FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவையற்ற சர்ச்சை 

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதி வடிவம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:24 am IST
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதி வடிவம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்கள்தொகையில் 40 லட்சம் பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. வெளிநாட்டுக் குடியுரிமை தொடர்பாக தீர்ப்பாயத்தில் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்களின் பெயர்களும், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பதாகவும், அப்படி விடுபட்டவர்கள் ஆகஸ்ட் 30-ஆம் தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அண்டை மாநில அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தப் பதிவேட்டால் தங்கள் மாநில மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் உள்நாட்டுப் போர் மூளும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஒவைஸி போன்றவர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மக்களவையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு, அவையில் அமளி ஏற்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, மத்திய அரசுக்குத் தலைவலியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பதிவேட்டில் பெயர் இடம்பெறாவிட்டாலும், உரிய ஆதாரம் இருந்தால் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், சர்ச்சை ஓயவில்லை.
சில வரலாற்று உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பிரிவினையின்போது நாட்டின் மேற்குப் பகுதிகளில் கலவரம் வெடித்ததைப் போன்றே, அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலும் (இன்றைய வங்கதேசம்) கலவரங்கள் மூண்டன. அது தனி நாடாக அறிவிக்கப்படும் வரையில், அங்கும் காஷ்மீரைப் போன்றே பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. வங்கதேசம் உருவான பிறகு, நம்பிக்கை அடிப்படையில் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன. எல்லையில் உள்ள சில கிராமங்களில், வேலிகளை சுலபமாகத் தாண்டி ஆடு, மாடுகளைக் கடத்தி செல்லும் அவலமும் உண்டு. இதைப் பற்றி உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை எச்சரித்தும் வருகின்றனர்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பக்கத்து ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்வதைப் போல, எல்லை தாண்டி அகதிகளாகவும், ஊடுருவல்காரர்களாகவும் வங்கதேசத்தினர் உள்ளே நுழையத் தொடங்கினர். வடகிழக்கு எல்லையோர மாநிலங்களில் குடியேறினர். அதனால், மக்கள்தொகையில் பெருமளவில் மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் அந்தந்த மாநிலங்களின் கணிசமான வாக்கு வங்கியாகவும் மாறினர். 
தற்போது வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாது, தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வங்கதேச அகதிகள் ஊடுருவிவிட்டதாகவும், அவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்கத்தா-டாக்கா இடையே நல்லெண்ண அடிப்படையில் ரயில் விடப்பட்டது. ஆனால், அதன் காரணமாக, ஊடுருவல்காரர்கள் அதிகரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அந்த ரயிலும் நிறுத்தப் பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியான பாதிப்பை மட்டுமல்லாது, மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தின.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்கெனவே இருந்த மக்களின் வாழ்வாதாரம் ஊடுருவல்காரர்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 1980-களில் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் காரணமாக சில இடங்களில் கலவரங்களும் நிகழ்ந்தன. 1983-இல் அஸ்ஸாம் மக்களுக்கும், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நெல்லீ என்ற கிராமத்தைச் சுற்றி நிகழ்ந்த கலவரத்தில் 2,191 பேர் கொல்லப்பட்ட துயரமும் நிகழ்ந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1985-இல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் அஸ்ஸாம் உடன்படிக்கை' கையெழுத்தானது. அதன் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அஸ்ஸாம் கண பரிஷத்' என்ற பெயரில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். பிரபுல்லா குமார் மகந்தா மாநில முதல்வரானார்.
எனினும், தற்போது அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில், சுமார் 34 தொகுதிகளின் வெற்றி-தோல்வியை வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களே தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். அவர்களின் ஆதரவு பெற்ற அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 18 இடங்களையும், 2016 தேர்தலில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதே நிலை நீடித்தால், இன்னும் 20 ஆண்டுகளுக்குள் வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அஸ்ஸாமில் பெரும்பான்மையாகி விடும் அபாயம் இருப்பதாக, உச்சநீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த 2016 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி -அஸ்ஸாம் கண பரிஷத் கூட்டணி இந்தப் பிரச்னையை எழுப்பி, ஆட்சியையும் கைப்பற்றியது. மக்களும் அவர்களின் வாதத்திற்கு பெரும்பான்மை பலம் கொடுத்துள்ளனர். அதன் விளைவாகவே, தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் எல்லா நாட்டிலும் பிற நாட்டு அகதிகளை அனுமதிப்பது, ஜனநாயக யுகத்தின் கடமையாகிவிட்டது. ஐ.நா. சபையும் இதை வலியுறுத்துகிறது. ஆனால், அத்தகைய குடியேற்றங்கள் தங்கள் நாடுகளின் கலாசாரம், பண்பாடு போன்ற கூறுகளும், மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட எந்த நாடும் அனுமதிப்பதில்லை. 
ஆனால், நம் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகளோ, வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களையும் குடிமக்களாக மாற்ற முயலுகின்றன. இதனால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கிறது. எதற்கெல்லாமோ வெளிநாடுகளைப் பின்பற்றும் நாம், தேசபக்தியிலும், அகதிகளையும் ஊடுருவல்காரர்களையும் எதிர்கொள்ளும் அணுகுமுறையிலும் ஏன் அவர்களைப் பின்பற்றக் கூடாது? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments