FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காசநோய் தடுப்புக் காவலர்கள்

காசநோய் எனும் பெருந்துயருக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்கும் இந்த மெளன வீரர்களைப் பற்றி...

31 ஆகஸ்ட் 2026, 4:38 am IST
பகிர்:

விடியற்காலையில் இருள் விலகும் முன்பே, தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் ஓர் ஆண் பணியாளர் அல்லது பெண் பணியாளர் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

அவர் செல்லும் இடம் ஒரு காசநோயாளியின் வீடு. அங்கே அவர் காத்திருப்பது வெறும் மாத்திரைகளுக்கு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அச்சமும், சமூகப் புறக்கணிப்பின் வலியும் ஆகும். அந்தப் பணியாளர் அந்த வலியைப் புரிந்து கொண்டு, அமைதியாக நோயாளியின் அருகில் அமர்ந்து, மாத்திரையை நேரடியாகக் கண்முன் வைத்துச் சாப்பிடச் செய்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் புறப்படுகிறார். இது ஒரு நாளின் கதை அல்ல; 25 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காசநோய் களப் பணியாளர்களின் ஓசையற்ற பணியாகும்.

சுகாதாரத் துறை கட்டமைப்பின் மேலிருந்து பார்க்கும்போது காசநோய் ஒழிப்புத் திட்டம் அரசு அலுவலகங்களின் கொள்கைகளாகவும், புள்ளிவிவரங்களாகவும் மட்டுமே தெரியலாம். ஆனால், அந்தக் கொள்கைகள் நிஜமாகும் இடம், வீடு வீடாகச் செல்லும் இந்தப் பணியாளர்களின் செயல்பாட்டில்தான் உள்ளது. நோயாளியைக் கண்டறிவது, தொடர்ந்து மருந்து சாப்பிடச் செய்வது, குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு அளிப்பது மற்றும் சமூக அவமானத்தால் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு மன உறுதி அளிப்பது ஆகியவை இவர்களின் தினசரி பணியாகும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் தற்போது 1,900-க்கும் மேற்பட்ட காசநோய் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பணியில் தங்களை அர்ப்பணித்துள்ளனர். இளமைப் பருவத்தில் தொடங்கிய இப்பணி, முதுமையின் விளிம்பை நோக்கிச் செல்லும் தருணத்திலும் 'ஒப்பந்த ஊழியர்' என்ற அடையாளத்தையே சுமந்து செல்கிறது. சிகிச்சை பெறாத ஒரு காசநோயாளியிடமிருந்து சராசரியாக ஒன்று முதல் பத்து பேர் வரை இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதாவது, ஒரு நோயாளியைக் கண்டறியத் தவறினால், அது ஒரு தனி மனிதனின் நோய் அல்ல; ஒரு முழுக் குடும்பத்தையும், ஒரு தெருவையும், ஒரு ஊரையும் விழுங்கக்கூடிய அழிவின் தொடக்கமாக மாறிவிடும்.

இந்த அமைதியான ஆபத்தை, வெடிக்கும் முன்பே கண்டறிந்து, முளையிலேயே கிள்ளி எறிபவர்கள்தான் காசநோய் களப் பணியாளர்கள். ஒவ்வொரு வீட்டு விசாரணையிலும், ஒவ்வொரு மாதிரி சேகரிப்பிலும், அவர்கள் உண்மையில் செய்வது ஒரு நோயாளியைக் குணப்படுத்துவது மட்டுமல்ல; அந்த நோயாளியிடமிருந்து பரவக்கூடிய பத்து புதிய தொற்றுகளை, பத்து புதிய சோகங்களை, முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதாகும். இந்தப் பணியாளர்களின் கோரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல; அவை அடிப்படை நியாயத்தை மட்டுமே கேட்பவை. 25 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி குரல் எழுப்பியும், இன்றும் அவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே தொடர்கிறார்கள்.

முன்பு வழங்கப்பட்ட கூடுதல் ஊதிய உயர்வுகளில் ஏற்பட்ட முடக்கம், பணியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட வேதனையானது பாதுகாப்பின்மையாகும். கொடிய தொற்றுநோய்ச் சூழலில் பணிபுரியும் இவர்களில் யாரேனும் பணியின்போது உயிரிழந்தால், அந்தக் குடும்பத்துக்கு எந்தவித அரசு நிவாரணமும் இல்லை.

நோயாளிகளுடன் நேரடியாகப் பணியாற்றுவதால் தொற்று ஏற்படும் அபாயம் மிக அதிகமாக இருந்தும், நிரந்தரப் பணியாளர்களுக்கு உள்ள முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

பெண் பணியாளர்கள் மகப்பேறு காலத்திலும் பணிச் சுமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். குடும்பத்தையும் பணியையும் ஒருங்கே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில், அவர்களுக்கான அடிப்படை ஓய்வு உரிமைகூட உறுதி செய்யப்படவில்லை. ஒப்பந்தப் பணியில் தொடர்ந்து பணியாற்றும் இந்தப் பணியாளர்கள் பலரும் தங்களது சொந்த வாழ்க்கையையே காசநோய்த் துறைக்காக ஒதுக்கியுள்ளனர்.

திருமணம் தாமதமாகக் கூடும், பிள்ளைகளின் படிப்புக்குக் கடன் வாங்க வேண்டியிருக்கும், முதுமையில் ஓய்வூதியம் இல்லாத நிலையில் எதிர்காலம் குறித்த கவலை நிரந்தரமாகத் தொடரும்; இவை அனைத்தும் ஒரு சுகாதாரப் போராளியின் அன்றாட மனநிலையாக மாறிவிட்டன.

இந்த நிலையை ஆழமாகச் சிந்திக்கும்போது ஒரு கேள்வி எழுகிறது: சுதந்திர இந்தியாவில் ஒரே பணியைச் செய்யும் இருவருக்கு ஒருவருக்கு நிரந்தரப் பணியும், மற்றவருக்கு ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியமும் வழங்குவது எந்த வகையில் நியாயம்? 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற அடிப்படையில் பார்த்தால், இந்த வேறுபாட்டை முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது.

ஒரே அரசு அமைப்பில், ஒரே பணியிடத்தில், ஒரே பொறுப்பை நிறைவேற்றும் இருவருக்கு இடையே இத்தகைய வேறுபாடு நீடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.தங்களது இளமைக் காலத்தையும், உழைப்பையும், உடல்நலனையும் காசநோய் ஒழிப்பு எனும் தேசிய இலக்குக்காக அர்ப்பணித்த இந்தப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டிய தருணம் இதுவாகும். பணி நிரந்தரம், சம ஊதியம், உயிர் உத்தரவாதம், மருத்துவ விடுப்பு, மகப்பேறு ஊதியத்துடன் விடுப்பு ஆகியவை சலுகைகள் அல்ல; மாறாக உழைப்புக்குரிய அடிப்படை உரிமைகளாகும்.

இவற்றை வழங்குவதன்மூலம் ஒரு தொழிலாளர் பிரிவினரின் நம்பிக்கையை மட்டும் அரசு காக்கவில்லை; காசநோயற்ற தமிழகம் என்ற பெரும் இலக்கை நோக்கிய பயணத்தையும் உறுதிப்படுத்தும். தமிழக அரசு இந்த நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, காசநோய் எனும் பெருந்துயருக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்கும் இந்த மெளன வீரர்களுக்கு உரிய நல்வாழ்வை வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments