சமரசம் இல்லாமல் வளர்ச்சி இல்லை!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளதைப் பற்றி...
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து இரண்டரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது.
சென்னையில் மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் நிலையில், தொடர்ந்து விமானப் போக்குவரத்தை அதிகம் பேர் நாடி வருவதன் காரணமாக இரண்டாவது விமான நிலையத்தின் தேவை குறித்து 1998-ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 4,820 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என 2007-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின்னரும் தொடர்ந்து வந்த அரசுகள் விமான நிலையத்துக்கான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தனர். மற்ற இடங்களை ஒப்பிடுகையில், குறைவான குடும்பங்களே மாற்றப்பட வேண்டி இருந்ததால் இறுதியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 27,400 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று ஏகனாபுரம் கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தி 1,000 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஜோசப் விஜய் கட்சி தொடங்கிய பின்னர், முதல் போராட்டத்தை ஏகனாபுரம் மக்களுக்கு ஆதரவாக 2025 ஜனவரியில் மேற்கொண்டார்.
விமான நிலையத்துக்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்த திமுக அரசு நெல்வாய், தண்டலம், வளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 1,700 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் அரசின் நிலங்கள் 1,500 ஏக்கர் ஏற்கெனவே உள்ளன. இன்னும் சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் மாற்று இடம் தேடப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அண்மையில் கருத்து தெரிவித்திருக்கிறார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இடம் மாற்றுவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளதா என திமுக எம்.பி. பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மாநிலங்களவையில் ஜூலை 20-ஆம் தேதி பதிலளித்த விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிறுவனமான 'டிட்கோ'வுக்கு கடந்த 2025 ஏப். 7-இல் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இடத்தை மாற்றக் கோரி இதுவரை கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். விமான நிலையத்துக்கு புதிய இடத்தைத் தேர்வு செய்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
வான்வெளி அமைப்பு, காற்று வீசும் முறை, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விமானங்கள் பறக்கத் தடை, அருகில் உள்ள விமான நிலையம் போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பரந்தூர் தேர்வு செய்யப்பட்ட பிறகு 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டாலும் பல்வேறு ஒப்புதல்கள் பெற பல ஆண்டுகள் ஆகிவிடும். கட்டுமானத்துக்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும். சென்னையைச் சுற்றி கடந்த பல ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில்தான் அமைக்கப்பட்டன.
விவசாய நிலமே இல்லாமல் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் அரசு என்ன செய்யும்? தமிழகத்தில் கடந்த 10 - 15 ஆண்டுகளாக, மத்திய அரசு அல்லது மாநில அரசு சார்பில் எந்தத் திட்டம் அறிவித்தாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டம் காரணமாகவே சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்கள்தொகை அதிகரிக்கும்போது சாலைகள், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவை அத்தியாவசியமாகி விடுகின்றன. டெல்டா மாவட்டங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் இதில் சிறிய அளவில் சமரசம் செய்துகொள்ளாவிட்டால் எந்தத் திட்டத்தையுமே எதிர்காலத்தில் கொண்டுவரமுடியாது.
ஆண்டுகள் செல்லச் செல்ல திட்டத்தின் மதிப்பீடு பல்லாயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமான வால்மீகி சர்வதேச விமான நிலையம் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு கடந்த 2023 டிசம்பரில் திறக்கப்பட்டுவிட்டது.
அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் போராட்டங்களைத் தூண்டிவிடுமானால் வளர்ச்சி என்பது கானல் நீராகிவிடும். விவசாயம், அடிப்படை கட்டமைப்புகள் விவகாரத்தில் ஒரு சமநிலையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.