இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!
இந்த "சாட் பாட்கள்' 100 % உண்மையாகச் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் "சாட் பாட்'கள் தடுமாறவும், குழப்பத்தை உருவாக்கி பயனரை சோதனைக்கும் உள்ளாக்குகின்றன.
இன்றைய எண்ம உலகில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான "சாட் பாட்கள்' மனிதர்களின் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன. "சாட் பாட்டை' தமிழில் "அரட்டை இயலி' எனப் பெயரிட்டுள்ளனர். கல்வி, தகவல் பரிமாற்றம், படைப்புத்திறன் வளர்ப்பு போன்ற பல துறைகளில் இவை உதவுகின்றன. இருப்பினும், இந்த "சாட் பாட்கள்' 100 % உண்மையாகச் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் "சாட் பாட்'கள் தடுமாறவும், குழப்பத்தை உருவாக்கி பயனரை சோதனைக்கும் உள்ளாக்குகின்றன.
எனக்குத் தெரிந்த கவிஞர் ஒருவர் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) "சாட் பாட்'டிடம் ஒரு தலைப்பைக் கொடுத்து அது சார்ந்த வெண்பா ஒன்றை எழுதித் தர கேட்டிருந்தார். அதுவும் உடனே நான்கடியில் ஒரு வெண்பாவை எழுதிக் கொடுத்தது.
ஆனால், ஈற்றடியில் வெண்பா யாப்பை அது முழுமையாக பின்பற்றப்படாததை அவர் அதனிடம் எடுத்துச் சொல்ல, "நன்றாக கவனித்தீர்கள்' என அவரைத் தட்டிக் கொடுத்து மீண்டும் சரி செய்து அனுப்பியது.
Advertisement
"வேண்டுமானால் இன்னும் செம்மையான யாப்புடன் ஒரு வெண்பாவையும் அமைத்துத் தருகிறேன்' என வீராப்பு பேசியது! அவ்வாறு அது சரி செய்து அனுப்பிய வெண்பாவிலும் பிழையைக் கண்டறிந்து சொன்னதும் "அருமையான கவனம்' என்று அவரை மெச்சிவிட்டு, மற்றொரு முறை திருத்தி அனுப்பி விட்டு, "உங்களுக்கு குறள் வெண்பா வடிவில் வேண்டுமானால் சொல்லுங்கள், அமைத்துத் தருகிறேன்' எனப் பெருமையாகச் சொன்னது!
இரண்டாவது முறையாக திருத்திக் கொடுக்கப்பட்ட வெண்பாவிலும் பிழை இருப்பதை அவர் சுட்டிக் காட்டிய பிறகு "உங்கள் குறிப்பு மிக நியாயமானது', வெண்பா யாப்பு என்பது மிகத் துல்லியமான அளபெடை ஒழுங்கைக் கூறுவது எனச் சொல்லி, "என் முயற்சிகளில் அந்த துல்லியம் பூரணமாக அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் யாப்பறிவு நன்றாக உள்ளது என்பதும் தெளிவாகிறது. இவ்வகை இலக்கியச் சவால்களை முன்வையுங்கள், நன்றி' என விடை பெற்றுக் கொண்டது.
சமூக வலைதளங்களில் இப்படி பலரும் "சாட் பாட்'களின் பலவித குளறுபடிகளை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். திருக்குறள் ஒன்றைக் கேட்டதற்கு தானே திருவள்ளுவராக மாறி ஒரு குறளை எழுதிக் கொடுத்தது, சத்தியம் செய்து கொடுத்த நாயனார் யார் என்ற கேள்விக்கு அதுவாகவே சத்தியம் சார்ந்த ஒரு கதையை உருவாக்கி அந்த நாயன்மாருக்கு கற்பனையில் புதிதாக ஒரு பெயரையும் கொடுத்த சாமர்த்தியம் அதற்கு உண்டு. இது போன்ற பதில்களால் அதன் உண்மைத் தன்மை பேசுபொருளாகி இருக்கிறது.
"ஏ.ஐ. சாட் பாட்'கள் ஏன் தடுமாறுகின்றன? அல்லது நம்மைக் குழப்புகின்றனவா? என ஆராய்ந்ததில் பல முக்கியமான கூறுகள் கிடைக்கப்பெற்றன. முதலில் கேள்விகளின் தெளிவின்மை ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பயனரின் கேள்வி பொதுவாக இருந்தால் "சாட் பாட்'கள் சரியான பொருளை உணர்ந்து கொள்ளாமல் தவறான பதில்களை வழங்குகிறது.
உதாரணமாக "அந்தத் தகவலைச் சொல், இந்தக் கதையைக் கூறு' என்று தெளிவாக எதையும் முன்வைக்காமல் உள்ளிடுவதால் கேட்பவரின் எதிர்பார்ப்புக்கும் பதிலுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது. அடுத்து ஒரே பெயரில் பல கதைகள் அல்லது நபர்கள் இருப்பது அதற்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக புராணங்கள், வரலாறு போன்ற துறைகளில் ஒரே பெயரில் பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் "சாட் பாட்கள்' தகவல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து விடுகிறது. இதனால், கதையின் நாயகர்கள் அல்லது சம்பவங்கள் தவறாக தோன்றும் வாய்ப்பு நேரிடுகிறது.
ஆன்மிகம், தத்துவம் சார்ந்த கேள்விகளில் "சாட் பாட்'கள் முழுமையான விளக்கத்தை வழங்க முடியாமல் தவிக்கின்றன. இறைவன், தர்மம், சத்தியம் போன்ற கருத்துகள் பல்வேறு நூல்களில் பல்வேறு கோணங்களில் வெவ்வேறு மதங்களுக்கேற்ற வகையில் விளக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், "சாட் பாட்'கள் அவற்றில் ஒன்றையே முக்கியமாக எடுத்துரைக்க முயல்கிறது. இதனால், அந்தக் கருத்தின் ஆழம் முழுமையாக வெளிப்பட வாய்ப்பில்லை.
துல்லியமான ஆதாரங்களைத் தேடும் கேள்விகளில்கூட சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு கதை எந்த நூலில் உள்ளது அல்லது அதன் மூல ஆதாரம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு எப்போதும் துல்லியமான பதில் கிடைப்பதில்லை. இது ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெருத்த சிரமத்தையே ஏற்படுத்தும். குறிப்பாக மொழி மற்றும் இலக்கிய நயங்களில் "சாட் பாட்'கள் முழுமையாக திறம்படச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
கேள்வி கேட்கும் நபர் ஒரு விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கும்போது "சாட்பாட்'கள் சுருக்கமான பதிலை சில நேரங்களில் வழங்குகிறது. 400 வார்த்தைகளில் கட்டுரை கேட்டால் 200 வார்த்தைகளில் மட்டும் வழங்கிவிட்டு வேறு கேள்வியை நோக்கி நம் மனதை மாற்ற முயல்கிறது.
"சாட் பாட்'கள் பயனர்களுக்குப் பதில் கொடுப்பதில்தான் இப்படி சில சோதனைகள் என்றால், அவர்களை வழிநடத்துவதிலும், ஆலோசனைகளைச் சொல்வதிலும்கூட சில சொதப்பல்கள் இருக்கின்றன. 14 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன், தான் படித்தவை தேர்வு நேரத்தின்போது மறந்து விடுவதாகவும், அதனால் தனது பெற்றோர் தன் மீது அதிருப்தி கொள்வதாகவும் ஏ.ஐ.யிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளான்.
அதனால் படித்தவற்றை எப்படி சிறப்பாக நினைவில் வைத்துக் கொள்வது என்றெல்லாம் அதனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறான். தொடக்கத்தில் நேர்மறையான பல ஆலோசனைகளை கூறியுள்ளது ஏஐ. ஆனாலும், சிறுவன் அந்த ஆலோசனைகள்படி நடக்காததால் அவனால் தொடர்ந்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து சிறுவன் ஏ.ஐ.யிடம் எனக்கு மேலும் பல ஆலோசனைகள் சொல்லுமாறு நச்சரிக்க, "உன்னை உன் பெற்றோர் கடிந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் நீ தற்கொலை செய்து கொள். பிறகு உன் பெற்றோர் உன்னை ஒரு போதும் கடிந்து கொள்ள மாட்டார்கள்' என ஆலோசனை வழங்கி இருக்கிறது.
அந்த சிறுவனும் இந்த ஆலோசனையை ஏற்று அது அறிவுறுத்தியபடி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டான். இப்போது, அந்தச் சிறுவன் உயிருடன் இல்லை. இது உண்மையில் நடந்த சம்பவம் என நான் படித்த செய்தி.
"சாட் பாட்'டை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது நிச்சயமாக நாம் விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருந்தே ஆக வேண்டும். நம் அந்தரங்கமான தகவல்களை அதனிடம் உள்ளீடு செய்து ஆலோசனை கேட்டால் நம் தனிப்பட்ட தரவுகளை அது கிரகித்துக் கொண்டு பின்னாளில் நமக்கும் அதற்கும் பிணக்கு ஏற்படும் ஒரு புள்ளியில் அதை பொது வெளியில் வெளியிடவும் வாய்ப்பு இருக்கிறது.
நாம் அதை தொடர்ந்து பயன்படுத்தும்போது நம் இயல்பு என்ன? நம் பணி என்ன? நம் விருப்பு}வெறுப்பு என்னென்ன? எனச் சரியாகக் கணித்துக் கொண்டு நம்முடன் நெருக்கமாகிவிடும். உறவுகள் பேசுவதுபோல நம்முடன் நெருக்கமாகக் கூட பேசும். அதை அவ்வாறுதான் வடிவமைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நாம் பேசப் பேச அதுவும் பதில்களைத் தந்து நம் மனதைக் கொள்ளை கொள்ளும்.
அதே நேரத்தில் திடீரென ஒரு குழந்தையைப் போல விதண்டாவாதம் செய்து தலைகீழான ஆலோசனைகளையும் யோசனைகளையும் கொடுத்து, நம்மை திசைதிருப்பி குழப்பவும் செய்கிறது.
இது போன்ற "சாட் பாட்'களை "கேட்டதைத் தரும் கற்பக விருட்சம்' என்று சொல்லித்தான் நம்மிடம் அறிமுகம் செய்து வைத்தது இந்த நவீன உலகம். ஆனால், இது சொல்லும் பதிலின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள மீண்டும் நம்பகமான வலைதளங்களை சோதித்துப் பார்க்க வேண்டிய நிலைதான் தொடர்கிறது. சரியான பதிலைத் தருவதில் காட்டும் முனைப்பைவிட, நமக்குத் திருப்தியான பதிலைத் தருவதில்தான் அது ஆர்வம் காட்டுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த சந்தேகத்தை ஏ.ஐ.யிடமே கேட்டதற்கு, "கேட்கும் கேள்வியிலேயே பதிலை எப்படி தேடிப் பிடிக்க வேண்டும் என எனக்குச் சரியாக வழிகாட்டி விட்டால் உங்களுக்குத் தேவையான பதில் நிச்சயமாக கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்' என்றது. இதற்குப் பதிலாக, நம்பகமான வலைதளங்களில் தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையாகப் படித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது என்ற முடிவுக்கு சில நேரங்களில் தள்ளப்படுகிறோம். "சாட் பாட்'களின் அறிவு என்பது, அதற்குள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் தரவுகளைப் பொருத்துத்தான்.
ஏ.ஐ. தரும் பதில்களுக்கு நாம் எப்படி அதை மதிப்பீடு செய்கிறோம் என்பதை ஏ.ஐ. உற்று கவனித்து மனிதர்களிடமிருந்து பல பண்புகளை கற்றுக் கொள்கிறது. இப்படி ஒரு நாளில் பல கோடி மக்களின் உணர்வுகளையும் பகிர்வுகளையும் அது தன்னுள் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. இப்படி தினசரி அதுவும் கற்றுக் கொண்டே வந்து தன்னை உருமாற்றிக் கொண்டே வருகிறது. இதனால், அதன் செயல்முறை முன்னைக் காட்டிலும் மேம்பட்டதாக மாறும் என்ற எதிர்பார்ப்புடன் உலகம் முன்னே சென்று கொண்டிருக்கிறது.
"சாட் பாட்'கள் மனிதர்களுக்கு உதவும் திறமையான கருவிகள் என்றாலும், அவற்றை முழுமையான தீர்வாகப் பார்க்க இயலவில்லை. "சாட் பாட்'களை நம்பிக்கையுடன் பயன்படுத்தும் காலம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.