முகப்பு
திரை விமரிசனம்

ஹீரோவாக மிளிரும் சண்முக பாண்டியன்! ஆனால் கதை..? படைத்தலைவன் : திரை விமர்சனம்

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் பரவலான எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

Updated On : 13 ஜூன் 2025, 3:23 pm IST
படைத்தலைவன் பட போஸ்டர்
பகிர்:

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் பரவலான எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம் எப்படி இருக்கிறது? 

மதுரை வீரன், சகாப்தம் உள்ளிட்ட திரைப்படங்களைவிட இந்த படைத்தலைவனில் நடிகர் சண்முக பாண்டியனின் மாறுபட்ட தோற்றமே பலருக்கும் இந்த திரைப்படத்தின்மீது ஆர்வத்தைக் கூட்டியது. அதிலும் டிரைலரில் காட்டிய காடு, யானைக் கூட்டம், யானைகளுக்கு நடுவில் தலைமுடி காற்றில் பறக்க சீறிப்பாய்ந்த சண்முக பாண்டியன் என விரிந்த காட்சிகள் பலரையும் படத்திற்காகக் காத்திருக்கச் செய்தது எனலாம். ஆனால் படம் திட்டமிட்டபடி கடந்த பொங்களுக்கோ, அல்லது மே மாதமோ வெளியாகாமல் தாமதித்து, இப்போது வெளியாகியிருக்கிறது. இந்தக் காத்திருப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறதா என்பதை 2 மார்க் கேள்விக்கான பதில் போல சுருக்கமாகக் கூறுவதைவிட 10 மார்க் கேள்வியாக சுற்றிவளைத்து விரிவாகக் கூறுவதுதான் சரியாக இருக்கும்!

படைத்தலைவன் படத்தில் நடிகர் சண்முக பாண்டியன்

முதலில் கதையெனப் பார்த்தால், சேத்துமடை எனும் கிராமத்தில் நாயகன் வேலு அவரது அப்பா, தங்கை, வளர்ப்பு யானை மணியன் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கடன் பிரச்னைகள் கைமீறும் வேளையில் உடன்பிறப்பாக நினைத்து வளர்க்கப்படும் யானையை வைத்து சம்பாரிக்க நினைக்கிறார்கள். அதனால் யானைக்கு உருவாகும் பிரச்னைகளிலிருந்து வேலு எப்படி யானையைக் காப்பாற்றுகிறார் என்பதே படைத்தலைவனின் Spoiler அற்ற கதைக்களம்! 

Advertisement

Advertisement

முதலில் படத்தின் தலைவனான சண்முக பாண்டியனைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில், மற்ற படங்களைவிட இதில் முழு ஹீரோவாக திரையில் ஜொலிக்கிறார். தலைநிறைய முடியுடன், அடுக்கடுக்கான ஆம்ஸுடன் பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகளில், இதுவரை கொஞ்சம் குறைவாக இருந்த 'ஹீரோ கலை' இப்போது முழுதாக வந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. சண்டைக் காட்சிகளிலும், மாமனை முறைக்கும் காட்சிகளிலும் கதாப்பாத்திரமாகவே தெரிகிறார். ஆனால் அவரை இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தவில்லையோ எனத் தோன்ற வைத்துவிடுகிறார் இயக்குநர் அன்பு.

படைத்தலைவன் படத்தில் நடிகர் சண்முக பாண்டியன்

இந்தக் கதைக்களத்தையே அவர் முழுதாக பயன்படுத்தவில்லையோ என்பது மற்றுமொரு பெரிய சந்தேகம்! சண்முகபாண்டியனுக்கு மெனக்கெட்டு நடிக்கும் அளவில் காட்சிகள் எழுதப்படவில்லை என்றாலும் இருக்கும் காட்சிகளிலும் அவரது இயல்பான நடிப்பை திரையில் கொண்டுவர இயக்குநர் தவறியிருக்கிறார். இது ஹீரோவுக்கு மட்டுமில்லாமல் மற்ற அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தும்!

படத்தில் வரும் எந்தக் கதாப்பாத்திரத்தையுமே சரிவர எழுதாததாகவே தோன்றுகிறது. சண்முக பாண்டியனின் அப்பா, தங்கை, அவரது நண்பர்கள், மாமா, வனத்துறை அதிகாரி எனப் பல இடங்களில் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்திருப்பது தெரிகிறது. ஹீரோவிற்கும் அந்தக் குடும்பத்திற்கும் இடையேயான பாசப்பிணைப்பு அல்லது அந்த யானைக்கும் அந்தக் குடும்பத்திற்குமான உறவு, ஹீரோவிற்கும் யானைக்குமான உறவு என எதையுமே கதையின் போக்கு உணர்த்தவே இல்லை! ஹீரோ யார்? அவரது பலம், பலவீனம், அவர் எப்படிப்பட்ட ஆள், வறுமையில் இருக்கும் குடும்பத்திற்கு அவர் என்ன செய்கிறார்? என முக்கியமான விசயங்களுக்கு கவனம் கொடுத்திருக்கலாம்!

படைத்தலைவன் படத்தில் நடிகர் சண்முக பாண்டியன்

அதிலும் வசனங்கள் எதுவுமே கதாப்பாத்திரங்களைப் பற்றி புரிந்துகொள்ளவோ, அல்லது கதையும் போக்கைத் தெரிந்துகொள்ளவோ, காட்சிகளின் அழுத்தங்களை உணர்த்தவோ பயன்படாதது மற்றுமொரு குறை! உணர்வுப்பூர்வமான வசனங்களில் “கிரிஞ்” Tag-ஐ பெற்றுவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் காணக்கிடக்கின்றன.  

படத்தில் வெகுசில கதாப்பாத்திரங்களைத் தவிர மற்ற அனைவருமே செயற்கைத் தன்மையுடன் நடிப்பை வெளிப்படுத்துவது படத்தோடு யாரும் ஒன்றுவதைத் தடுத்துவிடுகிறது. முக்கியமாக முதல்பாதியின் வில்லனாக வலம் வரும் மாமா கதாப்பாத்திரம் பார்வையாளர்களிடம் எந்த பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. பரிட்சயமான நடிகர்களான முனீஸ்காந்த், அருள் தாஸ், ஷ்ரீஜித் ரவி உள்ளிட்டோரைத் தவிர பெரும்பாலானோர், நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கு அந்நியமாகவே தெரிகிறார்கள். எழுத்தைப் போலவே, ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் கூட குறைகள் தெளிவாக தெரியும்படியான வேலைபாடுகளே நடந்திருக்கிறது. 

படத்தின் முக்கியமான இடமாக வரும் கேப்டன் விஜயகாந்த் CGI காட்சிகளுக்கு திரையரங்கம் அதிர்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் மிகக் குறைவு என்றாலும், அவரைக் காட்டும் காட்சிகள் உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வைத் தந்துவிடுகின்றன.  

படத்தின் முக்கியமான அங்கமாக இருக்கும் அந்த மலைக்கிராமத்தின் காட்சிகள் ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்தாமல் இருந்தாலும் பெரும்பாலும் போரடிக்கத்தான் வைக்கின்றன. அந்த கிராம மக்களின் வாழ்க்கை முறை அவர்களும் படும் கஷ்டங்களை கொஞ்சமேனும் தெளிவாகக் காட்டியிருக்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் கிடைக்கும்! 

இசைஞானி இளையராஜாவின் இசை படத்தோடு பொருந்தும் வகையில் இருந்தாலும், மனதில் நிற்கும் அளவில் இல்லாததும் ஒரு ஏமாற்றம்தான்!

முதல்பாதியில் ஒரு நோக்கத்தோடு நகரும் கதை, இரண்டாம் பாதியில் வேறொரு கோணம் எடுப்பது நாம் சில வெற்றிப் படங்களில் பார்த்த முயற்சிதான் என்றாலும் இந்தக் கதையில் அந்த முயற்சி பெரிதாக வெற்றிபெறவில்லை.

படைத்தலைவன் படத்தில் நடிகர் விஜயகாந்த் CGI

முடிவாகச் சொல்லப்போனால், இந்தப் படத்தில் கதைக்கும் திரைக்கதைக்கும், மீத நடிகர்கள் தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், சூப்பரான ஆக்சன் ஹீரோவாக திரையில் மிளிரும் சண்முக பாண்டியனோடு சேர்ந்து படமும் மக்கள் மனதில் நின்றிருக்கும்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments