரை பிரபலமான செம்மரக் கடத்தல்காரர். அவருக்கு நம்பிக்கையான கரமாக இருக்கிறார் திரு (தனுஷ்). மம்மூட்டியின் தொழில் சீராக நடக்க, காவல்துறை வந்தால் அதனை எதிர்க்க என இவர்களின் தொழிலில் எதிரே ஈ கூட வராமல் இருக்க, ஆந்திர வனத்துறையின் சிறப்பு அதிகாரியான நித்யா ரெட்டி (சாய் பல்லவி) திருப்பதி பகுதிகளிலிருந்து விலைமதிப்புமிக்க, பாதுக்காக்கப்பட வேண்டிய செம்மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பலை முழுமையாக அழிக்கும் நோக்கில் ஓ.ம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தைத் தீட்டுகிறார். அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல்காரர்கள் என அவ்வளவு பெரிய குழுவைச் சாய் பல்லவி காலி செய்தாரா? மம்மூட்டியும் தனுஷும் என்ன ஆனார்கள்? உண்மையில் தனுஷ் யார்? செம்மரங்களுக்காக எவ்வளவு செங்குருதிகள் சிந்தின போன்ற அம்சங்களுடன் ஓ.ம் எழுதப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செம்மரக் கடத்தல் தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை ஆரம்பத்தில் தகவல்கள் பாணியில் காட்சிகளை எழுத, அவை ஆர்வத்தைத் தூண்டுகிறது. திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து செம்மரக் கட்டைகளை வெட்ட ஆந்திர வனப்பகுதிகளுக்குள் செல்லும் தமிழர்கள் துப்பாக்கி சூடுகளாலும் மற்ற விஷயங்களாலும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் கூறும் போது சட்டவிரோதமான செயலைச் செய்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே என்கிற கோணத்தில் சிலவற்றை சொல்ல முயன்றிருக்கிறார். செம்மரங்களைக் கடத்தினாலும் மம்மூட்டி நல்லவராகக் காட்டப்பட்ட, இவரையா பிடித்துத் தரப்போகிறோம் என பல திரைப்படங்களில் வருந்தும் உளவுத்துறை காவலர்கள் போன்றே இப்படத்திலும் காட்சிகள் வசனங்களும் எழுதப்பட்டிருப்பது பலவீனமாக இருக்கிறது.
Advertisement
Advertisement
3 மணி நேரத் திரைப்படம் என்பதால் உணர்வுப்பூர்வமான இடங்களும் கைகொடுக்காமல் செல்ல, ஏதோ கதை சொல்கிறார்கள்; இதில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? எங்கே நியாயம் இருக்கிறது என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. முடிவும், எதிர்பார்க்கப்பட்ட கிளைமேக்ஸ். படத்திற்கு ஆபரேஷன் எனப் பெயரிட்டவர்கள் திரைக்கதையில் ஆபரேஷனை செய்யவில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கொத்து கொத்தாக கதைதான் சொல்லப்படுகிறதோ தவிர அதன் சாரம்சம் உடைபட்டுக்கொண்டே இருக்கின்றன. புஷ்பா திரைப்படத்தில் செம்மரத்தை வெட்டுவது தவறான செயல் என எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இயற்கையின் மீது யாருக்கு என்ன கவலை? அதே போல், ஓ.ம் திரைப்படத்திலும் நம்முடைய ஜன்னல்கள், கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள், பேப்பர்களில் மரங்கள் இருக்கும் போது செம்மரத்தை மட்டும் வெட்டினால் என்ன பிரச்னை? என மம்மூட்டியின் வசனம் இடம்பெற்றிருப்பது சரியானதாகப்படவில்லை.
