FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வரி செலுத்துவதும் அடிப்படைக் கடமை

அரசு இயங்குவதற்கு மக்கள் செலுத்தும் வரி இன்றியமையாதது...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 6:06 am IST
வரி
பகிர்:

அரசு இயங்குவதற்கு மக்கள் செலுத்தும் வரி இன்றியமையாதது. மக்கள் வரி செலுத்துவதை நிறுத்தினால் வளர்ச்சித் திட்டங்கள் முடங்குவதைக் காட்டிலும் ஆட்சியாளர்களுக்கு அரசை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

எனவேதான், நம் நாட்டின் சுதந்திரப் போராட்டங்களின்போது, அந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக பிரிட் டிஷ் அரசுக்கு மக்கள் வரி செலுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'வரிகொடா இயக்கம்’ நடத்தப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்து 80 சுமார் ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், நமக்கான தேவைகளை நிறைவு செய்வதற்காக இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரியை மக்கள் செலுத்தாமலிருப்பது, காலதாமதம் செய்வது சரியல்ல.

Advertisement

Advertisement

தங்கள் பகுதிக்குத் தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படைத் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றித் தர வேண்டும் என எதிர்பார்க்கும் மக்கள், உள்ளாட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவது வேதனைக்குரியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரியை வசூலிக்க வீடு வீடாகச் சென்ற உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள், பல்வேறு வேலைப்பளு காரணமாகவோ அல்லது அரசியல் தலையீடு காரணமாகவோ தற்போது அவ்வாறு செய்வதில்லை. இதனால், உள்ளாட்சிகளில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சொத்து வரியை அபராதமின்றி செலுத்தலாம் என்று காலக்கெடுவை அறிவித்த பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், அதற்கான சிறப்பு முகாம்களையும் நடத்தியது.

கூடுதலாக, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இணையவழியிலும், க்யூ ஆர் கோட் வாயிலாகச் செலுத்தும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாநகராட்சிக்கான சொத்து வரி, தொழில் வரி போன்றவற்றை செலுத்துவதில் சரிபாதி மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரியை உரியகாலத்துக்குள் செலுத்தாவிடில், குடிநீர், கழிவு நீர் இணைப்பைத் துண்டிப்பது, சம்பந்தப்பட்ட வீட்டின் முன் சொத்து வரி செலுத்தாதது குறித்து அறிவிப்பு செய்வது, வீட்டில் உரிமையாளரை சங்கடப்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் எடுக்கலாம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையின் காரணமாக கிராமப்புற குடிசை வாழ் மக்கள் வரி செலுத்தாத நிலையில், அவர்களின் குடிசைக்கான கதவை கிராம ஊராட்சி பணியாளர் பறிமுதல் செய்துவிடுவார். எனினும், இது தனிமனித உரிமைமீறல் மற்றும் மனித நேயமற்ற செயல் என்பதால், இந்தக் கடும் நடவடிக்கையை கிராம உள்ளாட்சி நிர்வாகங்கள் கைவிட்டன.

போதிய நிதியின்மையின் காரணமாக பல உள்ளாட்சிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதிலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதிலும்கூட சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை வரி செலுத்த முன்வராதோர் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு முறையாக சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தாதோர் லட்சக்கணக்கில் உள்ளனர்.

சென்னைப் பெருநகரில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். தனி நபர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை முறையாகச் செலுத்துவதில்லை. இதனால், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி சுமார் ரூ.950 கோடி நிலுவையில் உள்ளது.

உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவ்வப்போது வரியை உயர்த்துவது என்பது தவறாமல் வரி செலுத்துவோரை விரக்திடையைச் செய்து அவர்களும் வரி செலுத்தாமல் இருப்பதற்கோ அல்லது தாமதமாக செலுத்துவதற்குத் தூண்டுகோலாக அமையும்.

சொத்து வரியைச் செலுத்தாதவர்கள் பெயர் விவரங்களை உள்ளாட்சியின் வலைதளத்தில் வெளியிட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, ஒரு வகையில் வரியைச் செலுத்தாதவர்கள் வரியை செலுத்தச் செய்யும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்றாலும், 100 சதவீதப் பலனை தருவது சந்தேகம்தான்.

நகர்ப்புறங்களில் செயல்படும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பிரிட்டன் நாட்டு சட்டப்படி, அந்நாட்டு அரசருக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், தற்போதைய பிரிட்டன் அரசர் சார்லஸ் தாமாக முன்வந்து இதுவரையில் சுமார் 3 கோடி பவுண்டுகளுக்கு மேலாக அரசுக்கு வரி செலுத்தி உள்ளார்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாது வரி ஏய்ப்பு செய்யத் திட்டமிடும் நம் நாட்டின் பிரபலங்கள், குறிப்பாக தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உள்ளாட்சிகளுக்கு மக்களிடமிருந்து பெறவேண்டிய வரியை வசூலிக்க நிர்வாக ரீதியான, சட்டப்படியான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் அதிதீவிரமாக மேற்கொண்டால் மட்டுமே உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்கமுடியும்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துவதும் நாட்டுப்பற்றை உணர்த்தும் ஓர் உன்னதச் செயல் என்பதை உணர்ந்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை செலுத்த மக்கள் முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments