சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகள்: அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது குறித்து
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகள்: அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
சாட்டையைச் சுழற்றி...
சமூகத்தில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய அரசியல் கட்சிகளே தடம் மாறி தறிகெட்டுப் போகும்போது உயர்நீதிமன்றம் தலையிட வேண்டியதாகிறது. அதுவும் சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு அவதூறாக எழுதும் அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாட்டையை சுழற்றி இருக்கிறது உயர்நீதிமன்றம். அந்த நடவடிக்கையின் வீரியத்தைப் பொருத்தே நாகரிகம் பிறக்கும். அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அநாகரிகமாக யார் எழுதினாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஏ.பி. மதிவாணன், சென்னை.
Advertisement
Advertisement
நிரந்தரத் தடை
எது உண்மை, எது பொய் எனத் தெரியாத அளவுக்கு அனைத்துக் கட்சியினரும் பாகுபாடின்றி இது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். இதனால், தனி நபருக்கு இடையூறு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் அசெüகரியம் ஏற்படுகிறது. சில நேரங்களில் விரும்பத்தகாத செயல்களும் நடந்து விடுகின்றன. எனவே, உண்மையில்லாத கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். குறிப்பாக, அவர்களின் சமூக வலைதளப் பக்கத்துக்கு நிரந்தரத் தடை விதிக்கலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கடும் தண்டனை
மக்களிடையே செய்திகளை எளிதாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் துடிப்புடன் இருப்பதால், அவை ஆக்கபூர்வமான செயல்களிலிருந்து விலகி, அவதூறு பதிவுகளை வெளியிடும் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்பம் இந்த மோசமான செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதால், அவதூறுகளை விதவிதமாகப் பதிவிடுவது சுலபமாகவும் பயனாளியைக் கவரும் வகையில் உள்ளது. இதுவும் ஒருவித ஏமாற்றுச் செயலே. அவதூறு பதிவுகளை வெளியிடுவோருக்கு பாரபட்சமின்றி கடும் தண்டனை வழங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் அறிவுரை ஏற்கத்தக்கதே.
கே. ராமநாதன், மதுரை.
வரவேற்கலாம்
எல்லை மீறும் அரசியல் கட்சிகளின் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, காவல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கலாம். சமூக வலைதளப் பதிவுகளுக்கு மூக்கணாங்கயிறு அவசியம். அரசியல்வாதிகளைப் பின்பற்றி இளைய சமுதாயத்தினர் அவதூறு பதிவுகளைச் செய்வார்கள். இது சமூகத்தில் சுமுகமான பொது உரையாடலை நிகழ்த்தவிடாமல் செய்து, பொய் பரப்பும் நிலைக்குத் தள்ளும். இணையத் தொழில்நுட்பம் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் எந்த வகையில் பார்த்தாலும் வரவேற்கத்தக்கதே.
கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.
கடுமையான சட்டம்
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதும் தமக்கு வேண்டாதவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதும் இன்று அனைத்து அரசியல் கட்சிகளுமே கடைப்பிடிக்கும் பழக்கமாக மாறிவிட்டது. இதற்கென தனியாக தொழில்நுட்பப் பிரிவை (ஐடி விங்) உருவாக்கி செயலாற்றி வருகின்றனர். தற்போதைய செயல்பாடுகள் மிகவும் தரம்குறைந்து வருவது தவறான போக்கு. இதைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டி நடைமுறைகளும், புதிய சட்டங்களும் காலத்தின் கட்டாயமாகின்றன. இதற்குக் கடுமையான தண்டனைகள் தரும் சட்டங்களே இவற்றைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும்.
இராம வேல்முருகன், வலங்கைமான்.
பொறுப்புடன் பதிவு
இன்றைய நவீன காலகட்டத்தில், வெகுஜன மக்களை செய்திகள் எளிதில் சென்றடைவது சமூக வலைதளங்கள் மூலமாகத்தான். எனவே, சமூக வலைதளங்களில் கருத்துகளை பொறுப்புடன் பதிவிடுவது அவசியம். அரசியலில் பல நேரங்களில், காழ்ப்புணர்வு காரணமாக இவை மீறப்பட்டு, அநேகமாக எல்லாக் கட்சிகளுமே அவதூறுகள் பரப்புவதைக் கையாள்கின்றன. எனவே, இது போன்ற சம்பவங்களில் பாரபட்சம் காட்டாமல், அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய உயர்நீதிமன்ற அறிவுரை கட்டாயம் ஏற்கப்பட வேண்டும்.
அனன்யா, பொள்ளாச்சி.
அவசியமான அறிவுறுத்தல்
அனைத்துக் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அறிந்த பிறகாவது அவதூறுகளைப் பரப்பாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். சட்டத்துக்கு அஞ்சியாவது அதுபோல் செய்யாமல் இருப்பதற்காக உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள அச்சுறுத்தல் மிகவும் அவசியமானது. யாருக்கு பயப்படாவிட்டாலும் உச்சநீதிமன்றத்துக்குப் பயப்படுபவர்கள் இனி அவதூறுகளைப் பரப்ப மாட்டார்கள் என நம்பலாம். தேசத்தில் நடக்கும் நிகழ்வுகளைச் சரியான முறையில் கொண்டுசேர்க்க வேண்டிய சமூக ஊடகங்கள், தவறான வழியில் பயணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரகதாம்பாள், கடலூர்.
கருத்துச் சுதந்திரம் அல்ல...
சமூக வலைதளங்கள் மக்களின் கைகளில் கிடைத்துள்ள வலிமையான ஊடகம்; அதை நஞ்சாக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்; ஆனால், உண்மைக்கும் நேர்மைக்கும் மாற்று இருக்க முடியாது. பொய்யான செய்தியையும், ஆதாரமற்ற அவதூறையும் பரப்புவது கருத்துச் சுதந்திரம் அல்ல. எந்தக் கட்சியினராக இருந்தாலும் சட்டத்தை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விமர்சனம் ஜனநாயகத்தின் குரல்; அவதூறு ஜனநாயகத்தின் நஞ்சு! பகிர்வதற்கு முன் சிந்திப்போம்; நம்புவதற்கு முன் சரிபார்ப்போம்; உண்மையை மட்டுமே பகிர்வோம்.
ந. ஸ்ரீதர், மதுரை.
பொறுப்புணர்வு
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு என்ற காலம்போய் அவதூறுகள், எதிர்மறைக் கருத்துகளை பரப்புவதும் அதை வைத்து அரசியல் செய்வதும் இன்றைய காலத்தின் புதுமையான உத்தி என்கிறார்கள். இதைத் தடுத்து அவதூறுகள் பரப்பும் கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்மையும் நேர்மறை எண்ணங்களும் இந்தச் சமூகத்தில் பரவும் என்ற நம்பிக்கையுடன் உயர்நீதிமன்றம் சொல்லி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இருப்பினும், கட்சிகளும் மக்களும் தங்களின் பொறுப்புணர்ந்து நியாயமான சரியான பதிவுகளை வெளியிட வேண்டும்.
ம. சக்திவேலாயுதம், சுத்தமல்லி.
ஏற்கத்தக்கது
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகள் மிக அதிக அளவில் பதிவிடப்படுகின்றன. மக்களுக்கு தொண்டு செய்வதற்கே நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறக்கூடிய அரசியல்வாதிகள், அநாகரிகமான செயல்பாடுகளால் நாசப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. வள்ளுவன் குறளை மறந்து மாறி மாறி சேற்றை வீசிக் கொள்வதுடன் மக்களின் வரிப் பணத்தில் ஆட்சி செய்பவர்களும், ஆட்சி செய்தவர்களும் மக்களின் முகங்களில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது ஏற்கத்தக்கதே.
முருகன் சிற்றரசன், திருமுட்டம்.
அறிவுறுத்தல் தேவைதான்
நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் மிகவும் அருமையான ஒன்று. இதைப் பார்த்தாவது அவதூறுகளை அரசியல் கட்சியினர் பரப்பாமல் இருந்தால் அது மக்களிடையே நல்ல எண்ணங்களை உருவாக்க உதவும். மக்களிடம் கட்சிகள் குறித்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணியே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நீதிமன்றம் சொல்லி செய்வதைவிட கட்சிகள் தாங்களாகவே உணர்ந்தால் நல்லதுதான். அப்படி உணராததால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது; இதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்போம்.
கிருஷ்ணன், சென்னை.
மையக் கருத்து
அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதை அரசியல் விமர்சனத்தைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தாக மட்டும் பார்க்க முடியாது. நியாயமான அரசியல் விமர்சனம் மற்றும் அவதூறு சட்டவிரோத எண்ம (டிஜிட்டல்) உள்ளடக்கம் ஆகியவற்றை சட்டத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி அணுக வேண்டிய தேவை இந்த விவகாரத்தில் உள்ளது. அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு எந்தக் கட்சிக்கும் தனிச் சலுகை இருக்கக் கூடாது என்பதையே அறிவுறுத்தலின் மையக் கருத்தாக புரிந்துகொள்ளலாம்.
முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
நேர்மையான இணையவழி
சமூக வலைதளங்களில் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் ஜனநாயக அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படாமல், அனைத்துக் கட்சியினர் மீதும் நடுநிலையுடன் நடவடிக்கை எடுப்பதே நீதியின் இயல்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. காவல் துறை நடுநிலையுடன் புகார்களை விசாரிப்பதே பொதுமக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்; இணையவெளியை நேர்மையாகவும் நாகரிகமாகவும் மாற்ற உதவும்.
ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.
அவதூறு கருவி
தேவையில்லாமல் தவறான செய்தியை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பரப்புவது குற்றத்துக்குச் சமமாகும். நல்ல மனிதர்களுக்கு தவறான பெயரை ஏற்படுத்துவதற்கு இந்த சமூக வலைதளங்களை ஒரு கருவிபோல பயன்படுத்துகின்றனர். இது போன்ற சூழல் அதிகரித்துவரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் அவசியமானது. வரவேற்கத்தக்கது.
எஸ்.எஸ். தண்டாயுதபாணி, சோழவரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.