FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருப்பது சரியல்ல.

10 வினாடிகள் முன்பு
பரந்தூர் - முதல்வர் விஜய்
பகிர்:

ஏற்க முடியாது

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருப்பது சரியல்ல. தமிழகத்துக்கு செய்ய வேண்டிய பல நல்ல திட்டங்கள் இருக்க பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு மூடுவிழா செய்தது ஏற்கத்தக்கதும் அல்ல. கூடுதலாக பல விமானங்கள் தரையிறங்கவும், அதைச் சார்ந்த பிற வளர்ச்சிகள் முன்னெடுக்கப்படவும் நிச்சயம் பரந்தூர் விமான நிலையம் தேவை. வேறு எங்கு விமான நிலையங்கள் கொண்டுவந்தாலும், அங்கும் இதேபோல மக்கள் பிரச்னை எழத்தான் செய்யும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேறு தொழிற்சாலைகள் அமைப்பது சாத்தியமற்றது.

எஸ். வேணுகோபால், சென்னை.

Advertisement

Advertisement

எதிர்பார்த்ததுதான்

ஐந்து ஆண்டுகளாகப் போராடிய அந்தப் பகுதி மக்களுக்கு இது நற்செய்தியாகும். முதல்வர் அறிவித்ததும் எதிர்பார்க்கப்பட்டதுதான். முந்தைய அரசும், இப்போதைய அரசும் கையகப்படுத்திய நிலம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களே வெளியாகி வருகின்றன. எது எப்படி இருந்தாலும் விமான நிலையமோ, சிப்காட் தொழிற்பேட்டையோ, எட்டுவழிச் சாலைத் திட்டங்களோ, இதர பெருந்தொழிற்சாலைகளோ எது அமைக்கப்பட்டாலும் அதில் உள்நோக்கம் கூடாது. எங்கு விமான நிலையம் அமைந்தாலும், அங்கும் இந்தப் போராட்டம் நடக்கத்தான் செய்யும்.

பி. சுந்தரம், வெண்ணந்தூர்.

ஒப்படைக்க வேண்டும்

விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயம் பாதிக்கப்படாமலும் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றியுள்ளதற்காக பரந்தூர் மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம். தொழில் துறை அமைச்சரின் கூற்றுப்படி மாற்றுத் தொழில் திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது. கையகப்படுத்திய நிலங்களை விவசாயம் செய்யவும், விவசாயிகள் பலன் பெறவும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வழங்கிய இழப்பீட்டுத் தொகையை தவணை முறையில் திரும்பப் பெறலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம். அதுவே விவசாயிகளின் நலன் காக்கும் செயல்.

ப. சிவபாதம், சோளிங்கர்.

வளர்ச்சிக்குத் தடை

ஓர் அரசு, மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாகரிகமாக மாறிவிட்டது. நான்குவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள், இன்று அதன் பலனை அனுபவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பில்லாமல் எந்தத் திட்டத்தையும் அரசால் செய்ய இயலாது. எல்லாப் பணிகளும் முடிந்து கட்டுமானத்துக்காகக் காத்திருந்த நிலையில் பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையாக அமையும்.

கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

விவசாயமே ஆதாரம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பு, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முடிவாகும். வளர்ச்சி என்பது அவசியம்; ஆனால், அதை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துப் பெறக் கூடாது. விவசாய நிலம் என்பது வெறும் மண் அல்ல; அது நம் உணவின் ஆதாரம். பல ஆண்டுகளாகப் போராடிய மக்களின் கவலையை அரசு கருத்தில் கொள்வது பாராட்டுக்குரியது. அதேவேளை, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு விமான நிலையத் தேவையை மறுக்க முடியாது. எனவே, விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புகளும் குறைவாகப் பாதிக்கப்படும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

பா. நூருல்லாஹ், மதுரை.

என்ன காரணம்?

மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் இந்த அரசுக்கு ஏன் ஏற்பட்டது? அதுவும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் வேளையில் கேள்வி நேரம் இல்லாதவாறு 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த இடத்துக்கு மாற்றாக இடம் தேர்வு செய்யாமல், நிலத்தைத் திருப்பிக்கொடுக்க முடியாத சட்ட விதிகள் இருக்கும்போது கடந்த ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு உள்ளது. யாருடைய கவனத்தையோ ஈர்க்க பேரவையின் நேரத்தை வீணாக்கிய வெற்று அறிவிப்பாகத்தான் இது இருக்கப் போகிறது.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

கேள்விக்கென்ன பதில்?

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து குறித்து முதல்வர் கூறும் காரணம், திட்டத்தை அமல்படுத்தினால் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் பாதிப்படைவார்கள் என்பதுதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை ரத்து செய்தது மட்டுமல்லாமல், வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்கிறார். அரசு எங்கு இடத்தைத் தேர்வு செய்து முயற்சித்தாலும், அங்கும் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். அப்போது அங்குள்ள மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். இப்போது முந்தைய அரசு கைப்பற்றிய நிலங்களை என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் என்ன?

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களுரு.

விளைநிலங்கள் தப்பித்தன

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அங்கிருந்து பூர்வகுடிகள் அகற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பசுமையை அழித்துவிட்டு பசுமை விமான நிலையம் அமைப்பதால்தான் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றால், அங்கிருந்து வெளியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இப்படி உள்கட்டமைப்புக்காக வெளியேற்றப்பட்ட பூர்வகுடிகளின் நிலை என்ன ஆனது? என்றே தெரியவில்லை. முதல்வர் விஜய் பரந்தூர் மக்களையும் அந்த மண்ணையும் பாதுகாத்துள்ளார்.

து. பசுபதி, நாமக்கல்.

பின்னடைவு

திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்குப் பிறகு ஓரிடத்தைத் தேர்வு செய்து அதைக் கையகப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்பதெல்லாம் போக போகத்தான் தெரியும். அதே நேரத்தில், தற்போதைய அரசின் கூற்றுப்படி விவசாய நிலம் பாதிக்கப்படாமல் வேறிடத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது சாத்தியமல்ல. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை அடைய முடியும். மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் விமான நிலையத்தைக் கட்டமைக்க சில இழப்புகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

வெண்ணெய் திரண்டபோது...

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதால், சென்னைக்கு புதிய விமான நிலையம் கிடைக்கக் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரை ஆகலாம். ஒரு நகரத்தின் வளர்ச்சிக்குக் கட்டமைப்பு வளர்ச்சி, குறிப்பாக விமானப் போக்குவரத்து வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. பழம் பெருமைமிக்க நகரமான சென்னை 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் இந்த முடிவில் உள்ளது. "வெண்ணெய் திரண்டு வரும் வேளையில், தாழியை உடைத்தாற்போல்' என்ற பழமொழியைத்தான் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.

முகதி.சுபா, திருநெல்வேலி.

அத்தியாவசியமில்லை

விமான நிலையம் அவசியம்தான்; ஆனால் அத்தியாவசியமில்லை. அதே நேரத்தில் மனை வணிக வியாபாரிகள் விமான நிலையம் வருகிறது என்பதை அறிந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ. 60 லட்சத்துக்கு பதிவு செய்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் முடிவு. அங்கு விவசாய சாகுபடி தொடர்ந்து மகசூல் அதிகரித்து, திட்டம் கைவிடப்பட்டது சரிதான் என நிரூபிக்கப்பட வேண்டும்.

கோ. பாலசுப்ரமணியன், விழுப்புரம்.

வேறு இடம் சாத்தியமல்ல...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் அறிவித்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சி. தொழில் வளர்ச்சிக்கான மிக முக்கியத் தேவைகளுள் ஒன்று விமான நிலையம். அது சென்னைக்கு மிக அருகில் இருக்க வேண்டியதும் அவசியம். அந்த வகையில்தான் விமான நிலையத்துக்கான இடமாக பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது பெரும்பான்மையாக முடிந்துவிட்ட நிலையில் இனி வேறு இடம் சாத்தியமற்றது.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

நம்பிக்கை அளிக்கிறது

நிலம் சார்ந்த எந்த விரிவாக்கத் திட்டத்துக்குமே ஆதரவு, எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதில் எது அதிகமோ அதை நடைமுறைப்படுத்துவதுதான் சிறப்பு. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எதிர்த்தவர் விஜய். அந்த நிலைப்பாட்டில், அவர் இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக சொன்னதில் வியப்பில்லை. அதற்கு மாற்றாக வேறொரு இடம் தேர்வு செய்யப்படும் என்று சொல்லியிருப்பதும் நம்பிக்கை அளிக்கிறது.

எல்லோரையுமே திருப்திப்படுத்துவது இயலாத காரியம்தான்.

அனன்யா, பொள்ளாச்சி.

அவசர முடிவு

இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை. விவசாயிகள் நலன் இழப்பீடு வழங்குவதின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை அரைகுறையாகக் கைவிடுவது இதற்குத் தீர்வாகாது. த.வெ.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, புதிய திட்டங்களை அறிவிப்பது என எதையுமே முழுமையாக ஆராயாமல் செயல்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றுவது பெரும் குறையே.

இரா. இரவிக்குமார், வியாசர்பாடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments