முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வினைக்கு வித்திடும் "வினை'!

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:17 PM
ஈரானிய மக்கள். - படம்: ஏபி.
பகிர்:

நாடுகளுக்கிடையே எல்லைகள், நீர், நிலப்பரப்பு பிரச்னைகள், பிராந்திய தகராறுகள், கச்சா எண்ணெய், அரிய கனிம வளங்கள், வளமான நிலங்கள் ஆக்கிரமிப்பு, அணுசக்தி ஆகியன போருக்குப் பொதுவான காரணங்களாகும். மக்களாட்சிக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி போன்ற அரசியல் காரணங்களுக்காகவும், தேசியவாத, இனக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாகவும் போர்கள் வெடிக்கின்றன.

நாட்டைக் கைப்பற்றுவதற்கு காரணம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாட்டின் மீது வேற்று நாட்டு அரசன் படையெடுப்பதும், வெல்வதும், அந்நகரை சூறையாடி, பாழ்படுத்தி அழிப்பதும், வளங்களைக் கொள்ளையடிப்பதும், மக்களைச் சிறைபிடித்து அடிமைகளாக்கி விற்பதும் அந்தக் காலத்தில் "வீரம்' எனப்பட்டது. இதன் பொருள், எல்லாக் காலங்களிலும் மக்கள் என்பவர்கள், ஓர் "உயிர்ப் பொருள்' என்ற எண்ணம், அவர்களுக்கு "வாழ்க்கை' என்ற ஒன்று உள்ளது என்கிற புரிதல் வரலாற்றில் பெரும்பாலான மன்னர்களிடம் இல்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

பண்டைய ரோமானியர்கள், நகரங்களை அழிப்பதையும், மக்களைப் படுகொலை செய்வதையும் தங்கள் பேரரசின் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் கெüரவத்தைப் பேணுவதற்கான அவசியமான கருவிகளாகக் கருதினர். கி.மு. 146-இல் ஸ்கிபியோ ஏமிலியானஸின் தலைமையிலான ரோமானியப் படைகள், வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் (தற்கால துனிசியா) அருகே அமைந்த பண்டைய நகரமான கார்தேஜை அழித்தது. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்; உயிர் பிழைத்தவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

Advertisement

ஆஸ்திரியா ஹங்கேரியின் வாரிசான ஆர்ச்டியூக் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட், அவரது மனைவி சோஃபி ஆகியோர் 28.6.1914 அன்று 19 வயதேயான போஸ்னிய செர்பிய மாணவரும், தேசியவாதியுமான காவ்ரிலோ பிரின்சிப் என்பவரால் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலையே முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. ஆஸ்திரியா ஹங்கேரி, செர்பியாவைத் தாக்க, ரஷியா தலையிட ஜெர்மனியும் இணைந்தது. இது ஐரோப்பியா முழுவதும் ஒரு பரவலான போருக்கு வழிவகுத்தது. இந்தப் போரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான படைவீரர்களும், 7 கோடிக்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வெர்சாய் அமைதி உடன்படிக்கையை மீறி ஜெர்மனி 1.9.1939 அன்று போலந்தின் மீது படையெடுத்ததே இரண்டாம் உலகப் போருக்கு உடனடித் தூண்டுகோலாக அமைந்தது. இந்தப் போர், 2.9.1945 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் சுமார் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி மற்றும் ஏகாதிபத்திய ஜப்பான் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு விரிவாக்கக் கொள்கைகளாலும், அவற்றைத் தடுக்க சர்வதேச சக்திகள் தவறியதாலும் இந்தப் போர் ஏற்பட்டது. 6.8.1945 அன்று ஹிரோஷிமா மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலையும், மூன்று நாள்களுக்குப் பிறகு நாகசாகி நகரில் நடத்தப்பட்ட மற்றோர் அணுகுண்டு வீச்சிலும் பல லட்சக்கணக்கான மக்கள் மாண்டதை யாரால் மறக்க முடியும்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பாதுகாப்புகளை ஏற்படுத்துவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆயத்தப் பணிகளுடன், உலக நாடுகளின் தூதரக மாநாட்டை 21.4.1949 முதல் 12.8.1949 வரை ஜெனீவாவில் சுவிஸ் கூட்டாட்சி மன்றம் கூட்டியது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் முக்கிய அங்கமாக போர் மற்றும் மோதல்களின்போது பொதுமக்கள், காயமடைந்த வீரர்கள் மற்றும் போர்க் கைதிகளைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பொதுமக்களை கண்ணியமாக நடத்தவும் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னர், 1977-ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தில் கூடுதல் விதிகள் சேர்க்கப்பட்டன. இந்த நெறிமுறைகள் சர்வதேச போர்க் காலங்களில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடைசெய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஆனால், உக்ரைனில் நான்கு ஆண்டு காலப் போருக்குப் பிறகும், இப்போது ஈரானில் நடைபெறும் போரின் போதும், இந்த விதிகள் மீறப்படுகின்றன. கீவ், மரியுபோல், தெஹ்ரான், டெல்அவிவ் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கார்த்தேஜியர்களைப் போலவே எதிரிகளின் கைகளில் பாதுகாப்பாக இல்லை.

உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. சுமார் 20,000 உக்ரேனியக் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. காஸôவில் 20 லட்சம் மக்கள், அதாவது மக்கள்தொகையில் 90 சதவீதம், இடம் பெயர்ந்தவர்களாகவோ அல்லது வீடற்றவர்களாகவோ உள்ளனர். எல்லா இடங்களிலும், ஒவ்வொரு போரிலும், அப்பாவி பொதுமக்களே பெரும் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

ஈரானில் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் "ஒரு சிறிய சுற்றுலாப் பயணம்' ஈரானிலுள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்திலுள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப் பள்ளி மீது "தவறுதலாக' நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது. இந்தத் துயரச் சம்பவத்தில் 40 மாணவிகள் கொல்லப்பட்டனர். இது சர்வதேச சட்டங்களையும், தார்மிக நெறிகளையும் மீறிய செயல் என போரை எதிர்க்கும் நாடுகள் கூச்சலிட்டன.

"வினையின் வந்தது, வினைக்கு விளைவாவது' போல, மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இந்த மோதலில் ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 2500-ஐ தாண்டியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வெளிப்படையான போரில் காபூல் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2022-இல் ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து தன் வல்லரசு பலத்தைக் காட்டி வருகிறது. ஒரு வேளை மூன்றாம் உலகப் போர் மூண்டால், அப்போது அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் ஆராய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.

ஒரு காலத்தில் அவற்றை வலியுறுத்திய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த ரஷியாவும், இப்போது அவற்றின் மீது அலட்சியப் பார்வையை வீசுகின்றன. ஆனால், போரில் காணப்படும் இந்தக் கட்டுப்பாடின்மையை, போரால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை பெரும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. அவை தங்கள் உள்நாட்டு பிரச்னையில் மூழ்கிப் போயுள்ளன.

இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பா முழுவதும் தென்னாப்பிரிக்கா, கனடா, பிரேஸில் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. ஐ.நா. மெüனப் பார்வையாளராகவே இருந்து வருகிறது. போரில் அனைத்தும் நியாயமானவை அல்ல; இனிமேலும் இருக்கப் போவதில்லை என்பதை கடந்தகால சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சட்டங்கள் போரைத் தடைசெய்த போதிலும், சாதாரண மக்களே எல்லா இடங்களிலும் போரில் இலக்காகி பாதிப்படைகிறார்கள்.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போரால், உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை அதிகரித்தால், யேமன் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள ஜிபூட்டி எரித்திரியா நாடுகளுக்கு இடையேவுள்ள பாப் எல்-மண்டப் நீரிணையையும் மூடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது உலக நாட்டுத் தலைவர்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இதன் மூலம் உலகின் 10 சதவீத எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், இந்த நீரிணையும் மூடப்பட்டால் உலகப் பொருளாதாரம் கரோனா தீநுண்மி பரவலின்போது சந்தித்த பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும். சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.

இப்போது உலகம் மிகவும் குழப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. போரை பேரழிவின் சின்னமாகவே உலக மக்கள் பார்க்கின்றனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் "கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்'. மனிதகுல அழிவுக்கும், பொருளாதாரச் சீரழிவுக்கும் இட்டுச் செல்லும் போர்கள் தடுக்கப்பட வேண்டும். எனவே, இதற்கு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் தீர்வாகாது. இதற்கு கடந்தகால சம்பவங்கள் சாட்சிகளாக உள்ளன. உலக மக்களின் நலன் கருதி, கண்ணியமான, இருதரப்புக்கும் (அமெரிக்கா-ஈரான்) ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்துக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments