FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திரை விமரிசனம்

கவின் - நயன்தாரா ஜோடி வெற்றி பெறுமா? Hi திரை விமர்சனம்

கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள Hi திரைப்படத்தின் விமர்சனம்!

27 ஆகஸ்ட் 2026, 9:06 pm IST
Hi
2.5/5
பகிர்:

கதைச்சுருக்கம்; புதிதாக ஒன்றுமில்லை, பிறந்ததிலிருந்து Love-வே செட் ஆகாத கோவையைச் சேர்ந்த ஒரு வயசுப் பையன். பெயர் மயில்சாமி! Arrange Marriage-க்கு அஞ்சுகிறார். இன்னொரு பக்கம் பொள்ளாச்சியில் ஒரு கட்டாயக் கல்யாணம். மணப்பெண்ணின் பெயர் தேவையானி. இருவரும் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். சென்னையில் சந்திக்கிறார்கள். காதலைத் தேடும் “அவனும்”, காதல், கல்யாணம் மீது நம்பிக்கையில்லை எனச் சொல்லும் “அவளும்” நோக்கினார்களா இல்லையா, அவர்களைத் தேடும் குடும்பத்தினரிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே Spoiler இல்லாத சுருக்கம்!

Hi திரைப்பட போஸ்டர்

“என்னப்பா இது, இதே கதைதான் திரும்பவா?” என நீங்கள் கேக்கலாம்! ஆனால் அந்த பழகிப்போன கதையில் என்ன புதிதாக கொடுக்கிறார்கள் என்பதிலேதான் சுவாரசியம் இருக்கிறது. 'நின்னா காதல், நடந்தா காதல்’ எனப் பேசி காதல் கதைகளை ஒரேயடியாக அடித்து ஒதுக்கிவிட முடியாதல்லவா! ரவுடிசம், Revenge, போதைப்பொருள் கடத்தல்கள் என தொடர்ந்து தொல்லை செய்து, நம் மண்டைகளைச் சூடாக்கி, பலருக்கு முடிகொட்ட ஆரம்பித்திருப்பதில் அந்த படங்களுக்கும் பங்கு உண்டு! இந்த நேரத்தில், ஒரு காதல், கல்யாணம், நயன்தாரா என மிதமான, இதமான கதைகள் இப்போதைய தியேட்டர்களுக்கு தேவைப்படுகின்றன. அதை மனதில் வைத்து இந்த மாதிரியான படங்களே வரிசை கட்டி நிற்கின்றன. அதனால் இந்த Mission-ஐ Loki சிஷ்யன் நிறைவேற்றியிருக்கிறாரா என்றால்...

முதலில், நன்றாக இருந்தவை - பர்ஸ்ட்டு ஜூஸு!

Advertisement

Advertisement

Hi திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ்

முதலில் பேசியே ஆக வேண்டிய விஷயம்! கவின் - நயன்தாரா ஜோடி எங்கேயும் நெருடலாகப் படுகிறதா? சில காட்சிகளில் நன்றாக உருத்துகிறது. இருவரும் ஒன்றாக உட்காரவைக்கபடும் காட்சிகளில் கொஞ்சம் உருத்தல்தான், அதை மறுக்க முடியாது. கதையின்படி நயன்தாராவுக்கு கவினைவிட வயது அதிகமோ என்றெல்லாம் யோசித்தால் அது எதுவும் இல்லை. Unpopular Opinion என வைத்துக்கொண்டாலும், இரண்டு வரிக்குமேல் பேசும் அளவுக்கு இந்த ஜோடி பெரிய உருத்தலாகத் தெரியவில்லை என்பதே உண்மை. இருவருமே கதை கேட்கும் நடிப்பை எந்தக் குறையுமில்லாமல் வழங்கியிருக்கிறார்கள் எனச் சொல்லலாம்!

