பயண பயம்
என் மகன்தான். இருந்தும் எனக்குப் பிடிக்கவில்லை. பெற்ற தாய்க்கு மகன் மீது வெறுப்பு வருமா என்றால் சில சம்பவங்களால் வரும்.
திங்கள்செல்வன்
என் மகன்தான். இருந்தும் எனக்குப் பிடிக்கவில்லை. பெற்ற தாய்க்கு மகன் மீது வெறுப்பு வருமா என்றால் சில சம்பவங்களால் வரும்.
கார் ஓட்டும்போது, செல்போனில் பேசிக் கொண்டு, வாட்ஸ் ஆப் தகவல் பார்த்துக் கொண்டு வரும் மகன் மீது எனக்கு வெறுப்பாகிவிட்டது. என் மகனை மட்டுமல்ல, வண்டியோட்டும்போது செல்போன் பார்க்கும் யாரையும் பிடிக்கவில்லை. இரு சக்கர வாகனத்தில் கழுத்தொடிய போனில் பேசிக் கொண்டு செல்லும் எவனையும் எனக்குப் பிடிக்கவில்லை.
Advertisement
Advertisement
பெண்களில் இப்படிப் பேசுகிறவர்கள் மிக மிகக் குறைவு. அப்பா அல்லது அண்ணன், தம்பி பைக், ஸ்கூட்டர் ஓட்ட, பின்னால் அமர்ந்துகொண்டு ரீல்ஸ் தள்ளிக் கொண்டு அல்லது தகவல் பதிவு செய்தபடி பயணிக்கும் பெண்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால், காரில் போகும் பெண்கள் செல்போன் பார்த்தால் அவர்கள் மீது ஏனோ எனக்கு எரிச்சல் வருவதே இல்லை. இது ஏன்? என்று புரியாமல் என் குடும்ப டாக்டரிடமே கேட்டுவிட்டேன்.
'அது ஒண்ணுமில்ல மிடில் கிளாஸ் மென்டாலிட்டி' என்றார்.
'என்ன சொல்றீங்க டாக்டர், எனக்குப் புரியல'
'நீ ஒரு மிடில் கிளாஸ். இரு சக்கர வாகனத்தை உனக்கான வாகனமாகக் கருதுகிறாய். அதில் போகிற பெண்களை உன் மகள், அக்கா தங்கை போல ஒப்பிடுகிறாய். ஆகவே, ஐயோ இந்தப் பொண்ணு கெட்டுப்போகிறாளே என்ற பதற்றம் உனக்கு ஏற்படுகிறது. கார் அப்படியல்ல. அது உயர் வருவாய்ப் பிரிவு. அதில் போகும் பெண்கள் எக்கேடு கெட்டாலும் உனக்கு வருத்தமே இல்லை. இது ஒரு ஐடென்டிபிகேஷன் பிராப்ளம் .'
'இப்ப கார் வாங்கி விட்டோமே!'
'ஆனாலும் இன்னமும் நீங்க டூவீலரை விட்டு வெளியே வரவில்லை.'
எனக்கு அந்தப் பதில் கொஞ்சம் திருப்தி தருவதாக இருந்தது . எனக்கு கார் ஓட்டத் தெரியாது. என் மகன்தான் கார் ஓட்டுகிறான்.
மகனிடம் நேரடியாகச்சொல்லி விட்டேன். 'வண்டி ஓட்டும்போது செல்போன் பேசாதே?'
அவன் இந்தக் காலத்துப் பையன். அவனது ஒரே கேள்வி, 'வாட் இஸ் யுவர் பிராப்ளம். நான் அப்படித்தான்.'
இந்த மாதிரி வேளையில் அவனுக்கு நான் அம்மா அல்ல. ஒரு நபர். தேவையில்லாமல் தலையிடுகிற , புத்தி சொல்கிற ஓர் ஆள். எவளாவது ரீல்ஸ்ல மொக்கையா பேசினாலும் இளித்துக்கொண்டு பார்ப்பான், கேட்பான். நான் பேசினால் அவனுக்குப் பொறுக்காது. நானும் இனி ரீல்ஸில் பேசித்தான் அவனுக்குப் புரியவைக்கணும் போல.
'வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது சட்ட விரோதம் என்பதையும் தாண்டி அது ஒரு மாபெரும் சமூக அலட்சியம்' என்று கருதுகிறேன். 'அடுத்த மனிதரை ஒரு மனிதனாக நினைக்காத மரத்துப் போன செய்கை' என்பது என் வாதம்.
இன்றைய இணைய தலைமுறை -அதுதான் ஜென் இசட்- இப்போதெல்லாம் பெற்றோரை வாயடைக்க சில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். நெகட்டீவ் எனர்ஜி, காஸ்லைட்டிங், மகன் பதில் சொல்கிறான், 'செல்போன் இல்லாத காலத்தில் விபத்து நடக்கவில்லையா? உன் கற்பனைதான் உன் எதிரி' ஆமாம். 'முந்தைய காலத்திலும் விபத்துகள் நடந்தன. சாலைகளில் மிகக் குறைவான வாகனங்களே சென்ற நாளிலும் விபத்துகள் நடந்து மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அடிபட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவை விபத்து. அந்த விபத்துகளில் சமூகத்தின் மீது இன்றைய அலட்சியம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
'என்னால் போன் பேசிக் கொண்டு, சாலையையும் பார்க்க முடியும்' என்கிறான். அது சாத்தியம்தான்.
நான் பள்ளியில் படித்தபோது அஷ்டாவதானி- எண்கவனகம் செய்பவர் வந்திருந்தார். ஒரே நேரத்தில் எட்டுவிதமான செயல்பாடுகளைக் கவனித்துச்சொல்லும் ஆற்றல் கொண்டவர். ஒரு மாணவி மணி அடிப்பாள், ஒருத்தி திருக்குறள் சொல்வாள், ஒருத்தி சினிமா பாட்டு பாடுவாள். ஒருத்தி கலர் கர்ச்சீப்பை எடுத்துக்காட்டி மறைப்பாள்... அவர் அனைத்தையும் பிறகு சொல்வார். எத்தனை மணி அடித்தாள், என்ன திருக்குறள் சொன்னாள், என்ன கலர் கர்ச்சீப் காட்டினாள், அது என்ன சினிமா பாட்டு எல்லாமும் சொல்வார்.
எண்கவனகம் போல இன்றைய இளைஞர்களுக்குப் போனையும் சாலையையும் கவனிக்கும் - இரு அவதானிப்பு சாத்தியம்தான். ஆனால், அது எத்தனை நேரம் என்பதுதான் என் கேள்வி. சில விநாடிகளுக்குச்சாத்தியமாகலாம். தொடர்ச்சியாக கவனத்தை ஒருநிலைப்படுத்த முடியாது என்பது என் வாதம். 'இன்று செல்போனில் எல்லா வசதிகளும் உள்ளன. டிரைவிங்கில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்..' என்று சொல்லி கட் செய்யலாம். அதை ஆட்டோ மெசேஜ் செட் செய்து வைக்கலாம். அதற்கு செல்போனில் வசதி இருக்கிறது. தொடர்ந்து எவ்வளவு நேரம் இரு அவதானிப்பு சாத்தியம்? தொடர்ந்து பல நிமிடங்களுக்கு வண்டி ஓட்டியபடி சிரித்து சிரித்துப்பேசுவதற்கு அப்படி என்ன இருக்கு?
'நீ எறங்கி ஆட்டோவில போ?'
அதுதான் கடைசியா எங்கள் வாதம் முடிந்த இடம். அதன்பிறகு நான் இதைப் பேசுவதில்லை.
பிறகு, நான் அவனுடன் காரில் போகிறபோது கண்ணை மூடிக்கொள்வது வழக்கமானது. அவனுக்காகத்தான் கண்ணை மூடிக் கொண்டு வருகிறேன் என்பது தெரியும். ஆகவே வேண்டும் என்றே பிரேக் போடுவான். நான் 'திடுக்'கென்று முன்சரிந்து பதறிக்கொண்டு பார்ப்பேன். அவன் சிரித்துக்கொண்டே வண்டியை இயக்குவான்.
அதன் பிறகு காரின் பின் இருக்கையில் உட்காந்து கொண்டு வீதியில் கடந்து செல்லும் பெயர்ப்பலகைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
இப்போதெல்லாம் ஹெட்போன் வந்துவிட்டது. அதை காதில் வைத்துக்கொள்கிறார்கள் எப்போதும். எந்த நேரமும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நடக்கிறபோது, வண்டியோட்டுகிறபோது, டி.வி. பார்க்கிறபோது, சாப்பிடுகிறபோது... தாம்பத்தியத்திலும்கூட அப்படித்தானோ? இது ஒரு மனநோய்.
'உலகம் நாசமாய்ப் போகட்டும். இந்த ஓட்டத்தில் என் மகனுமா?' என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது 'டம்' என்ற சத்தத்துடன் அதிரடி பிரேக். கார் குலுங்கி நின்றது. இருக்கையில் முட்டி மோதி, சமநிலைக்கு வந்தபோது, ஒரு இளைஞன் சாலையில் படுத்திருப்பது தெரிந்தது. அவன் எழுந்து பைக்கை நிமிர்த்தினான். மகன் கீழே இறங்கினான்.
தவறு இளைஞன் மீதுதான் என்பது எல்லாருடைய வெறுப்புப் பார்வையும் அந்த இளைஞன் மீது குவிந்ததில் புரிந்தது. முன்பக்கம் பானட் லேசாக நசுங்கி இருப்பதைக் கண்டு, அந்த இளைஞனை முறைத்தபடி நின்றான் மகன். அந்த இளைஞன் தன் பூந்தொட்டி கிராப்பை குலுக்கியபடி, 'ஸாரி ப்ரோ' என்று பைக்கை நிமிர்த்தி, அதில் ஏறி உட்கார்ந்தான். மகன் அவனைப் போக விடாமல் தடுத்தான்.
'அதான் ஸாரி சொல்லிட்டேன்ல...'
'இத எவன் சரி செய்வான்?'
'சின்ன டென்ட். ஒண்ணியும் ஆயிடாது.'
'அதனாலத்தான் சொல்றேன். வந்து சரி பண்ணிக் கொடு'
பைக் சாவியை எடுக்கப் போன மகனை அவன் கோபத்துடன் தடுத்தான். 'அடுத்த என்ன நடக்கும்?' என்று கணித்த என்னால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. இறங்கி மகன் கையைப்பிடித்துக் கொண்டேன்.
'நீ போ தம்பி' என்றேன்.
அவன் அடுத்த நிமிடம் பறந்துவிட்டான்.
மகன் கோபம் என் மேல் திரும்பியது. அமைதி காத்து தேங்கி நின்ற வாகனங்கள், பிரச்னை முடிந்ததும் அலறத் தொடங்கின. மகன் காரில் ஏறியதும் நானும் வேகமாக ஏறி உட்கார்ந்து கொண்டேன். வண்டியைச் சற்றுத் தொலைவில் ஓரம்கட்டி, நிறுத்தினான்.
'நீ எதுக்கு இறங்கின. என்னோட வந்தியா வாய மூடிக்கிட்ட இருக்கணும்.'
'எவ்வளவு திட்டினாலும் அம்மா என்ன செய்துவிடுவாள். ஆனால் அடுத்தவன் அப்படியா. இது ஆயிரம் ரூபாய் நஷ்டத்துடன் போகும். அடிதடி என்றால் நாம்தான் அவமானப்பட வேண்டும் . இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில், என்ன நடந்தது என்று விசாரிப்பதில்லை. இரு தரப்பின் பின்புலம் என்ன, அவர்கள் யார் என்றுதான் விசாரிக்கிறார்கள். குற்றத்தின் தீவிரத்தை வேலை, ஜாதி, கட்சி, பதவி போன்றவையே தீர்மானிக்கின்றன.'
'தப்பு என்பேர்லனு நீயே முடிவு கட்டிட்ட, இல்லையா...'
'எல்லாருக்கும் அவன் மேல தப்புன்னு தெரியும். ஆனா ஒருத்தனும் வாயத் தொறக்கல. ஏன்?'
'அதுக்காக... அவன போகச் சொல்லுவியா...'
இளைஞர்களின் சாதனைகளை பத்திரிகைகளில் படிக்கிறபோது புதியதோர் உலகம் வந்துவிட்டதாக மனது லேசாகிறது. ஆனால் வாழ்க்கையில் நாம் பார்க்கும் இளைஞர் கூட்டம் வெறும் தத்திகளாகவும் அராத்துகளாகவும் , மது, மாது, ஜாலி மட்டும்தான் வாழ்க்கை என்பதாகவும் திரிவதைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. உலகம் தெரியாத , புரியாத முட்டாள்களாக இருக்கிறார்கள்.
'பேசினால் பிரச்னை பெரிதாகும். கோபத்தைக் கொட்டித் தீர்க்கிறான்' என்று விட்டுவிட முடியவில்லை. ஒரு மகன் தனது தாய் ஒரு பிரச்னையை சுமுகமாக முடித்துவிட்டாள் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டாமா! இதை உணர முடியாமல்போனால் எதைத்தான் இவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
நான் அவன் காரில் ஏறுவதையே நிறுத்திக்கொண்டேன். இதுதான் காரணம் என்று நானும் சொல்லவில்லை. இதுக்குத்தானே நீ ஏறுவதைத் தவிர்க்கிறாய் என்று அவனும் கேட்கவில்லை. கிளையில் இருந்து சருகு உதிர்வதுபோல இயல்பாக நடந்தது. அதன் பிறகு ஆட்டோவில் போகத் தொடங்கினேன்.
ஆட்டோ டிரைவர்களும் இணைய அடிமைகளாக இருக்கிறார்கள். பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஓ.டி.பி. கேட்பதற்காக கொஞ்சம் நம் முகத்தைப் பார்ப்பதோடு சரி. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேச்சு முடிவதில்லை. ஆட்டோவின் ஒரு மூலையில் தொங்குகிற கியு.ஆர். கோட் அட்டையை காட்டிவிட்டு மீண்டும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். மகனை தட்டிக் கேட்க முடிகிறது. என்னால் இவர்களிடம் ஒன்றும் பேச முடியாது.
ஆட்டோ போகிற வேகம், ராங் சைட் கட், ராங் ரூட், எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆட்டோ முக்கோண வடிவம். கூட்டத்துள் ஆட்டோ புகும்போது பக்கத்தில பாய்ந்து வரும் இரு சக்கர வாகனத்தின் ஹேண்டல் பார் ஆட்டோவுக்குள் எட்டிப் பார்த்து நூலிழையில் விலகும். எனக்குப் பதற்றமாக இருக்கும். எங்கே இவன் நம்மை கவிழ்த்துவிடுவானோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.
சிநேகிதி அறிமுகத்தில் ஒரு மூத்த ஆட்டோ டிரைவர் கிடைத்தார். அவரிடம் மாத வாடகை பேசிக் கொண்டேன். அவர் நல்ல மனிதர் . இந்தப் பரபரப்புக்கு நடுவே பொறுமையாக வண்டி ஓட்டுவார். கொஞ்சம் நிம்மதியான பயணமாக அமைந்தது. ஆனால் அவரும் பேசிக் கொண்டே இருந்தார். செல்போனில் அல்ல... என்னோடு. கண்டபடி ஓட்டிச் செல்லும் இளைஞர்களைத் திட்டுவார். எனது பதிலுக்காக என்னைப் பார்ப்பார். நான் மெலிதாகச்சிரிப்பதோடு சரி.
