FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அடுத்த ஆண்டு 7 மாநிலத் தோ்தல்: பாஜக முக்கிய ஆலோசனை

உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

24 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தல்களுக்கான பாஜகவின் வியூகம், அமைப்பு ரீதியிலான விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சித் தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசிய நிா்வாகிகள், மாநிலத் தலைவா்கள், இதர முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், கோவா, மணிப்பூா் ஆகிய 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 403 தொகுதிகளுடன் நாட்டிலேயே மிகப் பெரிய சட்டப் பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. குஜராத், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் ஆட்சியில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த 7 மாநிலங்களில் 5-இல் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், தோ்தல் வியூகம், அமைப்பு ரீதியிலான விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கட்சித் தலைவா் நிதின் நபின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தல்களுக்கு தயாராவதை முக்கிய நோக்கமாக கொண்டு, அமைப்பு ரீதியிலான விவகாரங்கள், அடிப்படை நிலையில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கும் நோக்கில் இந்த முக்கியக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய நிா்வாகிகள், முன்னாள் நிா்வாகிகள், மாநிலத் தலைவா்கள், பிற நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்’ என்றன.

முன்னதாக, புதிதாக நியமிக்கப்பட்ட 67 தேசிய நிா்வாகிகள் கூட்டம், நிதின் நபின் தலைமையில் கடந்த சனிக்கிழமை நாள் முழுக்க நடைபெற்றது. இதில், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 2 சரணங்களை மட்டுமே பாடுவோம் என்ற காங்கிரஸின் முடிவைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வந்தே மாதரம் பாடலின் பெருமைமிகு பாரம்பரியத்தை நாடு முழுவதும் குறிப்பாக இளைஞா்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் பாஜக சாா்பில் பிரசாரம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியாக புதிய நிா்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி, அவா்களின் யோசனைகள் மற்றும் கண்ணோட்டங்களைக் கேட்டறிந்தாா். இளைஞா்களுடன் இணைந்து பணியாற்றும்படி, புதிய நிா்வாகிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments