இயற்கை நடைமுறை
கேரள மாநிலம் மிகப்பெரிய மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மிகப்பெரிய மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்திருக்கக்கூடிய பேரிடரா என்ற விவாதம் ஆய்வாளர்களின் மத்தியில் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இயற்கைப் பேரிடர்கள் குறித்து அறிவுரை வழங்கும் நிபுணர்களில் ஒருவரான முரளி தும்மருகுடி, 2013-ஆம் ஆண்டில், நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடர் குறித்து மலையாள மொழியில் கட்டுரை ஒன்றை எழுதினார். கேரள அரசின் உயரதிகாரிகளோ அமைச்சர்களோ அதை வாசிக்கவில்லையா, அல்லது வாசித்து விட்டு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லையா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அந்தக் கட்டுரையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெருவெள்ளம் உருவானவுடன் ஆறுகளில் நீர்மட்டம் உயர்வதால் ஆறுகளின் பக்கவாட்டு நிலங்கள் மட்டுமின்றி, தொலைவில் உள்ள நிலப்பகுதிகளும் பாதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற பெருவெள்ளம் அடிக்கடி உருவாவதில்லை. 50 முதல் 100 ஆண்டு இடைவெளியில்தான் இது உருவாகும். இடைவெளிக்காலங்களில் மக்களும் ஆட்சியாளர்களும் வெள்ள அபாயத்தை மறந்து விடுகிறார்கள். ஆனால், வெள்ளம் மறப்பதில்லை.
வெள்ளம் வராத காலங்களில், மக்கள், நதியின் கரைகளில் ஓய்வு இல்லங்கள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றைக் கட்டுவார்கள். வெள்ளம் வந்தால் இவை யாவும் அழிந்து போகும். 1924-ஆம் ஆண்டில், கேரளத்தில், அன்றைய இரண்டு அரசர்களின் ஆளுமையிலிருந்த சிறு நாடுகளை, பெருவெள்ளம் சிதைத்தது. அதை அம்மாநில மக்கள் மறந்து விட்டனர். இடுக்கியில் அணைகள் கட்டப்பட்டபின், பெரியாற்றின் கரையில் மக்கள் வீடுகளைக் கட்டி குடியேறினர்.
கடந்த 50 ஆண்டுகளில், நதிக்கரைகளில்தான் பூச்சி மருந்து தொழிற்சாலை முதல் விமான நிலையம் வரை கட்டப்பட்டு, அவை மாநிலத்தின் வளர்ச்சி என கொண்டாடப்பட்டன. ஆனால், இந்த இடங்கள் எல்லாமே வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. எனவேதான், முன்னேறிய நாடுகள் பலவற்றிலும், அடுக்குமாடிக் குடியிருப்போ, வியாபார நிறுவனமோ, தொழிற்சாலையோ கட்டுவதற்கு முன், அந்த இடத்தில் முன்பு எப்போதாவது வெள்ளப் பேரிடர் அல்லது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்கிறார்கள்.
அணைகள், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது நீரை உள்ளடக்கி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் என்பது உண்மையே. ஆனால், இது ஒரு சில ஆண்டுகளில் நிகழும். கட்டுக்கடங்காத பெருவெள்ளம் அணைகளின் நிலையை மோசமாக்கி விடும். 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும், 2011-ஆம் ஆண்டு தாய்லாந்திலும் வெள்ளம் வந்தபோது, அணைகள் வெள்ளத்தை அதிகமாக்கின. நீர்மட்டம் அணையின் கொள்ளளவை மீறும்போது, அணையைப் பாதுகாப்பதற்காக அதிக அளவு நீர் திறந்து விடப்படும். இது ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் அளவில்லா நீரேட்டத்தை ஏற்படுத்தி, நிலப்பரப்பையும் பாதிக்கும்.
ஆற்றின் கரைப்பகுதிகளில் கட்டடங்கள் இல்லாமல் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. அங்கு விவசாயம் செய்யலாம். பெருமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறும் வகையில் பயிர்க்காப்பீடு செய்யலாம். ஐரோப்பிய நகரங்கள் பலவற்றில் இந்த முறை உள்ளது. நதிக்கரைகளில், பெரிய குடியிருப்புகள் இருந்தால், மழைக்காலங்களில் மக்கள் தாங்களாகவே வெளியேறி, நீர் குறைந்தபின் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது வெளிநாடுகளில் வழக்கமான நிகழ்வே.
வெள்ளம் என்பது இயற்கைப் பேரிடர் அல்ல; இயற்கை நடைமுறை. அதிக மழைப்பொழிவினால் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும், பயிர்களுக்கும் தேவையான நீர் கிடைக்கும். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். எனவே, நீர்ப்பெருக்கையும் வெள்ளத்தையும் குறை கூறாமல் நதிநீர் செல்லும் வழிகளை ஆக்கிரமிக்காமல் வைத்திருக்க வேண்டும்.
கேரள மாநிலத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 771 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது, 87 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாநிலத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். இங்கே உள்ள 14 மாவட்டங்களில், திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 14 மாவட்டங்களிலும் பேய்மழை பொழிந்து சொல்லொணா பாதிப்புகளும், துயரங்களும் உருவாகின.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், பொருள்களையும் இழந்து, 5,645 முகாம்களில் குடியேறினார்கள். இவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து,
25 ஆயிரம்.
இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று மற்றுமொரு சுற்றுச் சூழல் ஆய்வாளரான மாதவ் காட்கில் எடுத்துக் கூறுகிறார். இவர், மத்திய அரசால் 2011-ஆம் ஆண்டு கேரளத்திற்கு அனுப்பப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்கான யோசனைகளை வழங்கியவர்.
இவரது தலைமையில் ஒன்பது நிபுணர்களைக் கொண்ட குழு சில பரிந்துரைகளை வழங்கியது. அதில், இயற்கை வளங்களை மனிதர்கள் அழிக்காதவாறு கடுமையான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் புதிய கட்டுமானங்களை உருவாக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுரைகளை நடைமுறைப்படுத்தினால், பல கட்டுமான நிறுவனங்களும், கனிம வளங்களை எடுத்து வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்பதால் அன்றைய கேரள அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.
இன்றைய நிலையில், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரளத்தின் கிழக்குப் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, நிறைய மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. பெரிய கட்டடங்கள் மனிதர்களுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுற்றுச்சூழல் சரியாக பராமரிக்கப்படாததால் விளைந்த பாதிப்புகளே இவை என்பது மாதவ் காட்கிலின் கருத்து.
மழை, வெள்ளம் தணிந்தபின் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மனோகரன் எனும் பெரியவர் அரசுக் காப்பகத்திலிருந்து ஆலப்புழாவிலுள்ள தனது பாதிக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றுள்ளார். தனது வீட்டிலிருந்து எடுத்த ஆவணங்களை, தண்ணீர் வற்றிய தனது வீட்டுத் தரையில் காயவைத்து காத்திருக்கிறார்.
கோழிக்கோடு மாவட்டம், கரந்தூரில் 19 வயது நிரம்பிய கைலாஷ் எனும் 12-ஆம் வகுப்பு மாணவன், தனது பள்ளிச் சான்றிதழ்கள் நீரில் சிதைந்து போனதால், தான் ஐ.டி.ஐ. படிக்க முடியாது என எண்ணி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
ஒரே மாதிரியான பாதிப்பை எதிர்கொள்ளும் இருவர், இருவேறு விதமாக நடந்து கொள்வது ஆச்சரியமளிக்கிறது. வயது முதிர்ந்த ஒருவர் தைரியமாக பாதிப்பை எதிர்கொள்வதும், இளம் வயது மாணவன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் புதிராக உள்ளது.
கேரளத்தின் வியாபார நகரமான கொச்சியில்தான் அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கே உள்ள வழக்குரைஞர்கள் கூட்டாக சேர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்த உணவு, சர்க்கரை மற்றும் தானிய மூட்டைகளை லாரிகளிலிருந்து இறக்கியது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. மூட்டைகளை இறக்க கூலித்தொழிலாளர்கள் இல்லை என்பதாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடல்பலத்துடன் இந்த வேலையை செய்ய முடியாது என்பதாலும், எர்ணாகுளம் மாவட்ட சட்ட ஆணையர், எம்.எம்.பஷீர், மூட்டை தூக்கும் வேலையை தனது வழக்குரைஞர்களுடன் சேர்ந்து செய்தது இனிய ஆச்சர்யம்.
இதுபோலவே, வயநாட்டில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சர்க்கரை மூட்டைகளை சுமந்து கொண்டுபோய் அரசு
நிவாரண மையங்களில் அடுக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பு மக்களும் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் தங்கியிருந்தது பலருக்கும் வியப்பளித்தது. பல மதத்தினர், வேறுபட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல சினிமா நட்சத்திரங்கள் கூட இந்தக் கூட்டத்தில் இருந்துள்ளனர்.
மழை அடங்கிய பின் முழு பாதிப்பும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறந்தவர்கள் 387 பேர்; வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டோர் 40,000 பேர்; 3,275 அரசு நிவாரண முகாம்களில் 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 39 பெரிய அணைகள் திறந்துவிடப் பட்டன; 41 நதிகள் அபாய எல்லையைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்ததால் பாதிக்கப்பட்டன. மொத்த பாதிப்பு ரூபாய் 21 ஆயிரம் கோடி 134 பாலங்கள் பாதிக்கப்பட்டன. நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்பகுதிகளில் 8,20,000 கி.மீ. சாலைகள் பாதிக்கப் பட்டன. கொச்சி மாநகரின் சர்வதேச விமான நிலையம் இரண்டு வாரம் செயல்படவில்லை. 42,000 ஹெக்டேர் விவசாய நிலம் சிதைந்து போனது. 36,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
நிவாரணப் பணியில், 60 கடற்படைப் படகுகள், 70 ராணுவ படகுகள், 25 ஹெலிகாப்டர்கள் மற்றும் 58 பேரிடர் மீட்பு அமைப்புகள் ஈடுபட்டன. நேர்மையான நடைமுறைகளைப் பின்பற்றும் கேரளத்திற்கே இந்த அளவு இழப்பு எனில், சீரற்ற நிர்வாக நடைமுறைகளைக் கொண்ட பிற மாநிலங்களில் தொடர் மழையோ, பெருவெள்ளமோ வந்தால் எந்த அளவு பாதிப்புகள் உருவாகும் என்ற கவலை பிறக்கிறது.
கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.