வலது பக்கம் வந்து, ஆட்டோ முன் பாய்ந்து ஓவர்டேக் செய்யும் இளைஞர்களைப் பார்த்தால் போதும், 'இதெல்லாம் வூடு போய் சேருமாம்மா... நாயி.' என்று சத்தமாகச் சொல்வார். எவனாவது காதில் விழுந்து திரும்பி வந்து விடுவானோ என்று பயந்த நேரங்கள் அதிகம். அவருக்கு இந்தப்பகுதியின் போலீஸ்காரர்களின் பழக்கம் உண்டு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி என்பதால், எல்லா போலீஸாருக்கும் மெல்லிய புன்னகை அல்லது விசாரிப்புடன் கடந்து செல்வார். எல்லாம் சரி. ஆனால் இளைஞர்களை திட்டித் தீர்ப்பார்.
'இந்த 250 சி.சி. வண்டிக்கு நம்ம ரோடு சரிபடாதும்மா. இதெல்லாம் வெளிநாட்டுக்கு சரி. நம்ம ஊர் ரோட்டுக்கும் கூட்டத்துக்கும் சரியில்ல. அனுமதிக்கவே கூடாது. எல்லாம் லஞ்சம்மா. கட்சித் தலைவன் எவனும் லஞ்சத்தை காசா வாங்குறதில்லம்மா. எல்லா கம்பெனி ஷேர்தான்.'
நான் புன்னகைப்பேன். இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞனின் முதுகில் ஓட்டிக் கொண்டு செல்லும் பெண்கள் இவரது கோபத்தை கிளறிவிடுபவர்களாக இருக்கிறார்கள்.
'என்னத்த நம்பி இவனோட போவுதும்மா...' என்று என்னிடம் கேட்பார். 'நம்ப பிரண்ட் போலீஸ்காரர் சொல்றார்.. இவனுங்கள 90 சதவீதம் வெட்டிப் பசங்க. அப்பன் ஆத்தா காசுல ஊர் சுத்தற பசங்க' என்பார். இருக்கலாம். 'இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும்?'
'டேய் நாதாரி, டேய் பண்ணாடை...'
யாரையாவது திட்டிக் கொண்டே வருவார். எவனாவது வண்டியைத்திரும்பிக் கொண்டுவந்து மறிப்பானோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். நல்ல மனிதர். ஆனால் பேசுவதுதான் பிடிக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக, ஒருநாள் சொன்னார்.
'அம்மா! பொண்ணு பெங்களூர்ல ஐ.டி. கம்பெனியில வேலை பாக்குது...' என்ற அவரது முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தொடர்ந்து, 'மாசமாக இருக்கு. கூட இருக்கணும்னு ஆசைப்படுது. நானும் சம்சாரமும் போறோம். நா உங்களுக்கு வேற ஆட்டோ ஏற்பாடு பண்றேன்' என்றார்.
'வேண்டாம். என் பையன் நானே விடறேம்மான்னு சொல்லிட்டு இருக்கான்' என்று புன்னகையுடன் ஒரு பொய் சொல்லி மறுத்துவிட்டேன்.
இப்போது நான் புதிய வழியைக் கையாளுகிறேன். வீட்டில் இருந்து சீக்கிரமே கிளம்பி, 750 மீட்டர் தூரத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஓரமாக நடந்து செல்கிறேன். மீண்டும் 1,200 மீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கும் நடந்தே செல்கிறேன். கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டே நடந்து விடுகிறேன்.
'ஏன் நடக்கிறாய்? ஆட்டோவில் செல்வதுதானே, மகன் கிட்ட சொன்னால் போகிற வழியில் இறக்கிவிடப்போகிறான்' என்று எல்லாரும் கேட்கிறார்கள், ஆலோசனை சொல்கிறார்கள்.
'சும்மா ஒரு பிசிகல் ஆக்டிவிடி வேண்டாமா... இப்படியாகத்தான் வாக்கிங் போக முடியுது' என்று சமாளித்து வருகிறேன்.
மகன் எங்க குடும்ப டாக்டரிடம் புகார் சொன்னான்.
நான் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னபோது, 'வாழ்க்கையின் அசுர வேகம் உங்களை அச்சுறுத்துகிறது. நடக்கிறது நடக்கட்டும்னு உங்களால கடந்து போக முடியல. இது ஒருவகை முதுமை நோய். ஆபத்தானது அல்ல. ஆகவே நீங்க நடங்க.' என்று சிரித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.