அடுத்த முக்கியமான விஷயமாக கண்ணில் நிற்பது, மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ். ஆரம்பத்திலிருந்தே அவரது கதாபாத்திரம் ஏதோ ஒரு Energy-யை பார்வையாளர்களுக்குத் தருக்கிறது. அவர் இப்போது இல்லை என்பதால் அல்ல, அவருடைய பொருத்தமான நடிப்பும், அந்த கதாபாத்திரம் திரையில் தெரியும் விதமும்தான் காரணம்! அவருக்கு ஜோடியாக வரும், ராதிகாவும் வழக்கமான அம்மா கதாபாத்திரம்தான், ஆனால் மிகையாகிவிடாமல், சளிப்பாகிவிடாமலிருக்க, தனது வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார். அதேபோல் நடிகர் பிரபு கதாபாத்திரம். ஆரம்பத்தில், இந்த சின்ன Role-க்கு எதற்கு இத்தனை பெரிய நடிகர் எனத் தோன்றினாலும், சில காட்சிகளில் அவரது நடிப்பால் அதற்கான காரணத்தை புரியவைத்துவிடுகிறார். உப்புக்குச் சப்பானியாக வந்துவிட்டுச் செல்லாமல், நடிகர் சத்யன் இதில் சில நல்ல காமெடிகளையும், கடைசியில் நல்ல வில்லத்தன நடிப்பையும் வழங்கியுள்ளார். அவரைப் போலவே படம் முழுக்க வரும், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்டோர், தேவையான இடங்களில் சில வெடிக்கும் பட்டாசுகளையும் சில வெடிக்காத பட்டாசுகளையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

Hi திரைப்படத்தில் நயன்தாரா

கடைசியாக.. பல பிரபலமான பாடல்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி பெயர்பெற்ற விஷ்ணு எடவன் இந்த திரைப்படம் மூலம் எழுத்தாளராகவும், இயக்குநராக களமிறங்கியுள்ளார். திரைக்கதை எனப்பார்க்கையில் முதல் 10 நிமிடம், பலருக்கு கடுப்பாகலாம். Typical கதைக்களம், எதிர்பார்த்த வசனங்கள், வெடிக்காத பட்டாசாய் சில நகைச்சுவைகள் என கொஞ்சம் சறுக்கி பதற வைக்கலாம். ஆனால் போகப்போக மெதுவாய் தனது Track-ல் ஏறி நிதானமாய் நகர ஆரம்பிக்கிறது படம். வழக்கமான திரைக்கதை என்றாலும், ஒருசில புதுமைகளைப் புகுத்தி தப்பிக்கவும் பார்த்திருக்கிறார் எழுத்தாளர். முதல்பாதி பெரிய பரபரப்பின்றி ஆனால் சளிப்பும் இன்றி நகர்ந்துவிடுகிறது. சில நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுக்கின்றன. இடைவெளி காட்சிக்கு அரங்கம் சிரிப்பலையில் நிறைகிறது. ஆனால் அந்த காட்சியை Trailer-ல் காட்டாமல் இருந்திருந்தால், இதை விடப்பெரிய Response இருந்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட மயில்சாமி கதாபாத்திரம் சரியான இடத்தில் வெடிக்கும்போதும் அது Trailer-ல் பார்த்த நகைச்சுவையாகிவிட்டது படக்குழுக்கு ஒரு Minus-ஆக மாறிவிட்டது எனக் கட்டாயம் சொல்லலாம்.

Hi திரைப்பட போஸ்டர்

இரண்டாம் பாதி கதை எங்கெங்கோ சென்று பாகிஸ்தான், கர்ப்பம் என முதல்பாதியில் நினைவில் வைத்திருந்த கமெர்ஷியல் Scale-ஐ கொஞ்சம் மறந்ததாய் தோன்ற வைத்தது. இருந்தாலும் அந்த அளவுக்கு கமெர்ஷியல் லிபர்ட்டி எடுத்துக்கொள்ளாமல், ஓரளவுக்கு தேற்றியிருக்கிறார் எழுத்தாளர். ஆங்காங்கே எட்டிப்பார்க்கும், அந்த லாஜிக் குறைபாடுகளை “வைட்டமின் கமெர்ஷியல்” மாத்திரைகள் மூலம் நாமே சரி செய்துகொள்ளலாம். ஆனால் படத்தை எப்படித்தான் முடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு ஏமாற்றமளிக்காத பதிலைக் கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே சில காட்சிகள் சளிப்புடன் பெருமூச்சு விட வைத்தாலும், குடும்பங்கள் ரசிக்கும் சமாசாரங்களைச் செய்து Pass Mark வாங்கிவிடுவார் போல இயக்குநர்.

