FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோலிவுட் ஸ்டூடியோ - 12-10-26

'மகுடம்' படத்துக்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

18 அக்டோபர் 2026, 2:21 pm IST
பகிர்:

இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

'மகுடம்' படத்துக்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில்கூட அவர் பங்கேற்கவில்லை. படப்பிடிப்பில் என்னதான் ஆச்சு? விஷால் இப்போது எப்படி இருக்கிறார் ?

Advertisement

Advertisement

'மதகஜராஜா'வின் மிராக்கிள் வெற்றிக்குப் பின் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதில் விஷாலின் ஜோடியாக தமன்னா, யோகிபாபு நடித்து வருகின்றனர். இது தவிர சுந்தர் சி டீமின் வழக்கமான நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து கொல்கத்தா, கோவாவில் படப்பிடிப்புகள் நடந்தன. அங்கே கனல் கண்ணன் மாஸ்டரின் ஆக்ஷனில் ஏராளமான ஃபைட்டர்கள் சூழ, சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விஷாலின் முதுகுத் தண்டில் அடிபட்டது. ஆனால், வலியைப் பொருட்படுத்தாமல் அன்றைய காட்சியை அவர் முடித்துக் கொடுத்தார். 'இன்னும் ஒருநாள் தானே ஷூட்டிங். நாம கிளம்பி வந்துட்டா, சிரமம் ஏற்படும்' எனக் கருதி, அடுத்த நாளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதோடு கோவா ஷெட்யூல் நிறைவுற்றது.

பின்னர் வலி அதிகமாக இருக்கவே, மருத்துவர்களிடம் காண்பித்திருக்கிறார் விஷால். அதனை தொடர்ந்து அவரை மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆகையால்தான் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்துக்குக்கூட அவரால் வர இயலாமல் போனது.

'இதற்கு முன் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் இது எதிர்பாரா விபத்து' என்கிறார் விஷால்.

பான் இந்தியா படமாக 'டேர் டெவில்'!

நடிகர் அஜித்தின் படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தைத் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், அது குறித்து நீண்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

ஆனால், அஜித்தின் விருப்பப்படி அந்த பேச்சுவார்த்தைகள் முடியாத காரணத்தால், சொந்த தயாரிப்பு வேண்டாம் என்ற தன் நீண்ட நாள் கொள்கையை மாற்றி, இறுதியில் தன் மனைவி ஷாலினி பெயரில் படத்தை சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்தார்.

படத்தின் பெயர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத்தின் பெயர்கள் மட்டும் கொண்டு ஆகஸ்ட் 3 அன்று அதிகாரபூர்வமாக படத்தின் அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு முன்பு நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கார் ரேஸிங் பந்தயங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டு சென்னைக்கு வராமல் வெளிநாடுகளில் இருந்தார் அஜித்.

இந்த நிலையில், தற்போது இப்படத்தை பெரிய அளவில் பான் இந்தியா படமாக தயாரிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த மாதிரி இயக்குநர் ஆதிக்கின் கதையும் சரியாக அமைந்து விட்டதால், படு தீவிரமாக இப்போது படப்பிடிப்பு தொடங்கும் வேலையில் இறங்கி விட்டார்கள்.

முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, முதலில் மோகன்லாலை அணுகியிருக்கிறார்கள். அவரது மேனேஜர் கேட்ட தொகை படத்தின் தயாரிப்பு செலவின் திட்டமிடலுக்குச் சரி வராமல் போக, இப்போது மலையாளத்தில் புகழ்பெற்று வரும் உன்னி முகுந்தனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

கன்னடத்தில் கிச்சா சுதீப்பிடம் முதலில் பேச்சுவார்த்தை நடக்க, அவரால் தேதிகள் தர முடியாமல் உபேந்திராவிடம் இப்போது பேசுகிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க அநேகமாக முடிவாகிவிட்டது என்கிறார்கள்.

அஜித் கார் பந்தயம் எல்லாம் முடித்து அடுத்த மாத கடைசி சென்னையில் கால் வைத்த அடுத்த பத்து நாள்களில் 'டேர்டெவில்' படப்பிடிப்பு தொடங்கிவிடுமாம்.

டோரதி படக் குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தனுஷ், சூர்யா, மணிரத்னம், உபேந்திரா எனப் பல திரைப்பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், 'நடிகர் ரஜினிகாந்த் 'டோரதி' படத்தை வெகுவாகப் பாராட்டி, ஒரு மணி நேரம் பேசினார். 'இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஹாட்ஸ் ஆஃப்' என அவர் கூறியதை எப்போதும் மறக்க மாட்டேன். காற்றில் பறக்கிறேன். லவ் யூ தலைவா!' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார்.

மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்', 'மாரி' ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் 'லவ்'. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் அக்.2 -ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

இந்த சீரிஸ் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது குறித்துக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், 'சமூக வலைதளங்களில் இருந்து விலகிய பிறகு எனக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது. தேவையில்லாத மன அழுத்தங்களில் மற்றும் ஒப்பீடுகளில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது. சமூக வலை

தளப் பயன்பாட்டைக் குறைத்ததால் எனது சொந்த வேலைகள் மற்றும் கலைப் பயணத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த முடிகிறது. என் வாழ்க்கையில் நான் தற்போது இருக்கும் இந்த இடத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியிருக்கிறார்.

'நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றி இருக்கின்றன. எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்புகிறது.

என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது' என்று பதிவிட்டு கடந்த வருடம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா லட்சுமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments