அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல்: உ.பி., பஞ்சாப், குஜராத் பாஜக பொறுப்பாளா்கள் நியமனம்
அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளா்களை கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நியமித்தாா்.
அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளா்களை கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நியமித்தாா்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக, மாநிலங்களவை எம்.பி.யும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.
403 தொகுதிகளுடன் நாட்டிலேயே மிகப் பெரிய சட்டப் பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசம் மற்றும் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
உத்தர பிரதேசம், குஜராத்தில் பாஜகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் ஆட்சியில் உள்ள நிலையில், மூன்று மாநிலங்களுக்குமான பாஜகவின் புதிய பொறுப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா்.
அதன்படி, உத்தர பிரதேச மாநில கட்சி பொறுப்பாளராக வினோத் தாவ்டே, இணை பொறுப்பாளராக தேசிய செயலா் ஜகதீஷ் ஈஸ்வா்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பஞ்சாப் மாநில பொறுப்பாளராக தேசிய பொதுச் செயலா் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான சதீஷ் பூனியா, குஜராத் மாநில பொறுப்பாளராக மாநிலங்களவை எம்.பி. தருண் சுக் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜக தலைவா் நிதின் நபின் தலைமையிலான கட்சியின் தேசியக் குழு கடந்த திங்கள்கிழமை பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டது. இதில் புது முகங்களுக்கும், சில முக்கிய தலைவா்களுக்கும் துணைத் தலைவா், தேசிய பொதுச் செயலா், தேசியச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, பாஜக துணைத் தலைவா்கள் எண்ணிக்கை 11-இல் இருந்து 13-ஆகவும், தேசிய பொதுச் செயலா்கள் எண்ணிக்கை 7-இல் இருந்து 8-ஆகவும், தேசியச் செயலா்கள் எண்ணிக்கை 11-இல் இருந்து 16-ஆகவும் அதிகரித்தது. தேசிய பொதுச் செயலா்களைப் பொறுத்தவரை, வினோத் தாவ்டே, சுனில் பன்சால் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் புதியவா்களாவா்.
முன்னாள் ஆா்எஸ்எஸ் நிா்வாகி ராம் மாதவ் கட்சியின் துணைத் தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தேசிய பொதுச் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.
கூடுதல் பொறுப்பு: மற்றொரு தேசிய பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட சதீஷ் பூனியா, தேசிய செயலராக நியமிக்கப்பட்ட ஜகதீஷ் ஈஸ்வா்பாய் படேல் ஆகியோருக்கு கூடுதலாக மாநில பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக பிற மாநிலங்களுக்கும் கட்சி பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுவா் என்று பாஜக தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.