ஆரம்பத்திலிருந்தே ஜென் மார்ட்டினின் இசை படத்திற்கு இதம் சேர்த்துள்ளது. பாடல்களும் ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. லியோன் பிரிட்டோ, ராஜேஷ் ஷுக்லாவின் ஒளிப்பதிவு அனைவரையும் அழகாகக் காட்டியது!

சரி.. இப்போது உருத்திய சில இடங்களைப் பார்க்கலாம், (Spoiler Alert)

Hi திரைப்படத்தில் நயன்தாரா

கவின் தனது அத்தை மகளுக்கு Propose செய்யும் காட்சிகளை கொஞ்சம் நேர்த்தியாக எழுதியிருக்கலாம். படத்தின் முதல் காட்சி, ஹீரோவின் கதாபாத்திரத்தை பிரதிபளிக்கப்போகும் காட்சி, அதை கொஞ்சம் சரிவர எழுதியிருந்தால், படத்தின் ஆரம்பம் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்ததாக பொள்ளாச்சியைக் காட்டும்போது எங்கூர் எனச் சொல்லிவிட்டு ஏதோ பெருமையாகக் காட்டப்போகிறார் எனப் பார்த்தால், ஒரு கட்டாயக் கல்யாணம் நடப்பதைக் காட்டுகிறார். அவர்களது ஊர்காரப் பெண் ஒருவர் மாப்பிள்ளை என்ன சாதி என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். தன் ஊரில் நடக்கும் இதுபோன்ற பிரச்னைகளைக் கிண்டல் செய்கிறார் என வைத்துக்கொள்ளலாம். அதே ஊர்க்காரர் பிரபு, “உயிருள்ளவரை உஷா” எனப் பேசுவது உண்மையிலேயே கதைக்குப் பொருந்தினாலும், கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இன்னும் அந்த ”காதல் என்றால் ஒருத்திதான், அதன்பின் வேறு வாழ்க்கை இல்லை” என்ற பழைய எண்ணைத்தை Rebranding செய்வது சற்று சிக்கலான விஷயமாகப் படுகிறது. அதிலும், அவர் ஒரு இடத்தில் கூட "எம்பொண்டாட்டி யாரோடையும் ஓடல, எம்மேல கோவத்துலதான் எங்கையும் போயிருப்பா” என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்யவே இல்லை. அவரது மனைவி, யாருடனோ ஓடிவிட்டார், இருந்தாலும், மனைவியையே நினைத்து உருகுகிறார் என்ற போக்கே தென்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுஹாசினி காட்சிகள் மிகவும் நீளமாகவும், கொஞ்சம் சலிப்பு தட்டும் விதமாகவும் இருப்பது சிறிய மைனஸ்.

Hi திரைப்படத்தில் நயன்தாரா

இதெல்லாம் படத்தை மிகப்பெரிய அளவில் தொந்தரவு எதுவும் செய்யாவிட்டாலும், படத்தில் கவனிக்க வைத்த சில விஷயங்கள் எனலாம்! ஒட்டுமொத்தமாக பார்க்கும்போதும், படத்தில் அதிருப்தி படுத்தும் வகையில் எதுவும் இல்லை. கண்டிப்பாக, தியேட்டரில் ரசிக்கலாம்! ஆகையால் இத்தனையையும் படித்த நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் படத்திற்கு யாருடன் போகலாம், எப்போது போகலாம் என்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments