மக்களாட்சியின் மகத்துவம்!
தேர்தல் என்பது நிர்வாகத்தைத் தேர்வு செய்யும் முறை மட்டுமல்ல, அது நாட்டின் நீண்டகால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மைல்கல் என்பதைப் பற்றி...
குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தீர்மானிக்கும் அதிகாரமே தேர்தல்.
முந்தைய தேர்தல்களில் அமைதியான முறையில் நிகழ்ந்த அதிகாரப் பகிர்வு, நாட்டின் ஜன நாயக முதிர்ச்சியை உலக அரங்கில் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. நல்லாட்சியின் இலக்கணத்தைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆழமாக வலியுறுத்துகின்றன.
நெல்லும் உயிர் அன்றே;
Advertisement
நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; (புறநானூறு 186)
மோசிகீரனாரின் இந்த வரிகள், நல்லாட்சி புரியும் தலைவரே சமூகத்தின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் உயிர்நாடி என்பதை உணர்த்துகின்றன. தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதே ஜனநாயகத்தின் அடிப்படை. தேர்தல்களின்போது பறிமுதல் செய்யப்படும் ரொக்கமும் பொருள்களும், பணபலம் இன்றும் ஒரு சவாலாக இருப்பதைக் காட்டுகின்றன. கட்சி நிதி வெளிப்படைத்தன்மை குறைவு மற்றும் வாக்காளர்களை விரைவாகச் சென்றடைய வேண்டிய கட்டாயமே தேர்தல் செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும்.
தேர்தல் என்பது நிர்வாகத்தைத் தேர்வு செய்யும் முறை மட்டுமல்ல, அது நாட்டின் நீண்டகால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மைல்கல். தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம பிரசாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், தகவல்கள் விரைவாக மக்களைச் சென்றடைகின்றன. இருப்பினும், திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்கள் வாக்காளர்களின் முடிவுகளைப் பாதிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளன.
போலிச் செய்திகள் வாக்காளர் சிந்தனையைத் திருப்பும் அபாயம் இருப்பதால், தகவல்களைச் சரிபார்த்து ஏற்கும் பழக்கம் அவசியமாகிறது. பணம் மற்றும் அதிகாரத்தைக் கடந்து சமத்துவம், சமூக நீதி போன்ற அறங்களே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை.
குறிப்பாக, முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் தகவல்களை விமர்சன ரீதியாக அணுகிப் பொறுப்பான முடிவுகளை எடுப்பது, ஜனநாயகத்தின் தரத்தை உயர்த்தும். அதீத தேர்தல் செலவினங்கள் கொள்கைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதால், தூய்மையான பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.
சர்வதேச அளவில் சில நாடுகள் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்குக் கடுமையான உச்சவரம்புகளை நிர்ணயித்துள்ளன. குறிப்பாக, ஊடக விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவுகின்றன.
தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு 'அரசு நிதியுதவி' வழங்குவது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்போது, நிதி வசதி இல்லாத தகுதியுள்ள வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
அத்துடன் அரசியல் கட்சிகளின் உள்கட்டமைப்பில் ஜனநாயக நடைமுறைகள் வலுப்பெறுவது நல்ல தலைமை உருவாக அடித்தளமாகும். தேர்தலைத் தார்மிகக் கடமையாக வாக்காளர்களும் வேட்பாளர்களும் கருதுவதே நல்ல நிர்வாகத்துக்கு வழிவகுக்கும்.
அதிக நிதி திரட்டும் திறனை வேட்பாளரின் மேலாண்மை வலிமையாகக் கருதும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவுகள் குறையும்போதுதான், அவர்களால் மக்கள் நலத் திட்டங்களைச் சமரசமின்றிச் செயல்படுத்த முடியும். நவீன தேர்தல்களில் பிரசாரத்துக்கான செலவு ஒரு சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில், தகுதியுள்ள வேட்பாளர்கள் நிதி வசதியின்றி அறியப்
படாமல் போகும் நிலை உருவாகிறது. இருப்பினும், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் சிறு நிதியுதவி போன்றவை இன்று இவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. நேரடி மக்கள் சந்திப்பும் உள்ளூர் பிரச்னைகள் சார்ந்த அணுகுமுறையும் குறைந்த செலவில் அதிக நம்பிக்கையை உருவாக்குகின்றன.
தமிழக அரசியல் வரலாறு மக்கள் சக்தியின் வலிமையை பலமுறை நிரூபித்துள்ளது. குறைந்த சொத்து மதிப்புடைய பல வேட்பாளர்கள் கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் வெற்றி பெற்றுள்ளனர். காமராஜர், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமைகளின் மக்கள் தொடர்பு அணுகுமுறை, கொள்கைகளுக்கு வலுசேர்த்ததுடன் மக்கள் நலனே முக்கியம் என்பதை மெய்ப்பித்துள்ளன.
அண்மைக்காலங்களில், குறைந்த சொத்து மதிப்புடன் போட்டியிட்டு மக்கள் ஆதரவால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உருவாவது, பணமின்றியும் வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. தேர்தல்கால தற்காலிக ஆதாயங்கள் சிலருக்கு முதன்மையாகத் தோன்றலாம். ஆனால், இத்தகைய முடிவுகள் நீண்டகால சமூக நலனைப் பாதிக்கும் "வறுமைப் பொறிக்குள்' தள்ளும் என்பதை உணர வேண்டும்.
அன்றாடத் தேவைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் வாக்காளர்களை இத்தகைய முடிவுகளுக்குத் தள்ளுகின்றன என்பதும் சமூக எதார்த்தமாகும். கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற நிரந்தரப் பயன்களே சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் நிறுத்தி வாக்களிப்பதே பொறுப்பான செயலாகும். "சி-விஜில்' போன்ற தொழில்நுட்பங்கள் முறைகேடுகளைத் தடுக்க உதவினாலும், குடிமக்களின் நேரடி ஒத்துழைப்பு இன்றி அவை முழுமை பெறாது.
முறைகேடுகளைக் கண்டறிந்தவுடன் உடனடியாகப் புகார் அளிப்பதும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் குடிமக்களின் கடமையாகும். தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரங்கள் வாக்களிப்பை ஊக்குவிப்பதுடன் முறையற்ற தூண்டுதல்களைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அரசியல் நிதி ஆதாரங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதன்மூலம் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும். விழிப்புணர்வு மிக்க வாக்காளர்களின் தெளிவான முடிவே மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். விழிப்புணர்வுடன் வாக்களிக்கப்படும்போது ஜனநாயகம் வலுவடைகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.