FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்கள் மையங்களாக வேண்டும் கிராம நூலகங்கள்

ஒருசில ஊராட்சிகளில் மட்டும் எப்படி 2,000-க்கும் அதிகமான புத்தகங்கள் வந்தன என்று விசாரித்தபோது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முயற்சி எடுத்து புத்தகங்களை வாங்கிச் சேர்த்துள்ளனர்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:20 am IST
நூலகம் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நான்கு கோடி மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 12,571 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 78,997 குக்கிராமங்கள் இருக்கின்றன; அத்தனை கிராமங்களிலும் மக்கள் வசிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஊராட்சிகளில் 1,000 மக்கள்தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. 10,000-ஐ கடந்த மக்கள்தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் தேவைகள், அதாவது, குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தந்து மதிக்கத்தக்க மரியாதையுடைய மனித வாழ்வை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி அரசுக்கு உள்ளது. இதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.

அதே நேரத்தில், கிராமங்களில் உருவாகும் வசதிகளைப் பராமரித்து பலனளிக்கும் வகையில் பயன்பாட்டில் வைத்துக் கொள்ள குடிமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானதாகும். அது குடிமக்களின் பொறுப்பும் கடமையுமாகும். கிராமங்களில் உருவாக்கப்படும் சொத்துகளை, அதாவது, வசதிகளை முறையாகச் செயல்பட வைக்க அனைத்துக் குடும்பங்களும் பொறுப்பேற்பதை உறுதி செய்ய வந்ததுதான் புதிய உள்ளாட்சி அரசு.

Advertisement

Advertisement

அந்த சொத்துகள் மக்களுக்கானது என்ற உணர்வை மக்களிடம் உருவாக்கி 'என் ஊர்- என் பொறுப்பு' என்று செயல்பட மக்களை ஒருங்கிணைத்து பங்கேற்க வைப்பது உள்ளாட்சியின் கடமையாகும். இந்தப் பணிகளையெல்லாம் செய்வதற்கு உள்ளாட்சிக்கு பல்வேறு வழிகளில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கின்றன.

ஒட்டுமொத்த மூன்றடுக்கு உள்ளாட்சி அரசில் உள்ள முதல் அடுக்கான கிராம ஊராட்சிக்கு 55% நிதியை மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன. அடுத்து 39% நிதியை ஊராட்சி ஒன்றியத்துக்கும், 6% நிதியை மாவட்ட ஊராட்சிக்கும் வழங்கப்படுகின்றன. கிராம ஊராட்சிகள் செய்ய முடியாத பணிகளை மட்டுமே ஊராட்சி ஒன்றியங்கள் தங்களுக்கு வரும் 39% நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும். அதேபோல், கிராம ஊராட்சியும், ஊராட்சி ஒன்றியங்களும் செய்ய முடியாத பணிகளைத்தான் மாவட்ட ஊராட்சி தனக்கு வரும் 6% நிதியில் செயல்படுத்த வேண்டும்.

இந்தப் புரிதலுடனெல்லாம் நம் உள்ளாட்சி அரசை வழி நடத்தவில்லை நம் தலைவர்களும் அலுவலர்களும். வரும் நிதியில் பெருமளவு கட்டுமானப் பணிகளில் செலவழிக்கும் கண்ணோட்டத்தை நம் தலைவர்களுக்கு உருவாக்கி விட்டார்கள். கிராம மேம்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம் என்றால் சாலை போடுவது, பாலம் கட்டுவது என நம் பொதுப் புத்தியில் ஏற்றி விட்டனர்.

சாலைகள், பள்ளிக்கூடங்கள், பாலங்கள், தெரு விளக்கு, குடிநீர், கட்டடங்கள் போன்றவை தேவைதான். இவை அனைத்தையும் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வும், அறிவும், அதைவிட பொறுப்பும் தேவை.

இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு தந்தால், நம் மக்களும் பிரதிநிதிகளும் ஆகச் சிறந்த திட்டங்களைக்கூட எப்படிச் சிதிலமடையச் செய்கின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தமிழ்நாடு ஊராட்சிச் சட்டம் பிரிவு 111(ஜி)-யின்படி கிராம ஊராட்சிகளே நூலகம், மற்றும் வாசிப்பு அறை, அமைத்துப் பராமரிக்கலாம் என்ற அதிகாரத்தைத் தந்துள்ளது.

ஒரு காலத்தில் நம் கிராமத்தில் உள்ள மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மாட்டு வண்டியில் புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்க வைத்தனர். இன்று சட்டத்தின்மூலம் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கான முயற்சியை ஊராட்சி மன்றத் தலைவர்கள் எடுக்க வேண்டும். இவற்றைச் செய்ய முயற்சிக்காத, இயலாத நிலையில் 2006-2007-இல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அந்த நூலகத்தை இயக்க கிராமங்களிலுள்ள படித்த தன்னார்வலர்களுக்கு பொறுப்பைத் தந்து அதற்கு மதிப்பூதியம் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. அது படித்தவர்களால் பாராட்டப்பட்ட ஒரு திட்டம்.

இன்று இந்த நூலகம் எப்படி இருக்கிறது? என்பதை ஆய்வு செய்தால் நாம் எப்படி நூலகத்தின் மகத்துவம் அறியாது அதைப் பாழாக்கி வருகிறோம் என்ற உண்மை நமக்குத் தெரியும். அன்று அந்த நூலகம் உருவாகியபோது 500 அல்லது 600 புத்தகங்களுடன் தொடங்கியது. வாசிப்பைத் தூண்டக்கூடிய அனைத்துப் புத்தகங்களும் அதில் உள்ளன. கல்வியின் முக்கியத்துவம், வாசிப்பின் அருமை தெரிந்திருந்தால் இன்று அந்த நூலகங்கள் ஒரு மக்கள் மையமாக மாறி இருக்கும். அது ஒரு மாலை நேர வாசிப்பு வட்டமாக, ஒரு கிராமச் சிந்தனைக் களமாக, கிராம விடுதலைக்களமாக, கிராம மேம்பாட்டுக்கான செயல்பாட்டுக் களமாக மாறி இருக்கும். ஆனால், இன்று நிலைமை வேறாக இருக்கிறது.

ஒரு கிராம ஊராட்சியில் அந்த நூலகம் இன்று 600 நூல்களுடன் செயலற்று குப்பைக் கிடங்காக கிடக்கிறது. ஒரு சில இடங்களில் அது செய்தித்தாள்கள் படிக்கும் இடமாக மட்டுமே இருக்கிறது. ஒருசில இடங்களில் ஊராட்சியில் உள்ள ஒருவருக்கு நூலகர் பணிக்காக ரூ.1,500 மதிப்பூதியம் வழங்கப்பட்டு அந்த நூலகம் காலையும் மாலையும் சற்று நேரம் திறந்து வைக்கப்படுகிறது. ஆனால், அங்கு எவரும் வருவதில்லை. ஒருசில இடங்களில் அந்த மதிப்பூதியம் ரூ.2,000 வழங்கப்பட்டு காலையும் மாலையும் திறந்து வைத்து நூலகத்தை மூடி சடங்காக்கி நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்களிடம் கேட்டால், இதில் யாருக்கும் அக்கறை இல்லை. படிப்பு ஆர்வமும், நூல்களை வாசிக்கும் ஆர்வமும் யாரிடமும் கிடையாது. அங்கு என்ன புத்தகங்கள் இருக்கின்றன? என்றுகூட யாருக்கும் தெரியாது எனக் கூறுகின்றனர். ஒருசிலர் கூறும்போது போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை இடம்பெறச் செய்தால் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்துகொள்ள வருவார்கள் என்றனர்.

நல்ல அற நூல்கள், ஆளுமையை வளர்த்துக்கொள்ள தேவையான புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், இளைஞர்களுக்கு அவற்றில் ஆர்வம் குறைவாக இருக்கிறது என்கின்றனர். ஒருசில ஊராட்சிகளில் 2,500-க்கும் அதிகமான புத்தகங்கள் இருப்பதாகவும், முறையாக காலையும் மாலையும் திறந்து வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இருந்தும் நூலகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

ஒருசில ஊராட்சிகளில் மட்டும் எப்படி 2,000-க்கும் அதிகமான புத்தகங்கள் வந்தன என்று விசாரித்தபோது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முயற்சி எடுத்து புத்தகங்களை வாங்கிச் சேர்த்துள்ளனர். ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில் அரசு கொடுத்தால் வாங்கிக் கொள்வோம் என்று கருதி எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. ஆண்டுதோறும் மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கொடையாக வந்த புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பலர் பெற்றுக்கொண்டு நூலகத்தின் புத்தக எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஒருசில இடங்களில் நூலகக் கட்டடத்தில் ஒரு பகுதியை புத்தகம் வைத்துக்கொள்ள பாதுகாப்பாக 'கிரில்' வைத்து அடைத்தும், மற்றொரு பகுதியை வாசிப்புக்கான பகுதியாகவும் வைத்துள்ளனர். அந்த இடங்களில் குறைந்தபட்சம் புத்தகங்களாவது பாதுகாப்பாக உள்ளன. பல இடங்களில் புத்தகங்கள் காணாமல் போய் விட்டன. நூல்கள் பாதிப்படைந்து தூசு படிந்து உபயோகத்துக்கு லாயக்கற்றதாகவும் உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்துவதை நாம் பெரும் சாதனையாகக் கூறுகிறோம். ஆனால், நம்மிடமுள்ள நூலகங்கள் எப்படியுள்ளன என்பது குறித்து கிராமத்திலுள்ள பொதுமக்களும், அதிகாரிகளும் கவலை கொள்வதில்லை. நம் மக்கள் பிரதிநிதிகளும் கவலை கொள்வதில்லை. அதன் விளைவு, பல கனவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட 12,000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இதைச் செப்பனிட பொதுமக்களிலிருந்து தன்னார்வலராக வருவோரை நியமித்து இன்று தொகுப்பூதியமாக தரும் ரூ. 2,000-ஐ மாதத்துக்கு குறைந்தது ரூ. 5,000-ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அந்த நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இது எப்போது நடைபெறும் என்றால், கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த நூலகங்களைப் பயன்படுத்தும்போது மட்டும்தான். அதை எப்படி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது? ஊரில் உள்ள ஒருசில இளைஞர்கள் தங்கள் ஊருக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று முன்வந்து நூலகத்தை எடுத்து காலை, மாலை அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டால் ஊராட்சி மன்றத் தலைவர் அதில் கவனம் செலுத்துவார். அந்த நூலகங்களை முதலில் வாசிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். அடுத்து, அதை ஒரு பயிற்சி மையமாக மாற்ற வேண்டும். அரசுப் பணிக்கு தேர்வெழுதத் தயாராகும் இளைஞர்கள் பயன்படுத்தும் சூழலுக்கு கொண்டு வரவேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதற்குப் பொறுப்பெடுத்தால் மாதம் ரூ. 2,000 மதிப்பூதியம்கூட பெற முடியும். எனவே, அது மக்கள் மையமாக மாறிவிடும். அதைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். ஆண்டுதோறும் நூல்கள் வாங்க அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படி நூல்கள் வாங்கி செயல்பட வைத்த ஊராட்சிகளும் இருக்கின்றன. சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நூலகத்தில் மாலை நேர வகுப்புக்கள் ஏழைக் குழந்தைகளுக்கு நடத்தி வருகின்றனர். இதுபோன்று கிராமங்களில் உள்ள தன்னார்வலர்கள் பொறுப்பெடுத்து செயல்படுத்தும்போது இந்த நூலகங்களை மக்கள் மையமாக மாற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments