FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரசிகர்களை எட்டுமா ராமின் தத்துவங்கள்?- ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் உயிர் நேயம் குறித்துப் பேசியிருக்கிறது குறித்து....

35 வினாடிகள் முன்பு
ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம் - எக்ஸ்
பகிர்:

சமீபத்தில் தனது திரை வாழ்க்கையின் இருபதாவது ஆண்டை நிறைவு செய்தார் இயக்குநர் ராம். இந்த 20 ஆண்டு காலத்தில் அவர் இயக்கிய படங்கள் வெகு சொற்பம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, பறந்து போ திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது ஏழு கடல் ஏழு மலை.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமின் திரைப்படங்கள் பொதுவாக மனித உணர்வுகள், வாழ்க்கைத் தத்துவங்கள் உள்ளிட்ட ஆழமான அதே சமயம் அர்த்தமுள்ள கருத்துக்களை பேசும். இந்தத் திரைப்படம் உயிர் நேயம் குறித்துப் பேசியிருக்கிறது.

Advertisement

Advertisement

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என தொடங்கும் இந்த கதையில் நிவின் பாலி எட்டாயிரம் ஆண்டுகள் உயிர் துறக்காமல் சாகா வரம் பெற்று வாழ்பவனாக வந்திருக்கிறார். துபையில் வேலை செய்து வரும் நடிகர் சூரி எட்டு ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு தனது குடும்பத்தையும் மகனையும் பார்ப்பதற்காக சொந்த ஊர் வருகிறார். அவசர அவசரமாக ரயில் பெட்டியை ஏற வரும் அவர் நிவின் பாலி உறங்கிக் கொண்டிருக்கும் கடைசி பெட்டியில் தஞ்சமடைகிறார். 8000 ஆண்டுகள் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிவின் பாலியும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைக் காண வரும் சூரியும் அந்த ரயில் பெட்டியில் இரண்டரை மணி நேரம் பயணிக்கும் கதை ஏழு கடல் ஏழு மலை.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடிகர் நிவின்பாலி

ரயில் பெட்டியில் சூரியால் கதவிடுக்கில் எலி ஒன்று மாட்டிக் கொள்கிறது. எலியின் கதறல் நிவின் பாலியை எட்டுகிறது. ஆள் அரவம் இல்லா அந்த ரயில் பெட்டியில் நிவின் பாலியின் தோற்றமும் நடவடிக்கைகளும் சூரியை அச்சுறுத்த, எப்படியாவது தப்பித்து விட முயற்சிக்கிறார் அவர். ஆனால் எலியின் உயிரை துச்சமாக மதிக்கும் சூரிக்கு உயிர் பயத்தை கொடுக்கிறார் நிவின் பாலி. நிவின் பாலியிடமிருந்து எப்படி தப்பித்தார் சூரி என நகர்கிறது ஏழு கடல் ஏழு மலை.

எலியின் மீது கரிசனம் கொண்டு சூரியை தாக்கும் இடங்களில் எல்லாம் நிவின்பாலி ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அஞ்சலியுடன் அவர் காதல் கொள்ளும் தருணங்களிலும், எலியை கையில் தூக்கி வைத்து தடவி கொடுக்கும் இடங்களிலும் நிவின்பாலியின் கண்கள் அன்பைப் பேசுகின்றன. எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி ஒருபுறம் அன்பு, மறுபுறம் அதிரடி என ஸ்கோர் செய்திருக்கிறார் நிவின் பாலி. அவருக்கு இணையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார் சூரி. எலியிடம் அலட்சியமாக அவர் நடந்து கொள்வதில் தொடங்கி, உயிருக்கு பயந்து கெஞ்சுவதிலும், எல்லை மீறி சென்று நிவின்பாலியை தீர்த்து கட்ட முனைவதிலும், இறுதிக் காட்சிகளில் மனம் திருந்தி உருகும் இடங்களிலும் சூரி தேர்ந்த கலைஞன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சூரியின் தவிப்பும் நிவின் பாலியின் ஆக்ரோசமும் படத்தைக் கட்டி இழுத்த பெரும் படை. இதற்கு மத்தியில் நிவின் பாலி தேடி அலையும் காதலியாக வருகிறார் அஞ்சலி. ராம் திரைப்படங்களில் ஆதர்சன நாயகியாக இருக்கும் இவர் இந்த படத்திலும் மிருதுவான, மென்மையான, கண்களில் காதலை தாங்கி நடித்திருக்கிறார். மிகக் குறுகிய வசனங்கள், மிக நேர்த்தியான நடிப்பு அஞ்சலியை ரசிக்கச் செய்கிறது. இருண்ட பகுதியில் நிவின்பாலி தூக்கி வரும் விளக்கு வெளிச்சத்தில் அஞ்சலி மின்னுவது அவ்வளவு அழகாக இருக்கிறது.

கதாபாத்திரங்களைத் தாண்டி படத்தை தாங்கிப் பிடித்து நிற்பது பின்னணி இசை. "போரேதுமில்லை" பாடலும், அதற்கு அமைந்த திரைக்காட்சியும் உள்ளூர நம்மை ஆட்கொள்கிறது. "ஏழேழு கடலேழு மலை

தாண்டி" பாடல் நிவின்பாலியோடு சேர்ந்து நம்மையும் தவிப்பிற்கு உள்ளாக்குகிறது. இசைக்கு கை கொடுத்தது போல் அமைந்திருக்கிறது ஏகாம்பரம் அவர்களின் ஒளிப்பதிவு. மலை, கடல் பகுதி காட்சிகள் ரசிக்கச் செய்கின்றன. ரயில் பெட்டிக்குள் நடக்கும் இரண்டரை மணி நேர கதையில் ஒளிப்பதிவின் பங்கு அளப்பரியது. மீண்டும் வந்த யுவன் என்பதைப் போல மீண்டு வந்திருக்கிறார் யுவன். இவன் சந்தோஷ் தயாநிதியின் இசை கூட்டணி படத்திற்கு அமைந்த பெரும்பலம்.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் சூரி

முதல் பாதி படத்தில் காப்பகத்தில் இருக்கும் சிறுவனுக்கு கதை சொல்வதைப் போல படம் தொடங்குகிறது. அந்தக் கதையில் நிவின் பாலியும், சூரியும், அஞ்சலியும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள். முதல் பாதியில் உயிரின் முக்கியத்துவம் குறித்து மூன்று கதைகளை சூரிக்கு சொல்கிறார் நிவின் பாலி. இந்த இடங்களில் வரும் காட்சிகள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான அல்லது இயல்பான காட்சி அமைப்பிலிருந்து இது தனித்து இருப்பது படத்தை தொந்தரவு செய்கிறது. ரயில் பெட்டிக்குள் சண்டைகள் நடக்கும் அதே சமயத்தில் ரயில் பெட்டிக்கு வெளியே தாவித்தாவி ஏறி வரும் நிவின்பாலியின் ஆக்ஷன் காட்சிகள் இயல்பான பட ஓட்டத்தை சந்தேக பார்வைக்கு உள்ளாக்குகின்றன. உயிர் குறித்த மூன்று கதைகள், அதன் பிறகு அஞ்சலி குறித்த பகுதிகளில் வரும் அடுத்தடுத்து காட்சிகள் ஆகியவை எதை நோக்கி நாம் பயணப்படுகிறோம் என்கிற ஒருவித குழப்பத்திலேயே நம்மை வைத்திருக்கிறது. முதல் பாதி சற்று தடுமாற்றத்தோடு அல்லது குழப்பத்தோடு நம்மை வைத்திருக்கும் அதே சமயத்தில் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. இறகு, எலி என ராம் எடுத்து பயன்படுத்தியவை அன்பின் குறியீடுகள். கதையாக ஒரு நாவலை அணுகிய அனுபவம் நமக்கு கிடைத்தாலும் திரைக்கதையாக நம்மை சுற்றலில் விடும் தோற்றம் ஏற்படுகிறது. தாவிச் செல்லும் காட்சிகள் படத்தொகுப்பில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ராமின் திரைப்படம் எப்போதும் ஆழமான மனித உணர்வுகளையும் அதில் கவனிக்கப்படாத கருவையும் சுமந்து நிற்கும். ஏழு கடல் ஏழு மலை அப்படிப்பட்ட திரைப்படைப்பு. இதர இயக்குநர்களிடம் எதிர்பார்க்கும் ஆக்சன், நகைச்சுவை கலந்த எந்த அம்சங்களும் இந்த திரைப்படத்தில் இல்லை. அதேசமயம் உயிர் நேயம் குறித்த பார்வையும், காதல், அன்பு தொடர்பான விஷயங்களும் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

படம் முடிந்து வெளியே வரும்போது ராமின் எழுத்தும் யுவனின் இசையும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. வழக்கமான திரை மொழிகளுக்கு உட்படாத இந்த திரைப்படம் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி பார்க்கவல்லது.

ராமின் எழுத்து அவருக்கே உரித்தானது.

Will Ram's philosophies resonate with the audience? – 'Yezhu Kadal Yezhu Malai' Movie Review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments