இசை ரேஸில் வென்றதா மீசைய முறுக்கு 2? திரைவிமர்சனம்
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் குறித்த விமர்சனம்...
பரம்பரை பரம்பரையாக கோலோச்சி வரும் இசைக்குடும்பங்களுக்கு மத்தியில் கானா பாடும் தனியிசை கலைஞர்களின் கனவு என்னவானது என்பதே மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் கதை.
மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இடையிடையே சில திரைப்படங்களை இயக்கினாலும் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மீசைய முறுக்கு 2 இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்க அவருக்கு ஜோடியாக சைதன்யா, கெடிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். டி.ராஜேந்திரன் அளவிற்கு இல்லையென்றாலும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என அனைத்தையும் கவர் செய்திருக்கிறார் ஆதி. பாலாஜி சுப்ரமணியம் கேமராவும், பெஃன்னி ஆலிவர், திருமலை ராஜன் ஆகியோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
கதை 1970இல் தொடங்குகிறது. ராயபுரத்தில் கானா பாடும் தாஸ் தனது இசையின் மூலம் சாதித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அங்கிருந்து அப்படியே தற்காலத்திற்கு வந்தால் மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் ஆதி கெடிகா சர்மாவை சந்திக்கிறார். அவர் மீது ஆதிக்கு காதல் ஏற்பட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது. பண, புகழ், பரம்பரை பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா இல்லையா என்பதே மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் திரைக்கதை.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருக்கிறார் ஆதி. இசைக்காக முயற்சிக்கும் இளைஞனிலிருந்து கனவை துரத்தும் இடம் வரை அவரின் தவிப்பு பார்வையாளர்களையும் வந்தடைய மெனக்கெட்டிருக்கிறார். நெபோடிசம் குறித்த விமர்சனங்கள், தன்னம்பிக்கை வசனங்கள் என இரண்டாம் பாதி முழுக்க ஆக்கிரமித்துள்ளது.
தனது தந்தை பாபா பாஸ்கரிடம் கோபம் கொள்வதிலும், அன்பை பரிமாறிக் கொள்வதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மூன்று கதாநாயகிகளும் திரைநேரம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்குண்டான இடங்களை ஆழமாக நிரப்பியுள்ளனர். கெடிகா சர்மாவின் கவர்ச்சி இளைஞர்களை ஈர்க்கும் காந்தம். இவர்களுடன் பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருந்திப் போயுள்ளனர்.
கலகலப்பாக நகரும் முதல் பாதியும், விறுவிறுப்பாக செல்லும் இரண்டாம் பாதியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. நாசருக்கு கருணாஸ் டப்பிங் கொடுத்த இடங்கள் அரங்கை அதிரச் செய்கிறது. இசை குறித்த படம் என்பதால் பாடல்களால் நிரம்பியிருக்கிறது திரைப்படம். முதல் பாதியிலேயே 4 பாடல்கள் அமைந்திருக்கின்றன. கேமரா, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு என அவரவர் தங்களது பணிகளை சரியாக செய்திருப்பது படத்திற்கு உதவியாக அமைந்துள்ளது.
இசையில் நடக்கும் ஏற்றத்தாழ்வு பிரச்னைகளும், அதில் கலந்திருக்கும் வாரிசு அரசியலும் கானாவை கலையாக அங்கீகரிப்பதில் ஏற்படுத்தியிருக்கும் விளைவை தன்னளவில் பேசியிருக்கிறார் ஆதி.
கனவுகளைத் துரத்தும் இளைஞர்களுக்கு மீசையை முறுக்கு 2 இன்னொரு ட்ரீட்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.