சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் 4 மடங்கு சொத்து வரி உயர்ந்ததாக மக்கள் குற்றச்சாட்டும், மாநகராட்சி பதிலும்...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி உள்ளது. சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய் மூலமே, சென்னைக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான குப்பை அகற்றுதல், மின் விளக்குகள், சாலைகள், பூங்காக்கள் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
உதாரணமாக, சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ. 28,000 விதிக்கப்பட்டுள்ளதாக் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எந்த வித காரணமும் இன்றி, முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது என்று இணையத்தில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
குறைவாகவோ அல்லது தவறாகவோ கணக்கிடப்பட்டு சொத்து வரி செலுத்தி வந்த சொத்தின் உரிமையாளர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள் தரவுகள், பிற அரசுத் தரவுகள் மற்றும் உரிமையாளர்கலின் சுய அறிவிப்பு ஆகியவற்றின் மூலம் பரப்பளவு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பைப் பெற்ற 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிருப்தி
சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கமெண்டில் சென்னை மக்கள் தங்கள் சொத்து வரி உயர்வு தொடர்பான புகார்களை பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒருவர், தான் இரண்டு ஆண்டுக்கு முன்புதான் சொத்து வாங்கினேன், அரசு அதிகாரிதான் அளவிட்டார். கடந்த அரையாண்டில் ரூ. 4,480 செலுத்தினேன், தற்போது ரூ. 11,330 வந்துள்ளது. சுமார் 250 சதவிகிதம் உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Property tax in Chennai hiked fourfold! People in shock!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.