இன்றளவும் கவனம் பெறும் விஜய் - த்ரிஷா கூட்டணியின் திரைப்படங்கள்!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... தற்போதைய தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் பற்றி...
மாண்புமிகு மாணவனாக இருந்து இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வராக உயர்ந்துள்ள ஜோசப் விஜய் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவே திகழ்கிறார் என்பதில் எவருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இருக்காது!
மிகப் பெரிய ஆளுமைகள் உலவி வந்த மாபெரும் துறைகளான சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தனது உழைப்பால் தனக்கென்று ஓர் இடத்தையும், அடையாளத்தையும் விஜய் உருவாக்கிக் கொண்டார். அவரது நடிப்புக்கும், நடனத்திற்கும், பேச்சுக்கும், குரலுக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
ஒரே தேர்தலில் கூட்டணியின்றிப் போட்டியிட்டு மாநிலத்தின் முதல்வர் அரியணையில் அவர் அமர்ந்தது போன்றதல்ல, திரையில் நடிகராக விஜய்யின் பயணம். அதற்கு சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உடன் அவர் வைத்துக்கொண்ட கூட்டணியும் ஒரு முக்கிய காரணம். இந்த வரிசையில், நாயகனாக விஜய் நடிக்க அவருடன் நாயகியாக நடிக்கும் நடிகைகளின் கூட்டணிக்கும் முக்கியத்துவம் உண்டு. இதில், விஜய் மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளியான படங்களுக்கு இன்றளவும் பெரும் வரவேற்பும் கவனமும் இருக்கிறது!
Advertisement
Advertisement
நடிகர்களாக விஜய் மற்றும் த்ரிஷாவின் நடிப்பைக் குறித்து நாம் கூர்ந்து கவனித்தால் இருவருமே புறக்கணிக்க முடியாத சிறந்த நடிகர்கள். 1992 ஆம் ஆண்டில் வெளியான நாளைய தீர்ப்பின் மூலம் விஜய் நடிகராக அறிமுகமாகி, சுமார் 10 ஆண்டுகள் கழித்தே 2002-ல் வெளியான சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷா நாயகியாக அறிமுகமானார். இயக்குநர் அமீரின் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் த்ரிஷாவின் நடிப்பு ஒரு முன்னணி நடிகைக்கான தேர்ச்சியை முழுவதுமாகப் பெற்றிருந்தது. அதன் பிறகு, சாமி, லேசா லேசா என பல வெற்றி படங்களில் நடித்திருந்த த்ரிஷா முதல்முறையாக அப்போதைய இளையதளபதி விஜய்யுடன் இணைந்தது கில்லி படத்தில்தான்
1. கில்லி - 2004
இன்றளவும், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவை விரும்பும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள படம் “கில்லி”. பொழுதுபோக்குக்கான 10 அம்சங்களும் பக்காவாகப் பொருந்திய இந்தப் படம் பெரும்பாலான 90-ஸ் மற்றும் 2 கே கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தை ஆக்கிரமித்தது என்றே சொல்லலாம். செல்போன் மூலம் ஓடிடியில் படம் பார்க்கும் வசதியுள்ள இந்தக் காலத்திலும்கூட ஞாயிற்றுக்கிழமைகளின் மாலையில் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தப் படத்தைப் பார்க்க ஆடியன்ஸ் உண்டு.
இயக்குநர் தரணி இயக்கிய இந்தப் படத்தில் வழக்கமான கமர்ஷியல் பட நாயகிகளைப் போன்று இல்லாமல் தனலட்சுமியாக நடிகை த்ரிஷாவுக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துப்பாண்டியின் வில்லத்தனமும், வித்யாசாகரின் இசையும் இந்தப் படத்தை ஒரு பக்கம் தாங்கினால், மறுபக்கம் அதே அளவு பெயர் எடுக்கும் நடிப்பையே விஜய்யும் த்ரிஷாவும் கொடுத்திருந்தனர். ”எனக்கு காரப்பொறி சாப்பிடனும்” என தனலட்சுமி கூறும் காட்சியும் சரி, அர்ஜுனரு வில்லு பாடல் பேக்ரவுண்டில் ஓட தனலட்சுமியைக் காப்பாற்றி வேலு (விஜய்) ஜீப்பில் அழைத்து வரும் காட்சியும் சரி, மீம் டெம்பிளேட் ஆகக் காலம் கடந்தும் தொடரும் அளவிற்கு வெயிட்டேஜை பெற்றுள்ளன.
இப்படத்தின் பாடல்களும், நடனங்களும், சண்டைக் காட்சிகளும், நகைச்சுவைகளும், காதல் காட்சிகளும் வெற்றிக்காகக் காத்திருந்த நடிகர் விஜய்யை முன்னணி நடிகர்கள் வரிசையில் கொண்டு வந்து சேர்த்தது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு ஒரு கம்பேக் வெற்றியைக் கொடுத்தது த்ரிஷாவுடன் முதல்முறையாக அவர் நடித்த கில்லிதான்!
2. திருப்பாச்சி - 2005
அரிவாளுக்குப் பெயர்போன திருப்பாச்சியின் அருகே ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் ஒரு அண்ணன், தனது தங்கையின் மீது கொண்ட பாசத்தினாலும், தனது தங்கையின் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் எனும் பொறுப்பினாலும் சென்னையில் அடாவடி செய்துகொண்டிருக்கும் ரௌடிகளை அழிக்கும் ஒரு நவீன நாயகக் கதைதான் இந்தத் திருப்பாச்சி!
பெயருக்கு ஏற்ற மாதிரி வசனங்களையும் காட்சிகளையும் கூராக்கி காண்போரின் நெஞ்சங்களில் இறக்கிவிட்டிருந்தார் இயக்குநர் பேரரசு. அவரது படங்களுக்கே உரிய மாடுலேஷன்கள், சண்டைக்காட்சிகள் என வரிசைகள் நீண்டாலும், காதலுக்கும், பாடலுக்கும் ருசியேற்றுவதைப்போல விஜய் - த்ரிஷா ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்திருந்தனர்.
கில்லியில் இருவருக்கும் கைகொடுத்த அப்படிப் போடு பாடலைப் போன்றே மசாலாவும் கலாட்டாவும் கலந்தவாறு “அப்பன் பண்ண தப்புல”, ”கட்டுக்கட்டு கீரக்கட்டு” போன்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தீனா, மணி சர்மா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் வழங்கியிருந்தனர். காமெடியும், பாடலும், காதலும் நடிகர்கள் த்ரிஷாவும் விஜய்யும்தான் சிறந்த திரைஜோடி என்று பாக்ஸ் ஆஃபீஸில் நிரூபித்துக் காட்டியது.
கில்லி வெளியான அடுத்த ஆண்டே (2005) பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தின் மூலம் 2 ஆவது முறையாக விஜய் - த்ரிஷா கூட்டணி அன்அப்போஸ்டில் வெற்றி பெற்று அசத்தியது.
3. ஆதி - 2006
இயக்குநர் ரமணாவின் இயக்கத்தில், விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து விஜய் - த்ரிஷா காம்பினேஷன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்த படம் “ஆதி”. கொலைகார சகோதரர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் வளர்ந்து இளைஞனாகி அவர்களைப் பழி தீர்க்கும் கதை. தன்னையொரு அநாதை என்று கருதி வாழும் நாயகன் ஆதி (விஜய்) படத்தின் உச்சகட்டத்தில்தான் தனது அத்தை மகளான நாயகி அஞ்சலி (த்ரிஷா) மற்றும் சித்தப்பா ராமசந்திரன் (நாசர்) ஆகியோர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதையே அறிகிறார். ஒருகட்டத்தில் வில்லனின் முன்னே சோஃபா போட்டு அமர்ந்து சவால் விடும் அளவுக்கு துணிச்சல் கொண்ட நாயகன், தனது குடும்பத்திற்காகப் பழி வாங்கினாரா? அத்தை மகளுடன் இணைந்தாரா? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
வித்யாசாகர் இசையில் உருவான இந்தப் படத்தின் 5 பாடல்களும் படத்திற்கு அடி சேர்த்தது. “ஒல்லி ஒல்லி இடுப்பே”, ”யே டோரா” போன்ற பாடல்கள் விஜய் - த்ரிஷாவை டாப் கிளாஸ் ஜோடியாகக் மீண்டும் சேர்த்திருந்தாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அந்தக் கூட்டணிக்குப் பெற்று தரவில்லை. மறைந்த நடிகர் விவேக்கின் காமெடி காட்சிகளும், படம் முழுக்க வரும் சண்டைக் காட்சிகள், நடனங்கள், குடும்ப எமோஷன்கள் என அடுத்தடுத்து கமர்ஷியல் எலமெண்டுகள் இந்தப் படத்தில் நிறைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றிருந்தது. அதுவரை வெற்றியை மட்டுமே கண்டிருந்த விஜய் - த்ரிஷா ஜோடியின் ரேங் கார்டில் கிரேட் குறைந்திருந்தாலும்; ”ஆனா எனக்கு இந்தப் படத்த ரொம்ப புடிக்கும்” எனக் கூறும் ரசிகர்கள் இன்றளவும் “ஆதி”-க்கு உண்டு.
4. குருவி - 2008
மூன்றாவது முயற்சி பெரியளவில் கைகொடுக்காததால், புது விதமான கதையைக் கமர்சியலில் கலந்து கம்பேக் கொடுக்கத் தங்களுக்கு முதல் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் தரணியுடனே விஜய்யும் த்ரிஷாவும் மீண்டும் கைகோர்த்தனர்.
நடிகர் விவேக்கின் காமெடி, இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையும் பாடல்களும், மூத்த நடிகர்கள் மணிவண்ணன், சரண்யா பொன்வண்ணன், சுமன், இளவரசு போன்றோரின் நடிப்பும், விஜய்யின் நடனம், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் இடம் பெற, 2008-ன் கோடை விடுமுறையில் வெளியானது “குருவி” திரைப்படம். பிரம்மாண்ட செட்டுகள், தீப்பறக்கும் வசனங்கள் படத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தாலும் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
சுவாரசியம் என்னவென்றால் இன்று சட்டப்பேரவையில் முதல்வரின் இருக்கையில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு நேர் எதிராக திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். மேலும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமும் “குருவி”தான். காலம் இப்போது இருவரையும் எதிரெதிரே அமர்த்தியிருந்தாலும் அப்போது இருவரும் ஒரு புதிய முயற்சிக்குக் கைகோத்தனர் என்பது மறுக்க முடியாதது.
இந்தப் படத்தில், வில்லனான கோச்சாவின் (சுமன்) தங்கையாக வருவார் த்ரிஷா. நாயகன் யாரென்றே தெரியாமல் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் அவரைத் தேடி அலையும் கமர்ஷியல் நாயகியாக த்ரிஷாவின் நடிப்பு இப்படத்தில் சிறந்திருந்தது. படத்தின் லவ் பர்ட்ஸ்களான விஜய் மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கும். அதற்கு, “தேன் தேன்”, “பலானது பலானது” “மொழ மொழன்னு” போன்ற பாடல்களும் சாட்சி.
5. லியோ - 2023
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்து உருவாகி 2021 பொங்கலைத் தீபாவளி ஆக்கிய “மாஸ்டர்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரின் கூட்டணியில் உருவான 2 ஆவது படம் “லியோ”. படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பும் ஆராவாரமும் களைகட்டியது. இந்தப் படத்தின் மற்றொரு அட்வாண்டேஜாக சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு நாயகியாக த்ரிஷா நடித்திருந்தார்.
இறுதியாக இருவரும் குருவி படத்தில் நடிக்கையில் இளைய தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமே இருந்தார். ஆனால், லியோ காலத்தில் இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகராகவும், தமிழ்த் திரையுலகின் முதல் நடிகராகவும் விஜய் உயர்ந்திருந்தார். எனவே, திரையில் தங்களின் நாயகனைக் காண வேண்டுமென மட்டுமே லட்சக்கணக்கான ரசிகர்களும் காத்திருந்தனர். ஆகையால், படம் வெளியானாலே ஹிட் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
அதுவரை 4 படங்களில் காதல் ஜோடியாக மட்டுமே நடித்திருந்த விஜய்யும் த்ரிஷாவும் லியோவில் முதல்முறை 40-களை எட்டிய கணவன் மனைவியாக நடித்திருந்தனர். மேலும், தங்களின் முந்தைய படங்களைபோல காதலையும் கொண்டாட்டத்தையும் வெளிக்காட்ட மசாலா பாடல்கள் இதில் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. “அன்பெனும் ஆயுதம்” எனும் ஒரு பாடல் அவர்களுக்குப் போதுமானதாக அமைந்திருந்தது. லியோ மூலம் 4 ஆவது முறையாக விஜய்யின் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
பனிமலைகள் சூழ்ந்த இடத்தில் ஒரு காபி ஷாப், அழகான வீடு, காதல் மனைவி, 2 குழந்தைகள் என ஃபீல் குட்-ன் மறு உருவமாக இந்தப் படத்தின் விஜய் - த்ரிஷாவின் காதல் போர்ஷன்கள் அமைந்திருந்தன. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.145 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பட்டியலுக்குச் சென்றிருந்தது. குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பான மனைவியாக த்ரிஷாவும், மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய கணவனாக விஜய்யும் நடித்திருந்த இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவே அமைந்திருந்தது.
முதல்வர் விஜய்யின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களும், எதிர்க்கருத்துகளும் இருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவரை அனைவருமே ஒருமுறையாவது கொண்டாடியிருப்பார்கள். அதேபோல், தனிப்பட்ட விமர்சனங்களை அகற்றினால், நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா ஒரு சிறந்த திரை ஜோடி என்பதில் ஐயம் எதுவுமில்லை. இத்தனையையும் கடந்து இத்தனை ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து அதைத் தக்கவைத்துக் கொள்வது எளிதான ஒன்றில்லை.
2005-ல் சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தற்போதைய முதல்வர் விஜய், திரையில் தனக்குப் பொருத்தமான ஜோடி த்ரிஷாதான் என அவருடன் 2 படங்களில் மட்டும் நடித்திருந்தபோதே சொல்லியிருந்தார்.
தமிழ் சினிமா உலகின் சிறந்த ஜோடிகளில் விஜய் - த்ரிஷாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு!
movies in which thalapathi vijay and trisha acted together
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.