அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை உரிமையாக கருத முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கூறியிருப்பது குறித்து...
அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை உரிமையாக கருத முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கூறியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
கட்டுப்பாடு தவறில்லை
அறச்செயல்களுக்கு அனுப்பும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி சில அமைப்புகள் நாட்டின் அமைதிக்கும், அரசுக்கும் எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. ஒருசில நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. ஆகவே, அறக்கட்டளைக்காகப் பெறும் நிதியை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிப்பதில் தவறில்லை. இது குறித்த நீதிமன்றத்தின் கருத்து சரியானதே. இது தேசப் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.
தி.சேகர், பீர்க்கன்கரனை.
Advertisement
Advertisement
கண்காணித்தால் போதும்
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் கல்வியறிவு படிப்படியாக உயர்ந்ததற்கு இந்த கிறிஸ்தவ மிஷனரிகளும் முக்கியக் காரணம். காலப்போக்கில் சமூக சேவைகள் புரியும் தொண்டு நிறுவனங்களாக தம்மை உருமாற்றிக் கொண்டன. எனினும், வெளிநாடுகளின் நிதியுதவி மீது அரசின் தணிக்கைத் துறை தனது அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. எல்லா அறக்கட்டளைகளிலும் அரசுத் துறையின் கண்காணிப்பை மேற்கொள்ள ஏதுவாக அரசமைப்பில் உரிய சட்டத் திருத்தம் செய்து தணிக்கை செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
தணிக்கை தேவை
வெளிநாடுகளிலிருந்து அறக்கட்டளைகளுக்கு வரும் நிதியுதவியை உரிமை என்று சொல்ல முடியாது. நிதியானது உள்நாட்டிலிருந்து பெறப்பட்டாலும், பிற நாடுகளிலிருந்து பெறப்பட்டாலும் அந்த நிதியானது கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பயன்படும்போது எந்தக் கேள்வியும் இல்லை. எந்த வழியில் இருந்து வரும் நிதியென்றாலும் மத்திய} மாநில அரசுகளின் கணக்குத் துறையின் மூலமே அறக்கட்டளைகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் அரசியல் எந்த நிலையிலும் தலையிடக் கூடாது என்பதைச் சட்டமாக்கினால்தான், அதன் பயன்பாடு மக்களுக்குத் தெரியவரும்.
கலைப்பித்தன், கடலூர்.
தடை செய்யலாம்
அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கூறியிருப்பது மிகச் சரியே. தற்போது, அதிக அளவில் போலி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அறக்கட்டளை செயல்பாடுகளை உற்று நோக்கினால் இந்த சமூகத்துக்கோ, மக்களுக்கோ பலனளிப்பதாக இல்லாமல், சில தனி மனிதர்கள் பலன் பெற்று வருவதைக் காண முடிகிறது. சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அறக்கட்டளைகளைக் கூர்ந்து கவனித்து மத்திய - மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
ச. சிவசண்முகம், குளத்துப் பாளையம்.
அரணாகும் உத்தரவு
வெளிநாட்டுப் பண பலத்தால் இயக்கப்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த இத்தகைய கண்டிப்பான நெறிமுறைகள் மிக அவசியமாகும். தேச நலனையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாட்டின் நீண்டகால நலனுக்கு அரணாக அமைகிறது. அறக்கட்டளைகளின் சேவைகள் வெளிநாட்டு நிதியைச் சார்ந்து இருக்காமல், உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த உத்தரவு உணர்த்துகிறது.
ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.
சிறந்த அறிவுறுத்தல்
ஒரு சில அறக்கட்டளைகள் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணத்தை நன்கொடையாகப் பெற்று அந்தப் பணத்தை தேச நலனுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. ஒருசில அறக்கட்டளைகள் தாங்கள் பெறும் நன்கொடைகளை தீவிரவாத செயல்களுக்கு மடைமாற்றி விடுகின்றன. எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாததால் அறக்கட்டளைகள் வாங்கும் நன்கொடைகளை தங்களின் உரிமைகளாக எண்ணக் கூடாது என்று அரசு கூறுகிறது.
வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
உரிமை கிடையாது
நன்கொடை என்பது கொடுப்பவரின் கொடை உள்ளத்தையும் வாங்குபவரின் தேவையையும் பொருத்து அமைவது. இதை வாங்குவதற்கு எனக்கு சட்டரீதியான உரிமை இருக்கிறது என்றோ, நியாயப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் இடம் தராது என்பதே மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவு. இந்தியாவின் இறையாண்மையையும் சமூக அமைதியையும் கெடுக்கும் வகையிலான செயல்பாடுகளுக்கு இத்தகைய நன்கொடைகள் போய்ச் சேரும் என்றால், அதைத் தடுப்பதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்பதே உத்தரவின் சாராம்சம். நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதாக இருப்பதால் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
வெ.க. சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.
ஏற்புடைய கருத்து
அறக்கட்டளை நிறுவி கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், இளைஞர் நலன் என்று தொண்டு செய்யும் அமைப்புகள் அறக்கட்டளையின் சொந்த நிதி நிலை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை மட்டுமே நம்பி இருப்பவை. லாப நோக்கில் தொழில் செய்யும் அறக்கட்டளைகளும் உள்ளன. ஆகவே, வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது என்ற மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் வாதம் சரியானதே. மேலும், அறக்கட்டளை என்ற போர்வையில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதி பெறுவது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும்.
கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.
சேவையைப் பாதிக்கும்
அறக்கட்டளை தொடங்குவோரின் நோக்கம் தம் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கும் பொதுமக்களுக்கும் அறவழியில் செலவு செய்ய வேண்டும் என்பதே ஆகும். அவர்கள்தம் வருமானத்தின் ஒரு பகுதியையும், தம் அறக்கட்டளைக்கு விரும்பித்தரும் நன்கொடைகளை வைத்தும் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் சிலர் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை என்ற பெயரில் தவறான பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு உறுதுணையாகச் செயல்படுவதால் சேவை முறைமையிலான அறக்கட்டளைகளுக்கு இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்தும்.
மெüலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, சென்னை.
உரிமையல்ல!
தியான மையம் நடத்திவரும் மத அமைப்பு நாங்கள் மத அமைப்பு இல்லை என வெளிநாட்டு நிதி பெற அனுமதி கேட்டது தவறான செயல். மதச்சார்புடைய நிகழ்ச்சியை நடத்திவிட்டு மதச்சார்பற்றது எனக் கூறுவதும் ஏற்புடையது அல்ல. அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது; அது அரசு கொடுக்கும் சலுகை மட்டுமே. அதனால், நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற இனிமேல் அனுமதிக்கக் கூடாது.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.
தேச நலனுக்கான தீர்ப்பு
அறக்கட்டளைகள் என்ற பெயரில் பெறும் நிதிகள் விதிமுறைகளின்படி செலவிடப்படுவதில்லை. அறக்கட்டளைகள் எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்குப் பெயரளவில் செலவு செய்யப்பட்டு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக ஆடம்பரமான செலவுகள் செய்யப்படுகிறது. பல அறக்கட்டளைகள் இந்த நிதியை அரசின் அல்லது நாட்டுக்கு எதிராகப் போராடவும் பயன்படுத்துகிறது. இதனால், என்ன நோக்கத்துக்காக நிதி பெறப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. எனவே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தேசத்தின் பாதுகாப்பும், இறையாண்மையும் அடங்கி இருப்பதால், தவறேதும் இல்லை.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.
சட்டத்துக்கு உள்பட்டவை
எந்த ஒரு நாட்டிலும் பிற நாடுகளுடான பணப் பரிவர்த்தனைகள் வியாபார ரீதியாக இருந்தாலும், தனி நபர் நிதியாக இருந்தாலும், அறக்கட்டளைக்கான நிதியாக இருந்தாலும் அவை யாவுமே அந்தந்த நாட்டின் பணப் பரிவர்த்தனை சட்டத்துக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்குவரும் நிதிகள் அறக்கட்டளையின் கோட்பாடுகளைத் தவிர்த்து தீவிரவாதத்துக்கும் பிற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
சி. இரத்தினசாமி, பொல்லிக்காளிபாளையம்.
குறுக்குவழி ஆதாயங்கள்
அறக்கட்டளைகள் சமூக சிந்தனையுடன் சமுதாய மேம்பாட்டுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்படுபவை என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், தாங்களாகப் பொருட்செலவு செய்து நற்பணி செய்து வருவோர் பலர் இருக்கிறார்கள். சிலர் ஆதாயம் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பொருளுதவி பெறுகிறார்கள். அவை மதமாற்றம் மற்றும் தேசத்துக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை மறுப்பதற்கில்லை. தவறான செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த கண்காணிப்பும் வழிமுறைகளும் அவசியம் தேவை.
சீனி செந்தில்குமார், தேனி.
சிந்திக்க வைக்கிறது
அறக்கட்டளைகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை உரிமை எனச் சொல்ல முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியிருப்பது சிந்திக்க வைக்கிறது. அவர்கள் அறக்கட்டளைகளை வெளிநாட்டு நிதி அடிப்படை உரிமை அல்ல என்றுதான் சொல்லுகிறார்கள் தவிர, வெளிநாட்டு நிதியை அறக்கட்டளைகள் பெறவே கூடாது என்று சொல்லவில்லை. இந்த உத்தரவை அமல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், இதில் உரிமை என்கிற வாதத்துக்கு எந்த விதத்தில் பார்த்தாலும் இடமில்லை.
நந்தினி கிருஷ்ணன், சென்னை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.