அப்படி நடக்கவில்லை என்றால் இனி சினிமாவே எடுக்க மாட்டேன்: நடிகர் நானி
நடிகர் நானி தான் தயாரித்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...

நடிகர் நானி தான் தயாரித்த அலியாஸ் ருக்மணி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் நானியின் கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான யுனானிமஸ் புரடக்ஷன்ஸ் அலியாஸ் ருக்மணி என்கிற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் முரளிகாந்த் இயக்கிய இப்படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் டிச. 4 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் நானி, “நம் அனைவருக்கும் இது மிகச்சிறந்த திரைப்படமாக இருக்கும். அலியாஸ் ருக்மணி திரைப்படத்தைத் தயாரித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தின் வெளியீட்டை எதிர்கொள்கிறேன். இப்படத்தை நான் தயாரிக்கவில்லை என்றாலும் இதன் புரமோஷனுக்கு வந்திருப்பேன். அப்படியொரு அற்புதமான திரைப்படம்.
Advertisement
Advertisement
இயக்குநர் முரளி மிகச்சிறந்த எழுத்தாளர். உணர்வுப்பூர்வமான, நிறைவான ஒரு கதையை எழுதியிருக்கிறார். நீங்கள் திரையரங்கைவிட்டு வெளியேறும் போது அழகான ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம் என்கிற நிறைவில் இருப்பீர்கள். அப்படி நடக்கவில்லை என்றால் இனி நான் திரைப்படங்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, நானி தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் ஏ நோபடி என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.