FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விவாதமேடை

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நீட் தேர்வை இணையவழியில் நடத்தினால் வரவேற்கலாம். தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாள் வெளியாவது தடுக்கப்படும்.

Updated On : 27 மே 2026, 4:43 am IST
நீட் தேர்வு - படம்: DNS
பகிர்:

வரவேற்கலாம்

நீட் தேர்வை இணையவழியில் நடத்தினால் வரவேற்கலாம். தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாள் வெளியாவது தடுக்கப்படும். காகிதங்கள், அச்சடித்தல், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை பெருமளவில் குறைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடலாம். இந்த புதிய முறை ஒரு சில பொறியியல் தேர்வுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகின்றன. மேலை நாடுகளிலும் இதுபோல நடத்தப்பட்டு வருகின்றன. இந்த புதிய முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

டாக்டர் கே. விஸ்வநாதன், கோவை.

Advertisement

Advertisement

உத்தரவாதமில்லை

இணையவழியில் தேர்வு நடத்தினால் மட்டும் தவறு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீட் தேர்வு வினாத்தாள் அம்பலமானது என்பது சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டது. அது மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வினாத்தாள் வெளியாவதற்குக் காரணமானவர்களையும் அதில் தொடர்புடையவர்களையும் கண்டறிந்து கடும் தண்டனை அளிக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே மீண்டும் அந்தத் தவறை செய்ய யாருக்கும் துணிச்சல் வராது. அதை விடுத்து நீட் தேர்வை இணையவழியில் நடத்துவது என்பது அந்தத் துறையின்

அறியாமைதான்.

கா. ராமசாமி, கீழப்பனையூர்.

நேர்மையுடன்...

இணையவழி என்றாலும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் நீட் தேர்வுகள் நடைபெற வேண்டும். தவறிழைத்த பிறகு மன்னிப்பது என்பது பெருங்குற்றம். நீட் தேர்வில் சில ஆண்டுகளாகவே ஏதோ ஒரு விதத்தில் முறைகேடு நடந்து கொண்டே இருப்பதாக செய்திகள் வருவதும், பின்னர் அதை மக்கள் மறந்தும் விடுகின்றனர். முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தேசிய தேர்வு முகமை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, மாணவர்களின் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தையும் சோதனை என்ற பெயரில் அவர்களின் உணர்வுடன் விளையாடிய நிகழ்வுகள் மன்னிக்க முடியாதவை.

கோ. லோகநாதன், திருப்பத்தூர்.

சவாலானது

தகுதியற்ற மாணவர்கள் தவறான முறையில் பலனடைந்து விடக் கூடாது என்பதுடன் தகுதியுள்ள மாணவர்கள் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை இணையவழியில் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எனினும், இணையவழி குற்றங்கள் நாள்தோறும் பெருகி வரும் இந்நாளில், நீட் தேர்வை இணையவழியில் நடத்த முற்படுவது தேர்வு முகமைக்கு சவாலான விஷயம். போதிய முன்னேற்பாடுகளுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டாலே எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியும். இன்றைய சூழலில் இப்போதைக்கு இதுவே உகந்த வழியாகத் தெரிகிறது.

கே. ராமநாதன், மதுரை.

உழைப்பு வீணாகக் கூடாது

நீட் தேர்வு வேண்டுமா?, வேண்டாமா? என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், தேர்வு நியாயமாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் கருத்தும். அதற்கு இந்த இணையவழி தேர்வு உதவினால் நிச்சயம் வரவேற்கத் தகுந்ததே. ஆனாலும், இணையத்தில் பதிவேற்றும்போது வினாத்தாள் வெளியாக வாய்ப்பு உண்டு. நவீன முறையில் தேர்வு நடத்தினாலும் தவறுகள் நிகழலாம். நம்பிக்கைக்கு உரியவர்களை நியமிப்பதே இதற்கு ஒரே தீர்வு. அதை மத்திய கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் உழைப்பு வீணாவதை நிச்சயம் தடுக்க வேண்டும்.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

கவனம் தேவை

நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது மிகவும் சரியே. ஆனால், நமது நாட்டில் சட்டங்கள், திட்டங்களை அறிவித்து அமல்படுத்துவதற்குள், நாட்டு நலனுக்கு எதிராக அதில் என்னவெல்லாம் செய்ய இயலும் என்று ஒருசிலர் தங்கள் சுயநலத்துக்காகத் திட்டமிட்டு அந்தச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறார்கள். எனவே, கணினி மூலம் இணையவழியில் நீட் தேர்வு நடத்தும்போது, எந்தவிதத் தவறும் நடக்காத வகையில் அரசு மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

கிராமப்புற மாணவர்களுக்கு...

இந்த அறிவிப்பு முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மை, வேகமான மதிப்பீடு உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவும். மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு நடைபெற்றால் அவற்றை தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ய முடியும். அதே சமயம் கிராமப்புற மாணவர்களுக்கு இணைய வசதி, கணினி அறிவு சமமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கான வாய்ப்பு குறையும். எனவே, மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துவது அவசியம்.

நரேசு தமிழன், சேலம்.

பயிற்சிகள் அவசியம்

நீட் இணையவழி தேர்வாக மாற்றப்படுவது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு உதவக்கூடிய ஒரு முன்னேற்றமான முயற்சி. ஆனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற எண்ம இடைவெளி, தொழில்நுட்பக் கோளாறுகள், மொழி சார்ந்த அணுகுமுறைகள் உள்ளிட்ட சவால்களைத் தீர்க்காமல் அமல்படுத்தினால் அது மாணவர்களுக்கு இடையேயான சமத்துவத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, முழுமையான மாதிரித் தேர்வுகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி, பலமுறை பயிற்சித் தேர்வுகள் மற்றும் வலுவான தொழில்நுட்ப அமைப்புகளுடன் மட்டுமே இந்த மாற்றம் செயல்படுத்தப்பட வேண்டும்.

கே. ஸ்ரீதர், மங்களூர்.

கடும் தண்டனை

2024-இல் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பிறகு அமைக்கப்பட்ட குழு இணையவழி முறைக்கு மாற 95 பரிந்துரைகளை அளித்திருந்தது. அதை நிறைவேற்றாததால் வந்த விளைவு நிகழாண்டு நீட் தேர்வு ரத்து என்ற நிலைக்கு வந்து விட்டது. அடுத்த ஆண்டு இது நிகழாமல் இருக்க இணையவழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக கைதான அதிகாரிகள், மாணவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அது மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடுவோர் இதற்கும் ஒரு வழியைக் கண்டறிவார்கள். எனவே, அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

க. அருச்சுனன், செங்கல்பட்டு.

நீட் தேவையில்லை

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பு போக்குக் காட்டும் வேலையாகத் தெரிகிறது. நீட் தேர்வு என்ற ஒன்றை மூலதனமாக்கி வினாத்தாள் கசிவு என்பதும், அதில் அரசியல்வாதிகள்-ஆளும் தரப்பு- அதிகாரிகள் ஒன்றிணைந்து இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நீட் தேர்வு என்பது பலன்தரக் கூடியது என்ற ஆரம்பகால வாதங்கள் தவிடு பொடியாகி, நீட் என்பது நம்பிக்கை இல்லாததாகிப் போனதால் அந்தத் தேர்வில் இருந்த தூய்மைத் தன்மை விலகி அச்சம் தரும் அளவுக்கு அது கலப்படமாகிவிட்டது. நீட் தேர்வை நடத்துவதை நிறுத்துவதே நல்லது.

என். ஜானகிராமன், திசையன்விளை.

முறைகேடுகளுக்கு வாய்ப்பு

இணையவழி தேர்வில் இணைய இணைப்பு தடைபடுதல், மின் தடை ஏற்படுதல், கணினி அல்லது கைப்பேசி பழுதாவது, தேர்வுத் தளம் செயலிழத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் நடைபெற வாய்ப்புள்ளன. நமது கிராமப்புற மாணவர்களுக்கு நிலையான இணைய வசதி இல்லாதது பெரிய தடையாகும். நேரடித் தேர்வுகளைப்போல கண்காணிப்பு இல்லாததால், புத்தகங்களைப் பார்த்து எழுதுதல், இணையத்தில் பதில் தேடுதல், பிறரின் உதவி பெறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. மேலும், இணையவழி தேர்வில் நடைபெறும் குளறுபடிகள் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.

முயற்சி முருகேசன், சென்னை.

ஏற்க மாட்டார்கள்

அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பை மாணவர்களும், கல்வி அமைப்புகளும் ஏற்க மாட்டார்கள். தற்போது, நீட் தேர்வு பாதிப்பை சரிபடுத்தும் தீர்வாக இது அமையாது. நாட்டில் 85% பள்ளிகள் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் நிலையில், அனைத்து மாணவர்களும் கணினியை சிரமமின்றி கையாள்வது சாத்தியப்படுமா? என்பது சந்தேகம். இதற்கான முழுமையான கட்டமைப்பு நிலையை உருவாக்குவதில் பல சிரமங்கள், சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

துரை. பிருதிவிராஜ், மதுராந்தகம்.

பயிற்சி அவசியம்

தவறுகள் தவிர்க்க முடியாதவை; ஒரு தவறு மீண்டும் நடக்கக் கூடாது. அதற்கு என்னென்ன வழிகள் என்பதைத் தேர்வு செய்வதில்தான் சீரமைப்புக்கு வழிபிறக்கும். தேர்வு நடத்துவதில் ஏற்படும் ஒருசில தவறுகளால் தேர்வே கூடாதென கூறுவது ஏற்புடையதல்ல. நீட்தேர்வு மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசுப் பள்ளியில் தரமான கல்விக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இணையவழியில் எப்படி தேர்வெழுத வேண்டும் என்பதற்கான பயிற்சி மிக மிக அவசியம்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

அரசின் திறமையின்மை...

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதன் திறமையின்மையின் வெளிப்பாடேயாகும். நீட்தேர்வு எழுதவும், அதில் தேர்ச்சி பெறவும் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏராளம். இருந்தாலும், தேர்வை சரிவர நடத்த முடியவில்லை. இனி இணையவழியில் நடத்தினாலும் அதுபோலவே தவறுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் அதிகம் தகுதி பெறாததும், கல்வியில் பின்தங்கிய மாநிலங்களின் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதும் ஊழலுக்குச் சான்று.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments