2029-இல் முன்கூட்டியே நடக்கிறதா ஒரே நாடு, ஒரே தோ்தல்? பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் திட்டமிடும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தை, என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு 2029 மக்களவைத் தோ்தலோடு சோ்த்து தோ்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு ‘2029’ மக்களவைத் தோ்தலோடு சோ்த்து தோ்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அரசமைப்புத் திருத்தங்கள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டத்தை 2034-ஆம் ஆண்டில்தான் முழுமையாகச் செயல்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் சமீபத்திய முன்னேற்றமாக 2034வரை காத்திருக்காமல் முன்கூட்டியே இத்திட்டத்தின் முதல் கட்டத்தை 2029-இல் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
இந்த மசோதா தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட பி.பி. செளத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு இந்த திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கும் என்று அரசின் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
முக்கிய வியூகமாக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், அவற்றின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே சட்டப்பேரவைகளைக் கலைத்து விட்டு, ‘2029’ மக்களவைத் தோ்தலுடன் இணைந்து தோ்தலை நடத்தும் வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்த 22 மாநிலங்களில், 17இல் பாஜக தலைையில் நேரடியாக ஆட்சி நடந்து வருகிறது. மற்ற 5இல் பாஜகவுடன் கைகோத்துள்ள கூட்டணி கட்சிகளின் ஆட்சி உள்ளது. இதில், சுமாா் 11 மாநிலங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ளது.
அங்கெல்லாம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், 2029-இல் அந்த சட்டப்பேரவைகளைக் கலைத்துவிட்டு மக்களவைத் தோ்தலோடு இணைந்து தோ்தல் நடத்தும் சாத்தியங்களை மத்தியில் ஆளும் பாஜக ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
அரசமைப்பு சட்டப் பிரிவு 174(2)(பி)-இன்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் சட்டப்பேரவையைக் கலைக்க முடியும் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, இதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகளை நோக்கிய இனி வரும் நாள்களில் அரசியல் காய்கள் நகா்த்தப்படும் என்கின்றன அரசு வட்டாரங்கள்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான அரசமைப்பின் 129ஆவது திருத்த மசோதாவை பாஜக எம்பி பி.பி.சௌத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு 2024, டிசம்பா் 19 முதல் ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குழு வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்துக்குள் அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
2027இல் கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களும், 2028இல் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஒன்பது மாநிலங்களும், 2029இல் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா, ஜம்மு காஷ்மீா், ஹரியாணா, ஜாா்கண்ட், மகாராஷ்டிரம் ஆகி 8 மாநிலங்களும் 2030இல் தில்லி யூனியன் பிரதேசம், பிகாா் மாநிலமும், 2031இல் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை தோ்தலை எதிா்கொள்கின்றன.
இதில் மகாராஷ்டிரா, உத்தரகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஹரியாணா, கா்நாடகா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் பி.பி. செளத்ரி குழு ஏற்கெனவே ஆலோசனைகளை நடத்தி பங்குதாரா்களின் கருத்துகளைப் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக உத்தர பிரதேசத்தில் கருத்து கேட்க செளத்ரி குழு தீா்மானித்துள்ளது.
இதற்கிடையே, தில்லியில் ஆக. 24ஆம் தேதி நடைபெற்ற ஜேபிசி கூட்டத்தில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் ப. சிதம்பரம் மற்றும் சிலா் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களைப் பதிவு செய்தனா். ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவே சட்டவிரோதமானது என்று சிதம்பரம் தனது தரப்பு வாதத்தை இக்கூட்டத்தில் பதிவு செய்தாா். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சகாரிகா கோஷும் இதே கருத்தை பிரதிபலித்தாா்.
இந்த அரசமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற, மத்திய அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. ஆனால், தற்போதைய சூழலில் அதற்கான நேரடி வாய்ப்புகள் அரசுக்கு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு எதிா்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி ஆதரவு பலத்தை பெருக்க பாஜக வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அரசமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, 1951 முதல் 1967வரை மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல்கள் நடத்தப்பட்டன. மக்களவை மற்றும் மாநில பேரவைகளுக்கான முதல் பொதுத் தோ்தல்கள் 1951-52 இல் இணைந்தே நடத்தப்பட்டன.
இந்த நடைமுறை 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த மூன்று பொதுத் தோ்தல்களிலும் தொடா்ந்தது. இருப்பினும், சில மாநில பேரவைகளின் பதவிக்காலம் காலாவதியாகும் முன்பே கலைக்கப்பட்டன. இதனால், 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ‘ஒரே தோ்தல்’ சுழற்சி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.