மாறுபட்ட கதைக்கரு... ஆனால்! கார்த்திக் சுப்புராஜின் டோரதி - திரை விமர்சனம்!
கார்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்பட விமர்சனம்...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மதுரையில் 1990-களில் கதை நடக்கிறது. சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களான கார்த்திக் (ரிஷிகாந்த்), சுப்பு (சனந்த்) ஒன்றாகவே வளர்ந்து அடி, தடி என ஆக்ரோஷமான ஆள்களாக மாறுகின்றனர். மதுரைக்கே உண்டான வாழ்வியல் பின்னணியில் ஜாலியாக சென்றுகொண்டிருக்கும் போது, ‘இந்தப் பொல்லாத உலகம் உங்கள் இருவரையும் பிரிக்கும்’ என ஒரு கதாபாத்திரம் சொல்வதற்கு ஏற்ப, கார்த்தியும் சுப்புவும் ஒரு சம்பவத்தால் பிரிந்திருக்க நேர்கிறது. தன் நண்பனின் நினைவுகளில் தூரமாக கார்த்தி வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் சுப்புவைக் கொல்ல அவனது தந்தையே கார்த்தியை அழைக்கிறார். சுப்புவைவிட்டால் நண்பர்களே இல்லாத கார்த்திக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
ஏன் சுப்புவைக் கொல்லச் சொல்கிறார்கள்? நண்பர்களான சுப்பும் கார்த்தியும் என்ன ஆகிறார்கள்?
Advertisement
Advertisement
முதல்பாதி வித்தியாசமான கதைக்களத்தைக் காட்டிவிட்டு, இரண்டாம்பாதியில் முழுக்கவே வேறு ஒரு திசையை நோக்கி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அழைத்துச் செல்கிறார். ஊகமாக சில விஷயங்களை முன்பே கணித்தாலும் கிளைமேக்ஸில் அதிர்ச்சியைத் தரும்படியான காட்சியை வைத்து விவாதமாக மாறியிருக்க வேண்டிய கதைக்கருவைச் சிக்கலானதாகவும் மாற்றிவிட்டார்.
2010-க்களுக்குப் பின் தன்பாலின அடையாளங்களைத் தைரியமாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளில் இன்னும் மாற்றங்கள் தேவைதான். இன்றும் தன்பாலினத்தை உணர்ந்து ஆண் - ஆண்; பெண் - பெண் காதல் உணர்வுகளைப் பலரிடமிருந்தும் மூடி மறைக்க வேண்டிய சூழலும் இருக்கின்றன. ஒரு சிலர் அந்த அடையாளங்களை வெளிப்படுத்தினாலும் பெரும்பாலும் மறைத்து வாழ வேண்டிய நெருக்கடிகளுக்கும் ஆளாகின்றனர். ஆனால், டோரதி அந்த ’ஊர் வாயை’ உடைக்க முற்பட்டாலும் திடீரென முளைக்கும் அந்தக் காதல் உணர்வு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டதாக எஞ்சுகிறது. திரைக்கதை எழுத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இப்படத்தை விவாத தளத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.
நண்பனைக் கொலை செய்வதா? இல்லை அவனுக்குள் இருக்கும் பாலின அடையாளத்துடன் அவனை வாழவிடுவதா? என்கிற இரண்டே கோணங்களுக்கான எழுத்தை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால், திடீரென எதிர்பாராத முடிவை எடுத்து குழம்ப கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அக்காட்சி மிக செயற்கையாக வலிந்து திணிக்கப்பட்டது போல் இருந்ததால் கதையின் நோக்கமே கேள்விக்கு உள்ளாகும்படி ஆகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒவ்வொரு பின்னணி இசையும் உணர்வுகளுக்குப் பெரிய பலத்தைக் கொடுக்கின்றன. கல்யாண விருந்து, முத்துமணி பாடல்களைத் திரையில் கேட்கும்போது அதன் ஒலி துல்லியம் சிறப்பாக இருக்கிறது. வன்முறைக்கு, நட்புக்கு, காதலுக்கு என தனித்துவமான இசையைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். முக்கியமான இடத்தில் ராஜாவே பாடிய குரல் வருகிறது. உலுக்கி எடுக்கும் கந்தர்வக் குரல்! கடந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ உணர்ச்சிகளுக்கு இளையராஜா ஆயிரக்கணக்கான இசைகளைக் கொடுத்தாலும் இப்படத்தில் பேசப்பட்ட உணர்வுக்கு மரியாதை கொடுத்து அதிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். டோரதிக்காக இளையராஜாவை நிறைய பாராட்டலாம்.
நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக சாத்தியம் கொண்டவர்கள். எல்லா எமோஷன்களையும் நடிப்பால் கடத்திவிடுகிறார்கள். வசனங்களும் உடல்மொழியும்கூட கைகொடுப்பதால் காத்திரமான நாயகர்கள் என்கிற எண்ணத்தையும் தருகின்றன. எதிர்காலத்தில் இருவருக்கும் நல்ல வாய்ப்புகள் அமையலாம். நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் முக்கியமான திருப்புமுனையாக அமைகிறார். சிங்கிள் ஷாட் காட்சியொன்று அந்தப் பதற்றத்தைக் கடத்துகிறது.
மேலும், நடிகர்கள் முத்துக்குமார், ஜீவா சுப்ரமணியம், சௌந்தர்ராஜன் ஆகியோரும் தங்களுக்கான பணியைச் சிறப்பாக செய்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் காட்சியமைப்பாகவும் டோரதியில் தனக்கென உரித்தான கோணத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதையைச் சொல்லியிருக்கிறார். பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் கிணற்றைக் காட்டிய விதம், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ரிஷியும் சனந்தும் பேசிக்கொள்ளும் காட்சி, சாதிய மனநிலையை வெளிப்படையாகக் காட்டும் இடம் என வழக்கமான கமர்சியலில் இருந்து கதைக்கு முக்கியத்துவமான இடங்களையும் கார்த்திக் சுப்புராஜ் நன்றாக எழுதியிருக்கிறார். ஆனால், போதாமைகள் கொண்டதாகவும் அவை இருக்கின்றன.
டோரதி என்றால் கடவுளின் பரிசு என்று பொருள். இப்படமும் ஆண் - பெண் அடையாளங்களைத் தாண்டி வாழும் திருநங்கைகளின் வாழ்க்கையையும் வலியையும் சொல்ல முயன்றிருக்கிறது. இறுதி ஷாட்டில் கார்த்திக் சுப்புராஜ் எனும் இயக்குநரின் தைரியம் பாராட்ட வைத்தாலும் இன்னும் கவனமாக இதனைக் கையாண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் டோரதி கொடுக்கிறது!
The movie Dorothy, directed by Karthik Subbaraj, has been released in theaters today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.