நடிகர் தனுஷ் தன் திரைப்படங்களில் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை முதல்முறையாக ஏற்று நடித்திருக்கிறார். அக்கதாபாத்திரம் அவருக்குப் பொருந்தினாலும் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் தனுஷின் கதாபாத்திரத்தை காலி செய்யும் வண்ணமே இருக்கின்றன. தனுஷின் அறிமுகக் காட்சியே நீண்ட சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியைப் பார்க்கும் போது நெட்பிளிக்ஸில் வெளியான அதீனா (ATHENA) திரைப்படத்தின் 10 நிமிட அறிமுக சிங்கிள் ஷாட் காட்சியை நினைவுபடுத்தியது. அதன் இறுதியில் கிளர்ச்சியாளர்கள் பாலத்தில் நிற்பதுடன் காட்சி நிறைவடையும். ஓ.மிலும் தனுஷ் தன் சகாக்களுடன் பாலத்தில் நிற்க அந்த சிங்கிள் ஷாட் நிறைவடைகிறது. துரந்தர் பாணியில் கொஞ்சம், புஷ்பா பாணியில் கொஞ்சம் என ஏற்கனவே அறிந்த நாயகர்களின் பிம்பங்களும் தனுஷ் மீது விழுவதால் பொருந்த முடியவில்லை.
நடிகர் மம்மூட்டிக்கு நல்ல கதாபாத்திரம் என்றாலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குப் பெரிதாக அமையவில்லை. ஓ.ம் முன்வெளியீட்டு விழாவில் ஏன் அப்படி பேசினார் என இப்போது புரிகிறது. ஆனாலும் அவர் இடம்பெறும் காட்சிகள் கம்பீரமாகவும் பதற்றமாகவும் எழுதப்பட்டிருப்பது கொஞ்சம் தேவலாம்.
கதை நாயகி சாய் பல்லவிதானா? என்று தோன்ற வைக்கும் அசத்தலான பங்களிப்பைச் செய்திருக்கிறார். வனத்துறையில் பணியில் இருக்கும் போது செம்மரக் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட தந்தையை நினைவில் வைத்து மரங்களைப் பாதுகாக்க அந்த நிழல் உலகத்தை அழிக்க வேண்டுமென சாய் பல்லவி எடுக்கும் முடிவுகளும் பேசும் தைரியமான வசனங்களும் அவருக்கும் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது. கொஞ்சம் முயன்றால் நல்ல ஆக்ஷன் நாயகியாகவும் சாய் பல்லவியால் மிரட்ட முடியும்.
இப்படத்தை ஓரளவேனும் காப்பாற்றிய பெருமை இசையமைப்பாளர் சாய் அபயங்கரையே சேரும். அலேக்கா லோவா, ஃபா ஃபா உள்ளிட்ட பாடல்கள் பார்க்க நன்றாக இருக்கின்றன. மேலும், வீழா வீரா பாடல் பின்னணி இசை இரண்டாம் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது ’மாஸ்’ உணர்வைக் கொடுத்தது. சாய் அபயங்கரால் மிகப்பெரிய படங்களையும் காப்பாற்ற முடியும் என்பதற்கு ஓம் நல்ல உதாரணம்.
ஓ.ம் தொழில்நுட்ப ரீதியாகவும் சில சறுக்கல்களைச் சந்தித்திருக்கிறது. ஒளிப்பதிவில் சில காட்சிகளை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என எண்ண வைப்பது, டப்பிங்கில் சொதப்பல், எடிட்டிங் குளறுபடியால் திரைக்கதைக்கான வேகம் மட்டுப்படுவது ஆகியவை துலக்கமாகத் தெரிகிறது.
திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2015 ஆம் அண்டு செம்மரம் கடத்தியதாகக் கூறி, ஆந்திரப் பிரதேச காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும் படத்தில் முக்கியமான பகுதியாக சித்திரித்து எடுத்துள்ளனர். அக்காட்சி பலமாக இருந்தது. ஆனாலும் ஓ.ம் நல்ல காட்சிகளைக் கொடுத்து பின்னாடியே சோர்வான இன்னொரு காட்சியைத் தூக்கிக் கொண்டு வந்து இறுதியில் சோதனையைக் கொடுத்ததுதான் மிச்சம்.